சத்குரு கூறுகையில், “தங்கள் வாழ்க்கையை விவசாயத்தில் முதலீடு செய்பவர்கள் குறைந்தபட்சம் நகரத்தில் வாழும் மருத்துவர், வழக்கறிஞர், அல்லது பொறியாளர் அளவிற்கு சம்பாதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 25-30 ஆண்டுகளில் யாரும் விவசாயத்தில் இருக்கமாட்டார்கள்,“ என்கிறார்.
நம் நாட்டிற்கு, உலகிற்கே அன்னம் படைக்கும் ‘அன்னதாதா’ ஆகக்கூடிய வரப்பிரசாதம் உள்ளது. ஏனென்றால் நம் அட்சரேகையின் பரப்பில் உரிய தட்பவெப்பம், பருவ சூழ்நிலை, மற்றும் அனைத்துக்கும் மேல் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு “மண்ணை உணவாக்கும் மாயாஜாலம்” செய்யும் உள்ளார்ந்த அறிவு உண்டு.
துரதிர்ஷ்டவசமாக, நமக்கு உணவு படைக்கும் விவசாயியின் பிள்ளைகள் பட்டினியில் வாடுவதால் தன் உயிரையே மாய்த்துக்கொள்ள விரும்பும் நிலை நிலவுகிறது. நாங்கள் மேற்கொண்ட சில அடிமட்ட அளவிலான ஆய்வுகளில் நாங்கள் கண்டறிந்தது, விவசாய சமூகத்தில் இருப்பவர்களில் இரண்டு சதவிகிதத்தினர்கூட தங்கள் பிள்ளைகள் விவசாயத்திற்குள் செல்வதை விரும்பவில்லை. இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தலைமுறைக்குப் பிறகு நமக்கு யார் உணவு விளைவிப்பார்கள்? இந்த நாட்டில் விவசாயம் பிழைக்க வேண்டும் என்றால், அதை நீங்கள் லாபகரமானதாய் மாற்றவேண்டும்.
இதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது அளவு - நிலங்களின் அளவு மிகச்சிறியதாக இருக்கிறது. இப்போது ஒரு விவசாயியின் சராசரி நில அளவு ஒரு ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கராக இருக்கிறது, அதைக்கொண்டு அர்த்தமுள்ள எதையும் நீங்கள் செய்யமுடியாது. விவசாயிகளை ஏழ்மைநிலைக்கும் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரநிலைக்கும் தள்ளும் இரு பெரும் பிரச்சனைகள், நீர்ப்பாசனத்திற்கான முதலீடுகளும் சந்தையில் பேரம் பேசும் சக்தி இல்லாமல் இருப்பதும்தான். அளவு அதிகமாக இல்லாவிட்டால், இவ்விரண்டு இன்றியமையாத அம்சங்களும் எட்டாத தூரத்தில் இருக்கின்றன.
இப்போது நாங்கள் நாட்டின் மிக வெற்றிகரமான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றான ‘வெள்ளியங்கிரி உழவன்’ FPOவிற்கு வழிகாட்டி வருகிறோம். இந்த FPO (Farmers Producers Organization), தோராயமாக 1400 விவசாயிகளை ஒன்றிணைத்துள்ளது, அவர்கள் வருவாயும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
நாங்கள் FPO துவங்குவதற்கு தோராயமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இதுதான். தன் லாரியை எடுத்துக்கொண்டு ஒரு பாக்கு வியாபாரி ஊருக்குள் வருவார். அவர் வரும்பொழுது, விளைபொருள் சிறு குவியலாக இருக்கும் சிறு விவசாயியிடம் கிலோ 24 ரூபாய் என்ற விலைக்கு வாங்குவார், சற்று பெரிய குவியலாக இருக்கும் நடுத்தர விவசாயியிடம் கிலோ 42 ரூபாய் என்ற விலைக்கு வாங்குவார், பெரிய குவியலாக இருக்கும் விவசாயியிடம் கிலோ 56 ரூபாய்க்கு வாங்குவார் - ஒரே நாள், ஒரே விளைபொருளுக்கு இந்த நிலை. அந்த சிறு விவசாயி பேரம் பேச முயன்றால் அந்த வியாபாரி, “சரி, நீயே வைத்துக்கொள்,” என்று சொல்லிக் கிளம்பிவிடுவார். தன் விளைபொருளை விற்க அந்த சிறு விவசாயிக்கு வழியே இருக்காது. தன் விளைபொருளைத் தானே எடுத்துக்கொண்டு எங்கோ சென்று விற்பதற்கு அதிக செலவாகும், அதோடு வியாபாரிகள் அனைவரும் அவர்களுக்கென ஒரு கூட்டமைப்பு வைத்திருப்பார்கள். அதனால் இவரிடமிருந்து எவரும் வாங்கமாட்டார்கள்.
எனவே FPO அமைத்தவுடன், அனைவரது விளைபொருளையும் ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தோம். உடனே விவசாயிகளுக்கு ஒரு கிலோவிற்கு சராசரியாக 72 - 73 ரூபாய் என்ற விலை கிடைத்தது. இது அவர்கள் வாழ்வையே மாற்றியது. பிறகு விவசாய உள்ளீடுகளான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றிற்கு ஒரு கடை திறந்தோம். வழக்கமாக இடைத்தரகர்கள் எடுத்துக்கொண்ட 30 சதம் நேரடியாக விவசாயிகளுக்குச் சென்றது. அதாவது செலவு 30 சதம் குறைந்தது. இன்னொன்று, பாக்குமரங்களில் ஏறி காய்களை அறுவடை செய்யும் வேலையாட்களை ஒருங்கிணைத்தோம். நீங்கள் பயிற்சியில்லாத வேலையாட்கள் எவரையும் மரத்தில் ஏறச்சொல்ல முடியாது; அது உயிருக்கே ஆபத்தானது. எனவே இந்த திறமையுள்ளவர்களின் குழுவை உருவாக்கி ஒவ்வொரு தோப்புக்கும் எப்போது செல்லவேண்டும் என்ற கால அட்டவணையைத் தயார் செய்தோம். இப்போது அவர்களைத் துரத்திக்கொண்டு விவசாயிகள் பல இடங்களுக்கு அலையத் தேவையில்லை. அந்த தினசரி சர்க்கஸ் இப்போது நடப்பதில்லை.
விவசாயத்தின் அடிப்படைகளை மாற்றுவதற்கான சாவி
நாட்டில் 10,000 FPOகள் உருவெடுப்பதை விரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 10,000 FPOகள் உருவாக்குவது நல்ல விஷயம், ஆனால் ஒரு FPOவில் 10,000 விவசாயிகள் அடுத்தடுத்து நிலங்களுடன் இருப்பது முக்கியம். இல்லாவிட்டால் நமக்கு சந்தைப்படுத்துவதிலும் கொள்முதல் செய்வதிலும் சில அனுகூலமான விஷயங்கள் இருக்குமே தவிர அடிப்படைகளை நம்மால் மாற்றமுடியாது. ஏன் இப்படி?
இப்போது விவசாயிகள் தினமும் தங்கள் நிலத்திற்குச் செல்வதற்கு இரு காரணங்கள் உள்ளன, அவர்கள்தான் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று காட்டவேண்டிய நிலை இருப்பது ஒரு காரணம். இல்லாவிட்டால் யாரோ ஒருவர் எல்லையிலிருக்கும் கற்களை சற்று நகர்த்திவிட்டு அடுத்தவர் நிலத்திற்குள் உழுதுவிடுவார். இன்னொரு காரணம், அவர் நீர்ப்பாசனத்திற்கான மின்சார் பம்ப்செட்டை ஆன் செய்து ஆஃப் செய்யவேண்டும்.
நமக்கு அடுத்தடுத்து நிலங்களிலுள்ள விவசாயிகளை இணைக்க முடிந்தால், டிஜிட்டல் சர்வே செய்து செயற்கைக்கோள்கள் மூலமாக நில எல்லைகளை நிரந்தரமாக நிலைநாட்டக்கூடிய நிறுவனங்கள் உள்ளன. நிலத்தில் எந்த எல்லைக்குறியீடுகளும் தேவையில்லை, அந்த எல்லைகளை எவராலும் மாற்றவும் முடியாது. அப்படிச் செய்துவிட்டால், அவர்கள் தினமும் அங்கு சென்று அது அவர்களது நிலம் என்று நிரூபிக்கத் தேவையிருக்காது. அடுத்ததாக நாம் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய முடியும். இப்போது ஒவ்வொரு 2-5 ஏக்கர் நிலத்திற்கும் ஒரு தனி ஆழ்துளை கிணறு, தனி மின்சார் இணைப்பு, தனி முற்கம்பி வேலி உள்ளது. இது தேவையில்லாமல் பொருட்களை வீணாக்க வைக்கிறது. நாம் 10,000 - 15,000 ஏக்கர் நிலத்தை ஒன்றுசேர்ந்தால், நீர்ப்பாசனத்தை அர்த்தமுள்ள விதத்தில் திட்டமிட்டுச் செய்திடமுடியும்.
சொட்டுநீர்ப் பாசனவசதி செய்துதரும் நிறுவனங்கள், வாடகை அடிப்படையில்கூட தங்கள் சேவைகளை வழங்கத் தயாராக உள்ளார்கள். அப்படியானால் விவசாயி முதலீடு செய்யத் தேவையில்லை, பாசனநீர் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து வரத் தேவையில்லை. வெறும் 10 - 25 ஆழ்துளைக் கிணறுகளே அந்த நிலப்பரப்பு முழுவதற்கும் நீர்ப்பாசனம் செய்துவிட முடியும். இந்த இரண்டு விஷயங்களை நாம் கவனித்துக் கொண்டால் - அந்த விவசாயி தினமும் சென்று இது தன் நிலம் என்று எவருக்கும் நிரூபிக்கவும் தேவையில்லை, அவர் தினமும் சென்று நீர்ப்பாசன பம்ப்செட்டை ஆன் செய்யவும் வேண்டியதில்லை - விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு வருடத்தில் 60 - 65 நாட்கள் சென்றாலே திறம்பட இரண்டு பயிர்கள் செய்திட முடியும். அப்போது இந்த நாட்டில் 60 கோடிக்கும் மேலான மக்களின் கரங்கள் 300 நாட்களுக்கு வேறு வேலைகளில் ஈடுபடமுடியும். எனவே இதையொட்டிய துணை தொழிற்சாலைகள் செழித்தோங்க முடியும்.
பலவிதங்களில், வெள்ளியங்கிரி உழவன் FPOவின் பெண்களுக்கு அதிக நேரம் கிடைத்தது, ஏனென்றால் தேவையில்லாமல் கிராமத்திற்குள் சென்று வேலைகளை கவனித்துக்கொள்வது குறைந்தது. எனவே பெண்கள் அவர்களாகவே ஒன்றுசேர்ந்து சுவையூட்டும் மசாலாப் பொருட்கள் தயாரிக்கத் துவங்கினர். இப்போது அந்த தொழிலின் மதிப்பு கிட்டத்தட்ட விவசாய விளைபொருளுக்கு இணையாக வளர்ந்துவிட்டது.
என் நோக்கம் என்னவென்றால், விவசாயத்தில் தங்கள் வாழ்க்கையை முதலீடு செய்வோர் எவராயினும், அவர்கள் நகரத்திலுள்ள மருத்துவர், வழக்கறிஞர், அல்லது பொறியாளருக்கு இணையாக சம்பாதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 25 - 30 ஆண்டுகளில் எவரும் விவசாயத்தில் இருக்கமாட்டார்கள்.
இப்போது நாம் உலக மக்கள்தொகையில் 17 சதமாக இருக்கிறோம். நம்மிடமுள்ள நிலத்தைக்கொண்டு நம்மால் கூடுதலாக உலகிலுள்ள 10-40 சதவிகித மக்களுக்கு சுலபமாக உணவு விளைவிக்க முடியும். நம் நிலத்திற்கு அவ்வளவு ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை நாம் அறிந்துணர்வோமா இல்லையா என்பதுதான் பெரிய கேள்வி, ஆனால் அதை சாத்தியமாக்குவதுதான் FPO.
இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஐம்பது நபர்களில் ஒருவரான சத்குரு, ஒரு யோகியாக, ஞானியாக, தொலைநோக்குப் பார்வை உடையவராக, நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் அதிகம் விற்பனையாகும் புத்தக எழுத்தாளராகத் திகழ்கிறார். சத்குருவிற்கு 2017ம் ஆண்டில் இந்திய அரசால் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது, இது தனிச்சிறப்பு வாய்ந்த சிறந்த சேவைக்காக இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வருடாந்திர விருதாகும். அவர் 391 கோடிக்கும் அதிகமான மக்களைத் தொட்டுள்ள உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமான கான்சியஸ் ப்ளானட் - மண் காப்போம் இயக்கத்தைத் துவங்கியவரும் ஆவார்.
(மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகள் மட்டுமே ஆகும்)