இன்று அக்டோபர் 7. பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தை அலங்கரித்து வருகிறார். 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், பிறகு ஏழு ஆண்டுகள் பாரத பிரதமராகவும்.


இதுவரை தன் தலைமையில் சந்தித்த எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்ததே இல்லை என்ற அபூர்வ சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகிறார் பிரதமர் மோடி. ஆம், 2002, 2007 மற்றும் 2012 குஜராத் சட்டசபை தேர்தல், 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல் என மொத்தம் 5 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி, இன்றைய இந்திய அரசியலின் மகா சக்கரவர்த்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றிகள் இவர் மீது இந்தியர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாக நம் கண் முன் நிற்கிறது.


கடந்த 7 ஆண்டுகளில் மோடியால் பல பிற மாநில தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி இன்று 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது வேறு கணக்கு.


ஆக, இதுவரை நேரடியாக தான் சந்தித்த எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்ததே இல்லை என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கும் மோடிக்கு, நித்ய விஜயமாக அது தொடரும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.


இந்த 20 ஆண்டுக்கால முதல்வர், பிரதமர் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால் பிரதமர் மோடியின் 35 ஆண்டுக்கால அரசியல் உழைப்பு இருக்கிறது. குஜராத் முதல்வராகும் வரை கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் மோடிக்கு ஒரு நிரந்தர வீடோ, முகவரியோ இல்லை. ஏன் ஒரு வங்கிக்கணக்கு கூட அவர் பெயரில் இருந்தது இல்லை. கிட்டத்தட்ட லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள், பா.ஜ.க-வினர் வீடுகளுக்கு இந்த 35 ஆண்டுகளில் சென்று, தங்கி, உணவருந்தி, அவர்களுடன் பழகி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அமைப்புகளை வளர்த்தெடுத்த கர்மயோகி இவர். இன்று தலைவராக வர துடிக்கும் பல தலைவர்களுக்கும் மோடிக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மக்களிடம் நேரடியாக  சென்று படித்த அனுபவ பாடம் மட்டுமே. 35 ஆண்டுகள் விளிம்பு நிலை மக்களுடன் பழகி, அவர்கள் சுக துக்கங்களை அறிந்த ஒரு மகத்தான தலைவர் பிரதமர் மோடி. ஆர்.எஸ்.எஸ் பிரச்சாகராக(முழு நேர தொண்டராக) தன் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதால், தன் குடும்பத்துடனும் அவர் பெரிதாக நாட்களை செலவழிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




தான் பிரதமர் ஆன உடன் இந்தியா முழுவதும் பிரதானப்படுத்திய முக்கிய திட்டங்களை கவனித்தால் அவரின் அனுபவமும், ஏழை நடுத்தர மக்கள் குறித்த புரிதலும் நமக்கு புலப்படும். அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி, அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு, 12 ரூபாயில் விபத்துக்காப்பீடு திட்டம், 365 ரூபாயில் உயிர் காப்பீடு திட்டம் என பெரும்பான்மை பொதுஜனம் ஆடம்பரம் என கருதி வந்த அனைத்தையும், இந்தியர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமரான மறு நொடியே முடிவெடுத்து விட்டார். கிட்டத்தட்ட கடந்த 7 ஆண்டுகளில் நூறு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இத்திட்டங்களால் பயனடைந்ததை கண்கூடாக  நாம் இன்று பார்க்கிறோம்.


விளிம்பு நிலை மக்களை பற்றி புரிதல் இல்லாத எந்த தலைவரும் இதுபோன்ற திட்டங்களை யோசித்து கூட இருக்க முடியாது. திட்டம் தீட்டுவதில் மட்டும் அல்ல, திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரதமர் மோடி வல்லவர் என இத்திட்டங்களின் பிரம்மாண்ட வெற்றியே நமக்கு எடுத்துரைக்கிறது. இதுவரை 12 கோடி கழிப்பறைகள், 2 கோடி இலவச வீடுகள், 4 கோடி புதிய மின் இணைப்புகள், 4 கோடி வீடுகளில் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் என ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண் என்பது போல் செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி.


1987-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பா.ஜ.க-விற்கு அனுப்பப்படுகிறார் நரேந்திர மோடி. அந்த ஆண்டில் இருந்து தன் டீமை உருவாக்குகிறார். தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அப்போதில் இருந்து டீம் மோடியில் இருப்பவர்கள். மோடியை பொருத்தவரை தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் ஊக்கப்படுத்தி, வேலைகளை கச்சிதமாக வாங்கி தான் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர். அந்த அணுகுமுறையே இன்று பிரதமர் அலுவலகம் வரை தொடர்கிறது என அவரை தொடர்ந்து கவனிப்பவர்கள் கருதுகின்றனர்.


குஜராத்தில் கேசுபாய் பட்டேல், ஷங்கர் சிங் வாகேலா, அசோக் பட் போன்ற மிக மூத்த தலைவர்கள் இருந்தாலும் மோடியின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளது. காரணம், அரசியல் கணக்குகளையும், ஜாதிய கட்டமைப்பையும் மற்ற தலைவர்களை காட்டிலும் கச்சிதமாக உள்வாங்கும் திறமை கொண்டவராக மோடி இருந்தார். அது மட்டுமின்றி, தொழில்நுட்பத்தை அந்த காலத்திலேயே பயன்படுத்த தொடங்கி அதை ஒரு அரசியல் சாதனமாக மாற்றினார். குஜராத்தில் இருந்த அனைத்து முக்கிய மத குருமார்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைவரிடமும் தான் பிரச்சாகராக ஆன 1987-ஆம் ஆண்டு முதலே தொடர்புகளை வளர்க்க தொடங்கி அது பின்னாளில் அவருக்கு மிகப்பெரிய பலமாக உருமாறியது.


குஜராத்தில் இவ்வாறு நுட்பமாக இயங்கி நரேந்திர மோடி தேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டு 1995-ஆம் ஆண்டு டெல்லிக்கு அனுப்பப்படுகிறார். அது அவருக்கு இந்தியா முழுவதும் பா.ஜ.க-வில் ஒரு மிகப்பெரிய வட்டத்தை ஏற்படுத்தி தருகிறது. குஜராத்தில் தான் செய்த நெட்வொர்க்கிங் பார்முலாவை அப்படியே டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தினார் மோடி.


2001-ஆம் ஆண்டுவாக்கில் குஜராத்தில் கேசுபாய் பட்டேல் குஜராத் முதல்வராக சோபிக்க முடியாமல் போய் சபர்மதி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைகிறது. அதே சமயம் வரலாறு காணாத குஜராத் பூகம்பமும் வந்து ஆட்டிப்படைக்க புதிய தலைமையை நோக்கி குஜராத் பா.ஜ.க காய் நகர்த்தத் துவங்கியது.


2001-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்ததால், குஜராத் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ஸ்வயம்சேவகர்களை ஒருங்கிணைத்து ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை மோடி ஆகஸ்டு மாதம் ஏற்பாடு செய்தார்.


அதன் பிறகு, அக்டோபர் 7-ஆம் தேதி அதே 2001-ஆம் ஆண்டு வாஜ்பாய், அத்வானி ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார்.


அடுத்த ஆண்டே சட்டசபை தேர்தலில் முன்கூட்டியே நடத்தி வெற்றி பெற்றார். 2007, 2012-ஆம் ஆண்டு தேர்தல்களிலும் வெற்றி. 2009-ஆம் ஆண்டு தனது அரசியல் குருவான அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு ஆத்மார்த்தமாக இந்தியா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


அடுத்து 2014-ஆம் ஆண்டு தானே பிரதமர் வேட்பாளராகி, தற்போது 2019 தேர்தலிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்று 7 ஆண்டுகள் பிரதமராகவும், 20 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் முதல்வர் மற்றும் பிரதமராகவும் பணியாற்றி வருகிறார்.


பிரதமர் மோடி பா.ஜ.க-வின் அடிப்படை கொள்கைகளைக்கு செயல் வடிவம் கொடுக்கும் தலைவராகவும் பா.ஜ.க தொண்டர்களால் பார்க்கப்படுகிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்கொள்வது போன்ற பல தசாப்த பா.ஜ.க கொள்கைகளை அமல்படுத்தி சாதித்தும் காட்டியுள்ளார்.


தற்போது உள்ள நிலையில் உட்கட்சியிலும் சரி, இந்திய அளவிலும் சரி தன்னிகரில்லாத ஒப்பற்ற தலைவராக, தன் அஸ்வமேத குதிரையை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத பெருவீரனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் அன்பு தலைவர் நரேந்திர மோடி. சாதனைகள் தொடரட்டும். வெல்க பாரதம்!