Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Upcoming Turbo Petrol Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, டர்போ பெட்ரோல் இன்ஜின் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Turbo Petrol Cars: புதியதாக சந்தைப்படுத்தப்பட உள்ள டர்போ பெட்ரோல் கார்களின் விலை, மைலேஜ் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டர்போ பெட்ரோல் கார்கள்:
அபாரமான ஆற்றல் மற்றும் ஆச்சரியமளிக்கும் டார்க் காரணமாக, கார் வாங்குபவர்களின் பிரதான தேர்வுகளில் ஒன்றாக டர்போ-பெட்ரோல் கார் மாடல் உருவெடுத்து வருகிறது. பல வாகன உற்பத்தியாளர்கள் இவற்றிர்கு முன்னுரிமை அளிக்க தொடங்கியுள்ளதால், இயல்பான பெட்ரோல் இன்ஜின்களில் இயங்கும் மாடல்களுக்கு கடுமையான போட்டி உருவாகி வருகிறது. இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட அதிகம் விற்பனையாகும் மாடல்கள் முதல் புத்தம் புதிய எஸ்யுவிகள் வரை, இந்தியாவில் அடுத்தடுத்து வரவிருக்கும் சில டர்போ-பெட்ரோல் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து வரும் டர்போ பெட்ரோல் கார்கள்:
1. மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்
ஜூலை 23 அன்று விற்பனைக்கு வரவிருக்கும் மாருதி சுசூகி ஃப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வடிவில் ஒரு பெரிய அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்பாக்ட் எஸ்யுவியில், ஃப்ரான்க்ஸில் உள்ள ப்ராண்டின் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இடம்பெற வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு கிடைக்கப்பெறலாம். மாருதி இந்த எஸ்யுவியில் சில காஸ்மெட்டிக் மற்றும் வசதி அப்டேட்களையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சிஎன்ஜி டேங்க் அமைப்பும் அடங்கும். எஸ்யுவியின் தொடக்க விலை ரூ. 9 லட்சத்திற்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மஹிந்த்ரா ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்த்ரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ-என் மாடலில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த எடிஷன் புதிய ஸ்டைலிங் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் எஸ்யுவியின் கவர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மஹிந்த்ரா பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை மாற்ற வாய்ப்பில்லையாம். அதன்படி, டீசல் ஆப்ஷனுடன் 2.0-லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் தொடர்ந்து வழங்கும். டர்போ 7-சீட்டர் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இது நல்ல தேர்வாக தொடரும். ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்டின் தொடக்க விலை சுமார் ரூ. 14 லட்சத்தில் இருந்து தொடங்கலாம்.
3. ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் ஃபேஸ்லிஃப்ட்
பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் செடான் கார்களில் ஒன்றான விர்டஸ், அதன் மிட்-லைஃப் அப்க்ரேடை பெற உள்ளது. இதில் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், காரின் உள்ளே அதன் 1.0-லிட்டர் TSI மற்றும் 1.5-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தக்கவைக்க உள்ளதாம். ஆனாலும், சிறிய டர்போ இன்ஜின் ஒரு புதிய 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடக்க விலை சுமார் ரூ. 12 லட்சம் ஆக உயர்த்தப்படலாம்.
4. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்
முற்றிலும் புதிய ஸ்கோடா ஸ்லாவியாவும் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக செடான் காரின் ஸ்டைலிங்கில், பெரும்பாலும் மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வடிவில் அப்டேட்கள் இருக்கலாம். உட்புறத்தில், ஸ்கோடா ஒரு பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட இருக்கை உறைகளை பெறக்கூடும். இன்ஜினைப் பொறுத்தவரை, இந்த செடான் பெரும்பாலும் வழக்கமான 1.0-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடனேயே தொடர உள்ளது. இது இந்தியாவில் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. இதன் தொடக்க விலை சுமார் ரூ. 11.80 லட்சம் ஆக திருத்தி அமைக்கப்படலாம்.

5. மஹிந்த்ரா விஷன் எஸ்
மஹிந்த்ரா நிறுவனம் தனது விஷன் எஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு எடிஷனிலும் பணியாற்றி வருகிறது. அவ்வப்போது சாலை பரிசோதனையின் போதும் இந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய எஸ்யுவி, உறுதியான வடிவமைப்பு மற்றும் பனோரமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்கிரீன் உள்ளிட்ட விரிவான அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் புதிய NU_IQ ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும், விஷன் எஸ் ஒரு புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வர வாய்ப்புள்ளது. இது இந்தியாவில் வளர்ந்து வரும் 1.2-லிட்டர் டர்போ இன்ஜின் கார்களின் பட்டியலில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மாடலாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய இரண்டு தேர்வுகளும் வழங்கப்படலாம்.

6. ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட்லைன்
ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட்லைன் என்பது இந்தியாவில் தற்போதுள்ள மாடலின், செயல்திறனை மேம்படுத்தும் ஒரு எடிஷனாகும். இன்ஜின் ரீதியாக அதே 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கருமையாக்கப்பட்ட வெளிப்புற பாகங்கள் போன்ற ஸ்போர்ட்டியான தோற்ற அப்டேட்களுடன், இந்த கார் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த எஸ்யுவியின் ஸ்போர்ட்டியான வேரியண்ட்டின் விலை சுமார் ரூ. 10 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























