Toyota Urban Cruiser Ebella EV: டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா, 3 ட்ரிம்களில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது முதல் மின்சார கார் மாடலான அர்பன் க்ரூசர் எபெல்லாவை டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி இ-விட்டாராவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த காரானது உள்நாட்டில், மிட்-சைஸ் மின்சார எஸ்யுவி செக்மெண்டில் ஹுண்டாய் க்ரேட்டா, மஹிந்த்ரா BE 6 மற்றும் வின்ஃபாஸ்ட் VF6 ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது. எபெல்லா கார் மாடல்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் திரும்பப் பெறக்கூடிய ரூ.25 ஆயிரம் ரூபாய் என்ற பிணையத்தொகையை செலுத்தி எபெல்லா காரை முன்பதிவு செய்யலாம்.
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா - பேட்டரி, ரேஞ்ச்
எபெல்லா காரானது 144hp மற்றும் 189Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 49kWh சிறிய பேட்டரிட்யையும், 174hp மற்றும் 189Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 61kWh பெரிய பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரே அடியாக 543 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்திய சந்தையில் டொயோட்டாவின் போர்ட்ஃபோலியோ தற்போது பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் EV கார் மாடல்கள் என விரிவடைந்துள்ளது. எபெல்லா கார் மாடலானது E1, E2 மற்றும் E3 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. E1 சிறிய 49kWh பேட்டரி ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது. அதேநேரம் மற்ற இரண்டு வேரியண்ட்களான E2 மற்றும் E3 ஆனது 61kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா - வெளிப்புற டிசைன்
மாருதியின் இ - விட்டாராவை அடிப்படையாக கொண்டு எபெல்லா உருவாக்கப்பட்டாலும், வடிவமைப்பு அடிப்படையில் சற்றே தனித்துவமானதாக காட்சியளிக்கிறது. அதன்படி, நேர்த்தியான பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், இரண்டு முனைகளிலும் செங்குத்தான ஏர் வெண்ட்களை கொண்ட மென்மையான முன்புற பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது. கட்டமைப்பு முழுவதும் பாடி க்ளாடிங், பின்புற கதவுகளுக்கான கைப்பிடிகள் சி பில்லருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் இருப்பதை போன்றே பின்புற டெயில் லைட்களும் லைட் பாருடன் இணைக்கப்படவில்லை.
5 ஒற்றை வண்ண மற்றும் 4 இரட்டை வண்ண விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கெஃபே ஒய்ட், ப்ளூயிஷ் ப்ளாக், கேமிங் க்ரே, ஸ்போர்டின் ரெட் மற்றும் எண்டிசிங் சில்வர் ஆகிய 5 ஒற்றை வண்ணங்கள் உள்ளன. அதேநேரம் இரட்டை வண்ணங்களில் கெஃபே ஒய்ட், லேண்ட் ப்ரீஸ் க்ரீன், ச்போர்டின் ரெட் மற்றும் எண்டிசிங் சில்வர் ஆகிய ஆப்ஷன்களுக்கும் ரூஃப் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது.
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா - உட்புற அம்சங்கள்
டொயோட்டாவின் மற்ற மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மாருதி மாடல்களைப் போலவே, இந்த கார்களுக்கான உட்புறத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எபெல்லாவின் கேபின் e விட்டாராவின் கேபினை நெருக்கமாகப் பிரதிபலிக்கிறது. அதன்படி 10.1-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் காலநிலை கட்டுப்பாடு, வெண்டிலேடட் முன் இருக்கைகள், ஸ்லைடிங், ரிக்ளைனிங் மற்றும் 40:20:40 ஸ்பிளிட்-ஃபோல்டிங் ரீட் இருக்கைகள், 12-வண்ண ஆம்பியண்ட் விளக்குகள், JBL சவுண்ட் சிஸ்டம் என பல அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்டீயரிங் ஏசி வென்ட்கள் மற்றும் கதவு கைப்பிடிகளில் மாறுபட்ட வெள்ளி சிறப்பம்சங்கள் இருந்தாலும், கேபினில் டூயல் டோன் பழுப்பு மற்றும் கருப்பு வண்ண ஆப்ஷன் கிடைக்கிறது.
அர்பன் க்ரூசர் எபெல்லா - பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எபெல்லாவின் அனைத்து வேரியண்ட்களிலும் 7 ஏர் பேக்குகள் மற்றும் 4 சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் என்பது நிலையான அம்சங்களாக வழங்கப்படுகிறது. இதுபோக 360 டிகிரி கேமரா, ஃப்ரண்ட் பார்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், வேரியண்ட் அடிப்படையில் மாறுபடக்கூடிய அகவுஸ்டிக் வெஹைகிள் அலெர்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எபெல்லாவின் டாப் ஸ்பெக் வேரியண்டானது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உடன் லெவல் 2 ADAS வசதியை கொண்டுள்ளது.
மின்சார கார்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான 500 நிலையங்களை கொண்டிருப்பதாகவும், பேட்டரிக்கு 8 வருடங்கள் வாரண்டி வழங்குவதாகவும், பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் 60 சதவீத திரும்பப் பெறும் உத்தரவாதத் திட்டத்தை வழங்குவதாகவும் டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அர்பன் க்ரூசர் எபெல்லா - அறிமுகம், விலை
எபெல்லா கார் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தினாலும், எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற தகவல் இன்னும் ரகசியமாகவே தொடர்கிறது. அடுத்த சில வாரங்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்போது இதற்கான விலை வரம்பு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்த காரின் விலை ரூ.19 லட்சத்தில் தொடங்கி ரூ.24.5 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI