Volkswagen LayOff Jobcuts: ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து உற்பத்திக்கு திட்டமிட்டு இருந்த கார் மாடல்களில் பாதியை கைவிடுவதாகவும் ஃபோக்ஸ்வாகன் அறிவித்துள்ளது.
ஒரு லட்சம் பேரின் வேலையை பறிக்கும் ஃபோக்ஸ்வாகன்:
சர்வதேச அளவில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது ஊழியர்களில் 50 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவும், தனது வாகன வகைகளில் பாதியை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஒரு லட்சத்தை எட்டும் எனவும் விளக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் அதிகரித்து வரும் சீன நிறுவனங்கள் உடனான போட்டித்தன்மை மற்றும் அமெரிக்க சந்தைக்கான தனது ஏற்றுமதிகளின் மீதான சுங்க வரிச்செலவுகள் ஆகியவற்றால் கடும் பின்னடைவுகளை சந்தித்து வரும் சூழலில் ஜெர்மானிய நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
ஃபோக்ஸ்வாகன் கொடுத்த விளக்கம் என்ன?
ஏற்கனவே 50 ஆயிரம் நபர்களை வேளையில் இருந்து நீக்கும் முடிவிற்கு அனுமதி அளித்து இருந்த நிர்வாகம் மற்றும் வணிக சங்கங்கள், கூடுதலாக 50 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக ஃபோக்ஸ்வாகன் அறிவித்துள்ளது. அதன்படி, “பொருளாதார யதார்த்தங்களுக்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கையை முறையாகச் சீரமைப்பது அவசியம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மேற்கொள்ளப்பட உள்ள ஒரு லட்சம் ஆட்குறைப்புகள், உலகெங்கிலும் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஊழியர்களில் சுமார் 15 சதவிகிதத்திற்குச் சமமாகும். 2009-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவித்த பிறகு மேற்கொண்ட 50,000 ஆட்குறைப்பு என்ற பழைய மோசமான சாதனையை ஜெர்மன் நிறுவனம் தற்போது முறியடிக்க உள்ளது.
ஃபோக்ஸ்வாகனின் எந்தெந்த ஆலைகள் மூடப்படுகின்றன?
ஃபோக்ஸ்வாகன் குழுமத்திற்கு ஜெர்மனில் மட்டுமே ஹனோவர், எம்டன், ஸ்விக்காவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய நான்கு இடங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு சுமார் 500,000 வாகனங்கள் என்ற உபரி உற்பத்தித் திறன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றின் நீண்டகால எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒருவேளை அவற்றில் ஏதேனும் ஒன்று மூடப்பட்டால், ஃபோக்ஸ்வாகனின் தாய்நாட்டில் அதன் தொழிற்சாலைகள் முழு அளவில் மூடப்படும் முதல் நிகழ்வாக இது இருக்கும். ஜெர்மனியில் அதன் பணியாளர்களின் எண்ணிக்கை 2023ம் ஆண்டு 275,000-ஆக இருந்த நிலையில், கடந்த ஜூன் 30 நிலவரப்படி 254,000-ஆகக் குறைந்துள்ளது. ஃபோக்ஸ்வாகன் ப்ராண்ட் மட்டுமின்றி கூடுதலாக ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி ப்ராண்டுகளையும் அந்த குழுமம் விற்பனை செய்து வருகிறது.
எந்தெந்த கார் உற்பத்தி கைவிடப்படும்?
தாங்கள் உருவாக்கும் கார்களின் சிக்கலான தன்மையை 75 சதவிகிதம் வரை குறைக்கப்போவதாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது "முன்னுரிமை அளிக்கப்பட்ட மாடல்கள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதையும், குறைவான வகைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பயனடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த மாற்றத்தின் விளைவாக, ஒவ்வொரு மாடலுக்கும் அதிக உற்பத்தி, குறைந்த செலவுகள், வலுவான பேரளவு சிக்கனம் ஆகியவை ஏற்படும்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது
ஆட்குறைப்புக்கு காரணம் என்ன?
ஆட்குறைப்பு எப்போது செய்யப்படும் என்பது பற்றியோ, அல்லது தனது ஆலைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ள வெவ்வேறு பிராந்தியங்களில் அவை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது பற்றியோ ஃபோக்ஸ்வேகன் விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், தங்களது கவனம் வட அமெரிக்காவின் பக்கம் திரும்பும் என்றும், உலக தென்பகுதிக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, மேலும் போட்டித்தன்மை மிக்கதாக மாறுவதற்காக, வரும் ஆண்டுகளில் மூன்று இலக்க பில்லியன் டாலர் முதலீட்டையும் இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் லாபத்தை பெருக்க முடியும் எனவும் நம்புகிறதாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI