Tata Nexon SUV: டாடாவின் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன நெக்ஸான் கார் மாடலின் விலை, அம்சங்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

டாடா நெக்ஸான் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் என்றாலே நம்பிக்கை என்ற வலுவான பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தான் நடப்பாண்டின் முதல் பாதியில் அதாவது ஜனவரி மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரையில் மட்டும், 2 லட்சத்து 69 ஆயிரத்து 968 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் சப்-காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் உள்ள நெக்ஸான் மிகவும் முக்கிய பங்காற்றி உள்ளது. உதாரணமாக நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் டாடா நிறுவனம் சார்பில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் உள்ளது. அதன் விலை மற்றும் அம்சங்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

டாடா நெக்ஸான் - விற்பனை

கடந்த ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனம் பதிவு செய்த ஒட்டுமொத்த விற்பனையான 48 ஆயிரத்து 75 யூனிட்களில், 15 ஆயிரத்து 397 யூனிட்கள் நெக்ஸான் கார் மாடலை சேர்ந்ததாகும். தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 15 ஆயிரத்து 349 யூனிட்களும், மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 366 யூனிட்களும், ஏப்ரல் மாதத்தில் 15 ஆயிரத்து 457 யூனிட்களும், மே மாதத்தில் 13 ஆயிரத்து 96 யூனிட்களும் மற்றும் ஜுன் மாதத்தில் 11 ஆயிரத்து 602 யூனிட்களும் நெக்ஸான் மாடலில் விற்பனையாகியுள்ளன. அதாவது நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் டாடா சார்பில் விற்பனையான 2.69 லட்சம் வாகனங்களில், 32.3 சதவிகித வாகனங்கள் (87,267 யூனிட்கள்) நெக்ஸான் மாடலை மட்டுமே சார்ந்ததாகும். அதாவது டாடா நிறுவனம் விற்கும் மூன்றில் ஒரு கார் நெக்ஸான் மாடலாகும்.

Continues below advertisement

டாடா நெக்ஸான் ஏன் பெஸ்ட்?

இந்திய சந்தையில் சப்-காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் டாடாவின் நெக்ஸான் பிரதான தேர்வாக இருக்க பல காரணங்கள் உள்ளன. அதில் வலுவான பாதுகாப்பு வசதிகள், நவீன அம்சங்கள் மற்றும் போட்டித்தன்மை மிக்க விலை ஆகிய முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. நன்கு மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்கள் பயண அனுபவத்தை மேம்படுத்த, தொழில்நுட்பத்துடன் கலந்து பணத்திற்கு நிகரான மதிப்பையும் வழங்குவதால், வாடிக்கையாளர்கள் நெக்ஸான் காரை தேர்வு செய்வதில் மிகுந்த திருப்தி அடைகின்றனர். பெட்ரோல், டீசல், மின்சாரம் மற்றும் சிஎன்ஜி என நான்கு வகையான எரிபொருட்களிலும் கிடைப்பதால், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவர்கிறது. இதன் விளைவாகவே, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான விற்பனையை காட்டிலும் நடப்பாண்டில் அதே காலகட்டத்தில் நெக்ஸானின் விற்பனை 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?

டாடா நெக்ஸான் - வெளிப்புற விவரங்கள்:

டாடா நிறுவனத்தின் வெளிப்புறத்தில் ஸ்ப்லிட் எல்இடி செட்-அப், பகல்நேரங்களில் ஒளிரும் மின் விளக்குகள், க்ளோஸ் பிளாக் எலிமெண்ட்களுடன் கூடிய அகலமான் கிரில், க்யூப் வடிவிலான ஃபாக் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்களில் உள்ள டைமண்ட் கட் அலாய் வீல்கள் கரடுமுரடான தோற்றத்தை வழங்குகின்றன. மற்ற வேரியண்ட்களில் 16 இன்ச் ஸ்டீல் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ரூஃப்லைன்  கூபே மாதிரியான காட்சியை உருவாக்குகிறது. சில வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள டூயல் டோன் ரூஃப் ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகிறது. பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப், அம்பு வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்ஸ், டூயல் டோன் பம்பர் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த காரானது 6 வண்ண விருப்பங்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸான் - உட்புற அம்சங்கள்:

டாடா நெக்ஸான் கார் மாடலில் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, மூன்று வண்ணங்களிலான டேஷ்போர்ட் உடன் தரமான தோல் பொருட்களை கொண்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோக 5 பேர் சொகுசாக பயணிப்பதற்கு ஏற்ப தாராளமான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், ரியர் ஏசி வெண்ட்கள், ரியர் சீட்டிற்கு 60:40 ஃபோல்டிங் அம்சம், 382 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

தொழில்நுட்ப அடிப்படையில், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அணுகலை கொண்ட 10.25 இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், நேவிகேஷன் டிஸ்பிளே உடன் கூடிய 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வாய்ஸ் அசிஸ்டெட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டைனமிக் கெயிட்லைன்களுடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

டாடா நெக்ஸான் - பாதுகாப்பு அம்சங்கள்:

டாடா நெக்ஸான் மக்களால் அதிகம் விரும்பப்படுவதற்கு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதில் வழங்கப்பட்டுள்ள ஏராளமான அம்சங்களும் பிரதான காரணமாகும். அதன்படி, அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கைகள், ரியர் பார்கிங் சென்சார்கள் & கேமரா மற்றும் டாப் என்ட் வேரியண்ட்களில் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உள்ளிட்ட ADAS தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் உதவியுடன் பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவருக்குமே 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

டாடா நெக்ஸான் - இன்ஜின் விவரங்கள்:

நெக்ஸான் கார் மாடலில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின், சிஎன்ஜிக்கு 1.2 லிட்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மூன்றிலும் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்கிறது. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 17.44 கிலோ மீட்டரும், டீசல் எடிஷன் லிட்டருக்கு 24 கிலோ மீட்டரும், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 17.44 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.  மூன்று பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் நெக்ஸான் மின்சார எடிஷன் அதிகபட்சமாக 489 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாடா நெக்ஸான் விலை, போட்டியாளர்கள்:

இன்ஜின், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில், நாட்டிலேயே அதிகபட்சமாக நெக்ஸான் 54 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை சென்னையில் 9 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 19 லட்சத்து 25 ஆயிரம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் வென்யு, கியா சோனெட் மற்றும் மாருதி சுசூகி ஆகிய கார் மாடல்களிடமிருந்து டாடா நெக்ஸான் நேரடியாக போட்டியை எதிர்கொள்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI