Ultraviolette F77: அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
உலகிலேயே மிகவும் சவாலான Isle of Man TT பந்தயத்தை நிறைவு செய்த முதல் இந்தியத் தயாரிப்பு பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது அல்ட்ராவயலெட் F77.

ஜூன் 6-ம் தேதி நடைபெற்ற ஐல் ஆஃப் மேன்(Isle of Man) TT மவுண்டன் சர்க்யூட்டில் ஒரு சுற்றை நிறைவுசெய்த முதல் இந்திய உற்பத்தியாளர் என்ற புதிய சாதனையை அல்ட்ராவயலெட் நிறுவனம் படைத்துள்ளது. இந்த சாதனை, ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனைப் புத்தகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அல்ட்ராவயலெட் படைத்த சாதனை என்ன.?
பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிளில், ஐல் ஆஃப் மேன் TT மலைப்பாதைச் சுற்றை முழுமையாக நிறைவுசெய்ததையடுத்து, அவ்வாறு செய்த முதல் இந்திய உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்றுள்ள அல்ட்ராவயலெட், மோட்டார் சைக்கிள் வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதித்துள்ளது.
முன்னாள் ஐல் ஆஃப் மேன் TT வெற்றியாளரான ஜேம்ஸ் ஹில்லியரும், நடிகரும், மோட்டார் சைக்கிள் ஆர்வலருமான ரன்விஜய் சிங்ஹாவும், பலமுறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற அபிஷேக் வாசுதேவும் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றை நிறைவு செய்தனர்.
சாதனைப் புத்தகங்களில் அங்கீகாரம்
இந்த ஆண்டுக்கான TT பந்தயங்களின் இறுதி நாளான கடந்த ஜூன் 6-ம் தேதி அன்று, 5 அல்ட்ராவயலெட் F77 மேக் 2 பைக்குகள், 60.72 கிலோமீட்டர் நீளமுள்ள முழு மலைப்பாதையையும் வெற்றிகரமாக கடந்தன. இதையடுத்து, இந்த சாதனை ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனைப் புத்தகம் ஆகிய இரண்டாலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பந்தயப் பாதை எப்படிப்பட்டது.?
உலகிலேயே மிகவும் சவாலான இந்த பந்தயப் பாதை, குறுகிய பொதுச் சாலைகள், கல் சுவர்கள் மற்றும் மாறுபட்ட உயரங்களின் கலவையாக இருக்கும். இந்த பாதையில் பைக்கை ஓட்டுவதற்கு, துல்லியமும், அதே சமயம், வாகனத்தின் நம்பகத்தன்மையும் சம அளவில் மிகவும் முக்கியம் என்பதால், TT மவுண்டன் கோர்ஸ் ஒரு முடிக்க முடியாத சாலைப் பந்தயக் களமாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
சாதனை படைத்த அல்ட்ராவயலெட்டின் பைக் மாடல் எது.? அதன் சிறப்பு என்ன.?
இந்த வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கும் மோட்டார் சைக்கிள், அல்ட்ராவயலெட்டின் முதன்மை உயர் செயல்திறன் கொண்ட EV பைக்கான F77 மேக் 2 ஆகும். விமான தொழில்நுட்பத்திலிருந்து பெறப்பட்ட மின்சார ட்ரைவ்டிரெய்ன் மூலம் இயக்கப்படும் இந்த பைக், 40bhp சக்தியையும் 100Nm டார்க்கையும் உருவாக்குகிறது.
மேலும், மணிக்கு 155 கிலோமீட்டர் உச்ச வேகத்தையும், WMTC-ஆல் மதிப்பிடப்பட்ட 231 கிலோமீட்டர் பயண வரம்பையும் கொண்டிருப்பதாக கூறப்படும் இந்த பைக்கில், 10.3kWh பேட்டரி பேக் உள்ளது. இது, இந்தியாவில் அதன் பிரிவில் மிகப்பெரியது. அதோடு, இது IP67 தரமதிப்பீடு பெற்ற அலுமினிய உறை மற்றும் செல்-லெவல் ஃபியூஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் இந்திய இருசக்கர வாகனம் இதுதான்.
இந்த பைக்கை, ஒரு சாதாரண 16-ஆம்ப் சாக்யூட் வாயிலாக, 3.0kW சார்ஜர் மூலம், சுமார் இரண்டரை மணி நேரத்தில், 20 சதவீதத்திலிருந்து 80 சதவீதத்திற்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மேலும், F77 Mach 2 பைக்கில், 4 நிலை டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல்-சேனல் ஏபிஎஸ், டைனமிக் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ஹில் ஹோல்ட் மற்றும் வயலெட் ஏஐ-ஆற்றல் பெற்ற ஸ்மார்ட் டெக் இணைப்பு வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















