இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆகஸ்ட் மாத இருசக்கர வாகனங்களின் விற்பனையில், ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

  


இருசக்கர வாகன விற்பனை:


உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்களின் விற்பனை என்பது தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மற்றும் கடந்த ஆண்டில் இதே காலகட்டம் என இரண்டு விதத்திலும் இருசக்கர வாகனங்களில் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் உள்ள முன்னிலையில் உள்ள 6 நிறுவனங்களின் விவரங்களை ஒப்பிடும்போது, உள்நாட்டு விற்பனையில் ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. 


உள்நாட்டு விற்பனை:


உள்நாட்டு சந்தையில் 6 முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் கடந்த மாதத்தில்  14 லட்சத்து 94 ஆயிரத்து 24 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையான 14,74,665 யூனிட்களை விட 1.31 சதவிகிதம் அதாவது 19,359 யூனிட்கள் அதிகமாகும். அதேநேரம் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 12 லட்சத்து 5 ஆயிரத்து 662 யூனிட்களில் இருந்து,  23.92 சதவிகிதம் அதிகரித்து கூடுதலாக 2 லட்சத்து 88 ஆயிரத்து 362 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


கடந்த மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி,  ஆகஸ்ட் 2022 இல் விற்கப்பட்ட 4,50,740 யூனிட்களில் இருந்து ஆண்டுக்கு 4.93 சதவீதம் அதிகரித்து கடந்த மாதம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 947 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  அதேநேரம், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையில் 27.41 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.


இதனிடையே, ஹோண்டா நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 200 யூனிட்களை விற்பனை செய்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆகஸ்ட் 2022 இல் விற்கப்பட்ட 4 லட்சத்து 23 ஆயிரத்து 216 யூனிட்களிலிருந்து 6.61 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜுலை மாத விற்பனையில் 25.78 சதவிகிதமாக இருந்த ஹோண்டாவின் பங்கு ஆகஸ்டில் 30.20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாத விற்பனையில் டிவிஎஸ், பஜாஜ், சுசுகி மற்றும் என்ஃபீல்ட் ஆகிய நிறுவனங்கள் முறையே, 3 முதல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளன.


ஏற்றுமதியில் முன்னிலை:


அதேநேரம், முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியில் மந்தமான விற்பனையை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  2 லட்சத்து 71 ஆயிரத்து 301 யூனிட்களிலிருந்து மொத்த ஏற்றுமதி, 0.35 சதவிகிதம் சரிந்து 2 லட்சத்து 70 ஆயிரத்து 343 யூனிட்களாக பதிவாகியுள்ளன.  அதோடு, ஜுலை மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2 லட்சத்து 86 ஆயிரத்து 58 யூனிட்களை விட 5.49 சதவிகிதம் ஆகஸ்ட் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 211 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 787 யூனிட்களை விட 1.99 சதவிகிதம் அதிகம் ஆகும். அதேநேரம், கடந்த ஜுலை மாதம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 850 வாகனங்களை ஏற்றுமதி செய்த பஜாஜ் நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாயிரத்து 639 வாகனங்களை குறைவாக ஏற்றுமதி செய்து 2.08 சதவிகிதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜுலை மாதத்தில் 77 ஆயிரத்து 77 யூனிட்களை ஏற்றுமதி செய்த நிலையில், கடந்த மாதம் அதன் ஏற்றுமதி 75 ஆயிரத்து 491 ஆக சரிவை சந்தித்துள்ளது. மாத ஏற்றுமதி பட்டியலில் ஹோண்டா, சுசுகி, ஹீரோ மற்றும் என்ஃபீல்ட் ஆகிய நிறுவனங்கள்  முறையே, 3 முதல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI