Upcoming Flex Fuel Cars: பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
Upcoming Flex Fuel Cars: மாருதி வேகன் - ஆர் மாடலை தொடர்ந்து ஃப்ளெக்ஸ் ஃபியூல் எடிஷனில் அறிமுகமாக உள்ள, முன்னணி நிறுவனங்களின் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Upcoming Flex Fuel Cars: மாருதி வேகன் - ஆர் மாடலை தொடர்ந்து ஃப்ளெக்ஸ் ஃபியூல் எடிஷனில் அடுத்தடுத்து சில எஸ்யுவிக்களும் சந்தைப்படுத்தப்பட உள்ளனவாம்.
மாருதி வேகன் - ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூல்
நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் மாடலாக மாருதியின் வேகன் ஆர் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது. டால் பாய் ஹேட்ச்பேக்கின் டாப் என்ட் வேரியண்டான ZXi+ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூ.7.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இந்த புதிய வகை எரிபொருளின் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக தற்போது அறிமுகமாகியுள்ள மாருதியின் பட்ஜெட் கார் மட்டுமின்றி, பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது பிரபலமான மாடல்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல் எடிஷனை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. அந்த வகையயில் விரைவில் அறிமுகமாக உள்ள, ஃப்ளெக்ஸ் ஃபியூல் எடிஷன் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து வரிசை கட்டும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார்கள்
மாருதியை தொடர்ந்து டாடா, டொயோட்டா மற்றும் ஹுண்டாய் போன்ற பல முன்னணி நிறுவனங்களும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் பிரிவில் தடம் பதிக்க உள்ளன. இதன் மூலம் எதிர்கால சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, சந்தையில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளை தொடங்கியுள்ளன.
1. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்:
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஃப்ளெக்ஸ் ஃபியூல் எடிஷனின் மாதிரி ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2.0-லிட்டர் பெட்ரோல்-எலெக்ட்ரிக் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னை, 100% வரை எத்தனாலைக் கையாளும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட எரிபொருள் அமைப்புடன் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இது, பொதுவாக எத்தனால் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயல்திறனில் உள்ள சுமார் 30% சரிவை ஈடுசெய்ய உதவுகிறது. ஹைக்ராஸின் வழக்கமான எடிஷன் ரூ.18.92 லட்சத்தில் தொடங்கி ரூ.31.84 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.
2. மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ்:
ஜப்பான் மொபிலிட்டி ஷோ மற்றும் சமீபத்திய இந்திய வாகன நிகழ்வுகளில், மாருதி சுசூகி நிறுவனமானது தனது ஃப்ராங்க்ஸ் காரின் ஃப்ளெக்ஸ் ஃயூல் மாதிரியை காட்சிப்படுத்தியது. இதைதொடர்ந்து, பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட இன்ஜெக்டர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் பம்ப் அம்சங்களுடன் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ராங்க்ஸ் கார் மாடலின் வழக்கமான எடிஷன் ரூ.6.85 லட்சம் தொடங்கி ரூ.11.98 லட்ச்ம வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது.
3. டாடா பஞ்ச் ஃப்ளெக்ஸ் ஃப்யூல்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களது பிரபலமான மைக்ரோ-எஸ்யுவி ஆன டாடா பஞ்ச் மாடலை, எத்தனாலிற்கு இணக்கமான எடிஷனில் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இது மற்ற உள்நாட்டு ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கான்செப்ட்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்ச் மாடலின் வழக்கமான எடிஷன் ரூ.5.50 லட்சத்தில் தொடங்கி ரூ.10.60 லட்சம் வரை நீள்கிறது.
4. ஹுண்டாய் க்ரேட்டா
பாரத் மொபிலிட்டி ஷோவில் ஹுண்டாய் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரேட்ட எஸ்யுவியின் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் எடிஷன், இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிக சதவிகித எத்தனால் திறனைக் கொண்டுள்ளது. இந்த காரின் வழக்கமான எடிஷன் இந்திய சந்தையில் ரூ.10.91 லட்சத்தில் தொடங்கி ரூ.20.06 லட்சம் வரை நீள்கிறது.
ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார்கள் - கூடுதல் விலை ஏன்?
அதிக எத்தனால் கலவைகளால் ஏற்படும் அரிப்பைத் தடுக்க, ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார்களுக்கான இன்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. அதில் ஹீடட் ஃப்யூல் ரெயில்கள், திருத்தப்பட்ட இன்ஜெக்டர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃப்யூல் பம்புகள் ஆகியவை அடங்கும். இதன் காரணமாகவே வழக்கமான எடிஷனை காட்டிலும், ஃப்ளெக்ஸ் ஃப்யூல் எடிஷன்கள் விலையுடர்ந்தவையாக உள்ளன. உதாரணமாக மாருதியின் வழக்கமான வேகன் ஆர் காரின் டாப் எண்ட் வேரியண்டை காட்டிலும், ஃப்ளெக்ஸ் ஃப்யூல் எடிஷன் 86 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























