Toyota Taisor: டொயோட்டா நிறுவனம் தனது டெய்சர் கார் மாடலுக்கு அப்க்ரேட்களுடன், சிறிய விலை ஏற்றத்தையும் அறிவித்துள்ளது.
டொயோட்டா டெய்சர் அப்க்ரேட்கள்:
டொயோட்டா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன, அர்பன் க்ரூசர் டெய்சர் கார் மாடலுக்கு இரண்டு புதிய அப்க்ரேட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகளை கட்டாயமாக்குவது அடங்கும். மற்றொன்று வெளிப்புறத்திற்கான ப்ளூயிஷ் ப்ளாக் வண்ண விருப்பமும் இனி அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பாகும்.
டெய்சரின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ப்ளூயிஷ் ப்ளாக் தற்போது அனைத்து ட்ரிம்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெய்சரின் E, S, S+, G மற்றும் V என அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பிற்கான 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், பக்கவாட்டில் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் கர்டெயினில் இரண்டு ஏர் பேக்குகள் என மொத்தம் 6 பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
டொயோட்டா டெய்சர் விலை ஏற்றம்:
புதிய அப்க்ரேட்களை கருத்தில் கொண்டு டொயோட்டா டெய்சர் மாடலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கார் மாடல்களின் விலை 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதேநேரம், S+ வேரியண்டின் விலை குறைந்தபட்சமாக 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெய்சர் கார் மாடலின் விலை தற்போது 7 லட்சத்து 89 ஆயிரமாக தொடங்கி 13 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. V வேரியண்டின் விலை அதிகபட்சமாக 28 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
டொயோட்டா டெய்சர் - இன்ஜின் விவரங்கள்
மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு அப்க்ரேட்களை தவற வேறு எந்தவித மாற்றங்களும் டெய்சரில் மேற்கொள்ளப்படவில்லை. அர்பன் க்ரூசர் எஸ்யுவில் ஏற்கனவே இருந்த 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமோடிக் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் லிட்டருக்கு 22.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா டெய்சர் - அம்சங்கள்:
இந்த எஸ்யுவியில் கூர்மையான எல்இடி முகப்பு விளக்குகள், க்ரோம் அக்செண்டட் க்ரில்லில் பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடிக்கள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் டூயல் டோன் கேபின், 60:40 ஸ்ப்லிட் ரியர் சீட்ஸ், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளை உள்ளடக்கிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் உள்ளது. நவீன பயன்பாடுகளுக்கு ஏற்ப க்ரூஸ் கண்ட்ரோல், பேடல் ஷிஃப்டெர்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்மார்ட் வாட்ச்சுடன் இணைக்க ஏதுவான டொயோட்டா i-கனெக்ட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் கம்பாடிபிலிட்டி ஆகிய அம்சங்களும் டெய்சரில் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெஹைகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு பரிசோதனைகள்:
சர்வதேச அளவில் டெய்சர் கார் மாடல் பாதுகாப்பு பரிசோதனைக்கு ஏதும் உட்படுத்தப்படவில்லை. அதேநேரம், ஃப்ரான்க்ஸ் காரை மையமாக கொண்டே டெய்சர் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த ஃப்ரான்க்ஸ் கார் மாடல் பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார்களை பெற்று இருப்பதால், டெய்சரும் அதே ரேட்டிங்கை பெறக்கூடும். அண்மையில் தான், ஃப்ரான்க்ஸின் அனைத்து வேரியண்ட்களிலும் கூட 6 ஏர் பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI