இந்தியா சுதந்திர வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத கருப்பு நாட்களில் ஒன்று ஏப்ரல் 13. ஏனென்றால், 103 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் ஜாலியன்வாலா பாக் இடத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஜென்ரல் டையர் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஜாலியன்வாலா பாக் பகுதியில் கூடியிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களிடம் இருந்த குண்டுகள் தீரும் வரை அவர்கள் சுட்டனர்.  இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுமார் 370 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 1000த்திற்கும் மேற்பட்ட நபர்கள் காயம் அடைந்தனர். 


1919ஆம் ஆண்டு ஜாலியன் வாலா பாக் சம்பவத்திற்கு முன்பாக பிரிட்டிஷ் அரசு ரௌலத் சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசு எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் யாரை வேண்டுமென்றால் கைது செய்ய முடியும். எனவே இந்தச் சட்டம் இந்திய சுதந்திர போராட்டத்தை தடுக்கும் வகையில் அமைந்தது. இதை எதிர்த்து காந்தியடிகள் சத்யாகிரக போராட்டம் செய்தார். இந்தச் சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக பஞ்சாப்பில் சத்யபால் மற்றும் சைஃபுதுதின் கிட்ச்ளூ ஆகிய இருவரும் போராட்டம் நடத்தினர். அவர்களை பிரிட்டிஷ் காவல்துறை கைது செய்தது. மேலும்  இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. 




அப்போது பஞ்சாப் ஆளுநராக இருந்த ஜென்ரல் ஓ டையர் பல முக்கியமான நடவடிக்கைகளை பஞ்சாப்பில் எடுத்தார். அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. குறிப்பாக அவர் இந்தியர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது. அவர் பிரிட்டிஷ் ஆட்சியின் மேன் ஆன் தி ஸ்பாட் கொள்கையை சரியாக பயன்படுத்தினார். மேலும் பிரிட்டிஷ் அரசு நினைத்த விஷயங்களை சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதாக கூறி எடுத்தார். அவருடைய ஆளுநர் காலம் பஞ்சாப்பில் பல மறுக்க முடியாத நினைவுகளை இந்தியர்களுக்கு தந்தது. 


இந்திய சுதந்திர வரலாற்றில் பஞ்சாப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பெரிதும் முக்கியமானவை. அதன்காரணமாகவே ஜாலியன் வாலா பாக் சம்பவம் தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் தலைமையில் ஒரு தனி குழு அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு ஹண்டர் கமிஷனை நியமித்திருந்தாலும் காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜாலியன் வாலா பாக் சம்பவத்திற்கான இந்தியாவின் எதிர்ப்பு மிகவும் ஆழமாக அமைந்தது. ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய நைட்ஹூட் பட்டத்தை துறந்தார். 




இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிள் தன்னுடைய துயரத்தை பதிவு செய்தார். அவர் இந்த சம்பவத்தை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் துயரமான சம்பவம் என்று கூறியிருந்தார். ஜாலியன் வாலா பாக் சம்பவம் இந்திய வரலாற்றில் எப்போதும் நினைத்து பார்க்க முடியாத ஒரு சம்பவமாக தற்போதும் உள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாள் நம்மை எப்போதும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.