Vinfast VF6 VF7 EV Booking: தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட உள்ள வின்ஃபாஸ்டின் VF6 மற்றும் VF7 ஆகிய மின்சார கார்களுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

Continues below advertisement

முன்பதிவை தொடங்கிய வின்ஃபாஸ்ட்:

வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் ஆலையை தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஆலையில், வரும் ஜுலை மாதம் முதல் உற்பத்தி பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கார்கள் இங்கு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தைக்கான முதல் இரண்டு கார் மாடல்களுக்கான முன்பதிவை வின்பாஸ்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, VF6 மற்றும் VF7 என்ற இரண்டு கார் மாடல்களுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது.

வின்ஃபாஸ்டின் VF6, VF7 மின்சார கார்கள்:

ஆரம்பத்தில் VF6 மற்றும் VF7 கார் மாடல்களை தான், இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என கூறப்பட்டது. அதன்படி, தற்போது அந்த கார் மாடல்களுக்கான முன்பதிவை தான் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகி குறிப்பிட்ட முன்பணத்தை செலுத்தி உங்களுக்கான கார் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார்கள் வரும் செப்டம்பர் மாதம் சந்தைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. வியட்நாமில் வைத்து இந்திய சூழலுக்கு ஏற்ப இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  VF6 மற்றும் VF7 கார் மாடல்களை தொடர்ந்து VF3 எனும் மைக்ரோ எஸ்யுவியை அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

Continues below advertisement

வின்ஃபாஸ்டின் VF7 கார் மாடல் விவரங்கள்:

வின்ஃபாஸ்டின் VF7 காரானது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவியாக, வரும் செப்டம்பர் மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளது. கூபே மாதிரியான டிசைன் கொண்ட இந்த கார் அந்த நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த காரானது ECO மற்றும் PLUS என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி, ECO வேரியண்ட் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் 174 PS / 250 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதேநேரம், ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டத்தில்  349PS / 500Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதில் இடம்பெற உள்ள 75.3 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுபோக பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட்  சிஸ்டம், டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, ADAS தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற அம்சங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்திய சந்தையில் ஜுண்டாய் ஐயோனிக் 5,  BYD சீலியன் 7, BMW iX 1 LWB ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வின்ஃபாஸ்டின் VF6 கார் மாடல் விவரங்கள்:

வின்ஃபாஸ்டின் VF6 காரானது காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவியாக, வரும் செப்டம்பர் மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற பயன்பாட்டிற்கும், குடும்பமாக பயணிக்கவும் இது ஏற்ற மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. 4.3 மீட்டர் வரையிலான நீளத்தை கொண்டு, இந்திய சந்தையில் ஹுண்டாய் கிரேட்டா, டாடா கர்வ் மற்றும் மஹிந்திராவின் BE 6 ஆகிய மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடும். இதுவும் ECO மற்றும் PLUS என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் உள்ள 59.6 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 400 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. இது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அம்சத்தை மட்டுமே கொண்டுள்ளது. அதேநேரம், கனெக்டட் கார் டெக்னாலஜி உடன்  12.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன், எளிமையான டேஷ்போர்ட் டிசைன் ஆகியவற்றோடு லைன் - கீப் அசிஸ்டன்ஸ் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 35 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பேட்டரி சப்ஸ்க்ரிப்ஷன் திட்டம்:

பேட்டரி சப்ஸ்க்ரிப்ஷன் வாய்ப்புடன் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தலாம். இதன் மூலம் குறைந்த விலையிலேயே காரை உரிமையாக்கலாம்.  அதன்படி பேட்டரி இல்லாமலேயே காரை வாங்கி, மாதந்திர தவணையாக செலுத்தி பேட்டரியை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே எம்ஜி நிறுவனம் இத்தகைய சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI