Fortuner Rival: 5 வருடங்களுக்குப் பிறகு கம்பேக் - ஃபார்ட்சுனர் மீது பந்தயம் அடிக்குமா புது எஸ்யுவி? ஆஃப்-ரோட் சகாக்கள்
Toyota Fortuner Rival: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா ஃபார்ட்சுனருக்கு போட்டியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மிட்சுபிஷியின் பஜேரோ (Mitsubishi Pajero) மீண்டும் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Toyota Fortuner Rival: இந்திய சந்தையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரவுள்ள மிட்சுபிஷியின் பஜேரோ எஸ்யுவியின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஃபார்ட்சுனர் போட்டியாளரின் கம்பேக்
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக விலகியிருந்த நிலையில், மிட்சுபிஷியின் பஜேரோ மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. வலுவான சாலை தோற்றம் மற்றும் ஆஃப்-ரோட் செயல்பாடுகளுக்காக அறியப்பட்ட இந்த காரானது, ஒரு காலத்தில் உலகளவில் எஸ்யுவி பிரியர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருந்தது. இந்நிலையில் மிட்சுபிஷியானது டொயோட்டா ஃபார்ட்சுனர், ஃபோர்ட் எவரெஸ்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக, தனது புதிய தலைமுறை பஜேரோவை உருவாக்கி வருகிறதாம். வரவிருக்கும் மாடலானது செயல்திறன், வசதிகள் மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பது ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தும் அதே வேளையில், மெக்கானிக்கல் அடிப்படையிலும் பெரிய மாற்றங்கள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்சுபிஷி பஜேரோ எஸ்யுவி டிசைன்
பஜேரோவின் மிகப் பெரிய மேம்பாடுகளில் ஒன்றாக அதன் கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட உள்ள ப்ளாட்ஃபார்ம் ஆகும். அடுத்த தலைமுறை பஜேரோ, சமீபத்திய மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக்கின் அதே லேடர்-ஃப்ரேம் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது எஸ்யுவி தனது அடிப்படைக்கு திரும்புவதைக் குறிக்கிறது. முந்தைய பஜேரோ மாடல்கள் லேடர்-ஃப்ரேம் கட்டமைப்பைப் பயன்படுத்தின. தொடர்ந்து வந்த எடிஷன்களில் மிட்சுபிஷி வேறு ஒரு அமைப்புக்கு மாறியது. தற்போதைய எடிஷனுக்கான புதிய ப்ளாட்ஃபார்ம், ஆஃப்-ரோடு செயல்திறனை மேம்படுத்துவதோடு, நிறுவனத்தின் மேம்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைட்டனுடன் அதன் அடிப்படைக் கட்டமைப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், மிட்சுபிஷியால் தனது சமீபத்திய ஃபோர் வீல் ட்ரைவ் தொழில்நுட்பங்களையும், நிரூபிக்கப்பட்ட இன்ஜின் அம்சங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.
மிட்சுபிஷி பஜேரோ - இன்ஜின் விவரங்கள்
புதிய பஜேரோவில், ட்ரைட்டானில் பயன்படுத்தப்படும் 2.4-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் அப்படியே தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதே சந்தையில் இந்த இன்ஜின் ஆனது 184 PS சக்தியை உற்பத்தி செய்யும் ஸ்டாண்டர்ட் வேரியண்டாகவும், 204 PS சக்தியை உருவாக்கும் அதிக சக்திவாய்ந்த ட்வின்-டர்போ வேரியண்டாகவும் கிடைக்கிறது . 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில், பல ஆண்டுகளாக ஆஃப்-ரோட் ஆர்வலர்கள் மத்தியில் வலுவான மதிப்பை உருவாக்கியுள்ள மிட்சுபிஷியின் சூப்பர் செலக்ட் II ஃபோர்-வீல்-டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்சுபிஷி பஜேரோ - கூடுதல் ப்ரீமியம் அம்சங்கள்:
புதிய பஜேரோ, ட்ரைட்டனின் பாகங்களை அப்படியே எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தனக்கென பிரத்யேகமான சஸ்பென்ஷன் அமைப்பைப் பெறும் என்று கூறப்படுகிறது. கரடுமுரடான பாதைகளில் செல்லும் திறனில் சமரசம் செய்யாமல், மேலும் வசதியான ஓட்டுநர் அனுபவத்தை வழங்க உள்ளதாம். உட்புறத்தில் சிறந்த பொருட்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் உயர்தர அம்சங்களுடன் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மிட்சுபிஷியின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் பஜேரோவை ஒரு முதன்மை எஸ்யூவியாக நிலைநிறுத்தப்பட உள்ளதாம்.

மிட்சுபிஷி பஜேரோ - டிசைன் விவரங்கள்
மிட்சுபிஷி வெளியிட்ட விவரங்கள், வரவிருக்கும் பஜேரோவின் முற்றிலும் புதிய தோற்றத்தை உணர்த்துகின்றன. முன்பக்கத்தில், முழு அகல எல்இடி லைட்பார் மற்றும் புதிய மிட்சுபிஷி மாடல்களால் ஈர்க்கப்பட்ட ஒரு நவீன லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த எஸ்யூவி விசாலமான மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடும்பப் பயன்பாடு மற்றும் நீண்ட தூரப் பயணம் ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக அமையும்.
பஜேரோ வெளியீடு எப்போது?
பஜேரோ தனது எதிர்கால தயாரிப்பு உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை மிட்சுபிஷி ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இந்த எஸ்யூவி வரும் மாதங்களில் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடப்பாண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாம். இதன் விலை 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான விலை வரம்பை பெறக்கூடுமாம். பிரதான போட்டியாளரான ஃபார்ட்சுனரின் விலை ரூ.34.76 லட்சத்தில் தொடங்கி ரூ.50.46 லட்சம் வரை நீள்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























