கத்தாரில் கடந்த வாரம் தொடங்கிய ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் சூடு பிடித்துள்ளன. உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர் ஃபிபா உலகக்கோப்பை. ஃபிபா கால்பந்து தொடரை கத்தார் நடத்துவது இதுவே முதல் முறை. உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். பல லட்சக்கணக்கான ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண படையெடுப்பது  வழக்கம். இம்முறை சுமார் 12 லட்சம் ரசிகர்கள் தொடரை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்ன கால்பந்து விளையாட்டு மீது அவ்வளவு காதல்? என்கிறீர்களா? ”அதெல்லாம், சொன்னா புரியாது;  ஒரு மேட்ச் பாருங்க புரியும்!” -இதுதான் கால்பந்து ரசிகர்களின் பதில்.


எல்லா விளையாட்டுகளிலும் உலகக் கோப்பை இருக்கிறதுதானே? கால்பந்து விளையாட்டிற்கு மட்டும் தனிச்சிறப்பு இருக்கிறதா என்று கேட்டால், ஆம். கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், டி-20, ஒரு நாள் தொடர் என்று இருக்கிறது.  அமெரிக்காவின் பிரபல விளையாட்டுகளான பேஸ்பால் மற்றும் கூடைப்பந்து (National Basketball Association (NBA)) போட்டிகள் ’World Series' என்ற பெயரில் உலக சாம்பியன் தொடராக நடத்தப்படுகிறது. அதிலும் சில தசாப்தங்களாக என்.பி.ஏ., கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த நிலை தற்போது மாற தொடங்கியிருக்கிறது.




இருப்பினும், உலக அளவில் பெரிதும் கொண்டாடப்படும் விளையாட்டு திருவிழா ஃபிபா உலகக் கோப்பை. இதில் எந்த நாடு கோப்பையை வெல்லும் என்பதற்கான அனல் பறக்கம் போட்டிகள்தான் தற்போது நடந்து வருகின்றன. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இந்தாண்டு சாம்பியன் யார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


விளையாட்டில் தேசப்பற்றை தவிர்க்க இயலாது. ஆம். நம் நாட்டிற்காக விளையாடும் வீரர்களுக்குத்தான் ஆதரவு அளிப்போம் இல்லை. இந்தாண்டு 32 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன. 2026-ல் நடைபெறும் ஃபிபா தொடரில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கும். விளையாட்டு மைதானத்தில் தன் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து அணியின் சீருடை நிறத்திலேயெ உடை அணிந்து வருவார்கள். அவர்களின் ஆரவராத்தில் ஸ்டேடியம் அதிரும். தங்கள் அணி வீரர்களை உற்சாகம் செய்ய எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அணி வீரர்களின் திறமையான விளையாட்டை காண்பதே அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.


ஃபிபா உலகக்கோப்பைக்கு எப்படி அவ்வளவு ஆர்வம்? ரசிகர்களை கால்பந்து விளையாட்டு எப்படி தன்வசப்படுத்தியது? பெரும் தொகை செலவழித்து, பல மைல் தூரம் கடந்து உலகக் கோப்பை போட்டியை நேரில காண வேண்டும் என்ற உந்துதலை கொடுப்பது எது? உலக அளவில் பிரம்மாண்டமான போட்டிகளாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் ரசிகர்களை விட ஃபிபா தொடருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஒலிம்பிக் தொடரில் என்ன இல்லை. பிரம்மாண்டம், பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். உசேன் போல்ட் ஓட்டத்தை காணலாம். ஜிம்னாஸ்டிக் செய்பவர்களின் கலையை கண் கொட்டாமல் காணலாம். நீச்சல் போட்டியில் வித்தைகள் காட்டி நம்மை ஈர்க்கும் வீரர்கள். ஒலிம்பிக்கில் கடந்த இருபதாண்டுகளாக சீனா தொடந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்க இரண்டாம் இடம். இப்படி அதன் சிறப்புகளைச் பட்டியலிடலாம். ஆனால், இந்த நாடுகளால் உலகக் கோப்பையில் கொலிக்க முடிந்ததா?  ஆனால், ஏன், ஃபிபா தொடர் அளவுக்கு எந்த விளையாட்டும் உலக அளவில் கொண்டாடப்படவில்லை. ஏனெனில் திருவிழா உணர்வை தருவது ஃபிபா மட்டும்தான். ஃபிபாவுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான ஒரு பந்தம் இருக்கிறது. ரசிகர்களை பிரம்மிப்பின் உச்சத்தில் ஆழ்த்துகிறது. 




 


நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் காயத்தினால் வெளியேறி இருப்பது, ஜாம்பவான்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவருக்கும் இது கடைசி உலகக்கோப்பை, பிரம்மாண்டமான ஏற்பாடுகள், அதோடு தொடர்புடைய சர்ச்சைகள் என்பதோடு தொடங்கியிருக்கிறது 22-வது பிபா உலகக்கோப்பை தொடர். இதோடு வதந்திகளும் எழுந்தன. கத்தாரில் உலகக்கோப்பை நடத்துவதற்கு அந்நாடு தவறான வழிமுறைகளை (பணத்தின் உதவியால் இந்த வாய்ப்பை கத்தார் தக்கவைத்து கொண்டது.)பின்பற்றியதாக பேசப்பட்டது. இருப்பினும், ரசிகர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தினையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு அதிக வெப்பநிலை நிலவுவதால் மைதானத்தை குளிரூட்டும் வசதிகள் செய்யப்படுள்ளன. ஆனாலும், போட்டிகள் நடைபெறும் காலக்கட்டம் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு உகந்ததாக இருக்காது.


மைதானத்தில் ரசிகர்கள் பீரை குடிக்க தடை செய்தது, பால்புதுமையினர் LGBTQIA+ வெளிப்படுத்தும் ரிஸ்ட் பேண்ட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது, விளையாட்டு மைதான கட்டிட பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் மீதான் வன்முறை போக்கு  போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தற்போது, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மைதானத்தில் வானவில் வண்ண தொப்பிகள் மற்றும் கொடிகள் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.




 


உலகக்கோப்பையை நடத்தும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிற்கு இதன் மூலம் 5 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைகிறது. இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் ஆண்டுக்கு பத்து மில்லியன் டாலர்கள் வரை சம்பாரிக்கின்றன. பிரம்மாண்டமான, அழகான விளையாட்டாக இருந்தாலும் அதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது.


இருப்பினும், மைதானத்தில் இந்த விளையாட்டு அனைவரையும் மெய் மறக்க செய்துவிடும்.  ஸ்பெயின் 6-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரைகா அணியை வீழ்த்தி உள்ளது. ஈரானுக்கு எதிரான போட்டியில் 2-6 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.பிரான்ஸ் அணி 4-1 என்று வெற்றி பெற்று பயணத்தை தொடங்கி உள்ளது. இம்முறை எதிர்பாராதவிதமாக பல போட்டிகள் த்ரில்லிங்காக அமைந்துவிட்டது. கால்பந்து போட்டியில் அசத்தும் அணியான ஜெர்மனியை, ஜப்பான் வீழ்த்தும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். திருப்பங்களுடன் இருப்பதே விளையாட்டின் இயல்பு இல்லையா? ஜப்பான் வீரர்களின் இரண்டு கோல்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.


ஜப்பானின் வெற்றி முன்னறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜப்பான் - ஜெர்மனி அணிகளுக்கிடையேயான குரூப் பிரிவுக்கு போட்டிக்கு முன், ஜப்பானின் தையோ ( Taiyo)  என்ற ’river otter’ சாதகத்தினை கணித்துள்ளது. அதன்படி, தன் முன் வைக்கப்பட்டிருந்த மூன்று டப்பாக்களில் ஜப்பான் கொடி இருந்த டப்பாவில் சிறிய கால்பந்தை வைத்துள்ளது. இதை வைத்து ஜப்பானின் வெற்றியை  ’river otter’ கணித்துவிட்டது என்று சொல்லப்பட்டது. முந்தைய காலத்தில் இதை மூடநம்பிக்கை என்று நகையாடியிருப்பார்கள் ஐரோப்பியர்கள். ஆனால், இப்போது ஜெர்மனி அணியை பார்த்து உலகமே சிரிக்கிறது. ஜப்பான் அணியின் வெற்றியை கொண்டாட நாட்டில் விடுமுறை அறிவிக்குமாறு ஜப்பானியர்கள் கேட்கிறார்கள். 


இம்முறை நமக்கு பெரும் ஆச்சரியத்தை வழங்கியிருக்கிறது சவுதி அரேபியா? சவுதி அரேபிய வீரர்களிடமிருந்து யாரும் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை: எண்ணெய் வளம் நிறைந்த நாடு; அந்நாட்டின் செழிப்பு அந்நாடின் குடிமக்களின் உழைப்பு அல்லது திறமை அல்லது புத்திசாலித்தனத்தில் இருந்து பெறப்படவில்லை என்ற பொதுவான கற்பனை உண்டு.  அதன்பிறகு சவுதி பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. அதற்காக பல மெனக்கடல் செய்துள்ளது. உலகின் மற்ற நாடுகள் எண்ணெய்க்காக சவுதி அரேபியாவை நம்பி இருக்கும் நிலைக்கு வந்துள்ளது. ஆனாலும், சவுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் - பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதித்தது உள்ளிட்டவைகள் போன்ற விரும்பத்தகாத செயல்களும் உலகம் அறிந்ததே!


சர்வதேச அளவில் விளையாட்டு துறையில் சவுதி அரேபியா அப்படியொன்றும் பிரபலம் இல்லை. அந்நாட்டின் கால்பந்து அணி சர்வதேச போட்டிகள் சிறிதளவிலான அனுபவத்தினை கொண்டிருக்கிறது. போலவே, அங்கு பிரபலமான விளையாட்டு ‘ falconry’ இதில் ’falcon’ பறவையை வைத்து நடத்தப்படுகிறது. 


ஃபிபா தொடரில் சவுதி அரேபியா எதிர்கொண்ட அணி அர்ஜெண்டினா; பிரேசில் அணி போலவே கால்பந்து விளையாட்டை கனவாக கொண்ட அணி. COPA 2021-ல் பிரேசிலை வீழ்த்தியது அர்ஜெண்டினா. தென் அமெரிக்காவில் தன் கால்பந்து ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது அர்ஜெண்டினா அணி. 



சவுதி அரேபியாவின் பிரதமர் முகமது- பின் - சல்மான் ( Mohammed bin Salman) தனது நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர்களிடம், இந்த தொடரை வெல்வதை பற்றி அதிகம் சிந்திக்காமல், மகிழ்ச்சியாக விளையாடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.  ஆனால், அவர்கள் பிரதமர் சொன்னதைக் கேட்டதாக தோன்றவில்லை. சவுதி அரேபியா அர்ஜென்டினா அணியை அதிரடியாக வீழ்த்தியது.சவுதி அணி வீரர் அல்- தவாசரி ( Al-Dawsari)-யின் அதிரவைக்கும் கோல் காரணமாக வெற்றியை தன்வசப்படுத்தியது சவுதி அரேபியா. மறுநாள், இதனை கொண்டாட சவுதி அரேபியாவில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்தத் தொடரில் சவுதி அரேபிய அணி எவ்வளவு தூரம் செல்லும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அது அவரவர் கணிப்பு. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு, அரேப் ஸ்பிரிங் - உலக அரசியலில் மிகவும் முக்கியமான வளர்ச்சி. அது நீண்ட காலம் நீடிக்கவில்லை; அது இறுதியில் குழப்பமான சட்ட ஒழுங்கின்மைக்கு வழிவகுத்தது என்றும், ஜனநாயக முறைபடி அல்லாமல் ஆட்சி செய்யும் எகிப்தின் அதிபரான அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி  (Abdel Fattah El-Sisi,) போன்ற எதேச்சதிகாரத் தலைவர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது என்றும் சிலர் கூறுவார்கள். அர்ஜென்டினாவுக்கு எதிரான சவூதி அரேபியாவின் வெற்றி அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்தது என்று கூறப்படுகிறது. அரபு நாட்டின் திறமையை உலகறிய செய்தது. கால்பந்தாட்டமும் ஜனநாயகமயமாக்கப்படுகிறது  என்பதை உணர்த்துகிறது சவுதி அணியின் வெற்றி.  தென் அமெரிக்க அல்லது ஐரோப்பிய கால்பந்து அணிகள் உலகக் கோப்பையை வென்றெடுக்காத நிலை வருவது வெகு தூரத்தில் இல்லை.  கால்பந்து உலகில் ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதிக்கம் மிகவும் அழகானது. 


ஆனால், சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை கொண்டாட முடியுமா என்று தெரியவில்லை.  2018-இல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று சொன்னது சவுதி. உலகக் கோப்பை கால்பந்தைப் பற்றியது மட்டும் அல்ல: அதிகாரம், அரசியல் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றையும் உள்ளடக்கியதுதான். 


அல்-தவ்சாரியின் கோலில் கலைத்திறனும் நேர்த்தியும் இருக்கிறது. அது உலகையே திகைக்க வைத்தது. இவை அனைத்தும் உலகக்கோப்பையின் அழகான பக்கங்கள். அது ரசிகர்களிடையே கால்பந்து மீது தீரா காதலை உருவாக்குகிறது..


(கட்டுரையாளரின் கருத்துக்கள் சொந்த கருத்துக்களே. அவற்றுக்கு வரும் விமர்சனங்களுக்கு Abpnadu பொறுப்பேற்காது)