Toyota Cars: எஸ்யுவி, ஹைப்ரிட், எம்பிவி.. 4 கார் மாடல்களின் விலையை உயர்த்திய டொயோட்டா - எதற்கு? எவ்வளவு?
Toyota Cars Price Hike: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைரைடர், க்ளான்ஸா உள்ளிட்ட 4 கார் மாடல்களுக்கான விலையை உயர்த்தி டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Toyota Cars Price Increase: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டாவின் எந்தெந்த கார் மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
விலையை உயர்த்திய டொயோட்டா நிறுவனம்:
கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி திருத்த அறிவிப்புகளின்படி, டொயோட்டா நிறுவனமும் விலை குறைப்பை அறிவித்தது. இந்நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் தனது சில கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. ப்ராண்டின் நேரடி கார் மாடல்கள் மீது இல்லாமல், மாருதி சுசூகியிடமிருந்து ரீபேட்ஜ் செய்யப்பட்ட வாகனங்களின் மீது மட்டும் இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி டெய்சர், க்ளான்ஸா, ஹைரைடர் மற்றும் ரூமியன் ஆகிய கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எந்த காருக்கு, எவ்வளவு விலை உயர்வு?
1. டொயோட்டா க்ளான்ஸா
மாருதி பலேனோ கார் மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட க்ளான்ஸா மாடலின் விலை, 15 ஆயிரத்து 800 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் டொயோட்டாவின் போர்ட்ஃபோலியோவில் எண்ட்ரி லெவல் கார் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கும் க்ளான்ஸா காரின் விலை வரம்பானது, ரூ.6.46 லட்சத்தில் தொடங்கி, ரூ.9.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது.

2. டொயோட்டா அர்பன் க்ரூசர் டெய்சர்
மாருதி ஃப்ராங்க்ஸ் கார் மாடலின் சகோதராக , அந்த ஹேட்ச்பேக்கின் க்ராஸ் ஓவர் எடிஷனாகவும் சந்தைப்படுத்தப்பட்ட, டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் மாடலின் விலையானது 16 ஆயிரத்து 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரின் விலை வரம்பானதுது, தற்போது ரூ.7.25 லட்சத்தில் தொடங்கி ரூ.12.39 லட்சம் வரை நீள்கிறது.

3. டொயோட்டா ரூமியன்
மாருதி எர்டிகா கார் மாடலின் ரிபேட்ஜ்ட் வெர்ஷனான ரூமியன் மாடலின் விலை, 16 ஆயிரத்து 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட காரானது, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில், ரூ.10.51 லட்சத்தில் தொடங்கி ரூ.13.86 லட்சம் வரை நீள்கிறது.

4. டொயோட்டா அர்பன்க்ரூசர் ஹைரைடர்
மாருதி க்ராண்ட் விட்டாரா உடன் மெக்கானிக்கல் அம்சங்கள் அடிப்படையில் ஒத்துப்போகும், டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் மாடலின் விலை அதிகபட்சமாக 21 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் வேரியண்ட்கள் என பல தரப்பட்ட எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.20.19 லட்சம் வரை நீள்கிறது.
டொயோட்டா கார்களின் விலைமாற்ற ஒப்பீடு
| கார் மாடல் | கார் பிரிவு | புதிய விலை (எக்ஸ்-ஷோரூம்) | விலையேற்றம் | மைலேஜ் (ARAI - தரவுகளின்படி) KMPL |
| டொயோட்டா க்ளான்ஸா | ஹேட்ச்பேக் | ரூ.6.46 - ரூ.9.44 லட்சம் | ரூ.15,800 வரை | 22-30 |
| டொயோட்டா அர்பன் க்ரூசர் டெய்சர் | காம்பேக்ஸ் எஸ்யுவி | ரூ.7.25 - ரூ.12.39 லட்சம் | ரூ.16,400 வரை | 19-28 |
| டொயோட்டா ரூமியன் | எம்பிவி | ரூ.10.51 - ரூ.13.86 லட்சம் | ரூ.16,400 வரை | 20-26 |
| டொயோட்டா அர்பர்ன் க்ரூசர் ஹைரைடர் | மிட்-சைஸ் ஹைப்ரிட் எஸ்ய்வி | ரூ.10.99 - ரூ.20.19 லட்சம் | ரூ.21,000 வரை | 20-27 |
டொயோட்டாவின் மற்ற கார்களின் விலை விவரங்கள்:
டொயோட்டா நிறுவனம் சார்பில் உள்நாட்டு சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைக்ராஸ், ஹிலக்ஸ், ஃபார்ட்சுனர், கேம்ரி, வெல்ஃபையர் மற்றும் லேண்ட் க்ரூசர் 300 ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
- இன்னோவா க்ரிஸ்டா டீசல் - ரூ.18.85 லட்சம் - ரூ.25.67 லட்சம்
- இன்னோவா ஹைக்ராஸ் பெட்ரோல், ஹைப்ரிட் - ரூ.18.33 லட்சம் - ரூ.32.38 லட்சம்
- ஹிலக்ஸ் டீசல் - ரூ.28.02 லட்சம் - ரூ.35.37 லட்சம்
- ஃபார்ட்சுனர் பெட்ரோல், டீசல் - ரூ.34.16 லட்சம் - ரூ.49.59 லட்சம்
- கேம்ரி ஹைப்ரிட் - ரூ.47.48 லட்சம் - ரூ.47.62 லட்சம்
- வெல்ஃபைடர் ஹைப்ரிட் - ரூ.1.19 கோடி - ரூ.1.29 கோடி
- லேண்ட் க்ரூசர் 300 டீசல் - ரூ.2.15 கோடி - ரூ.2.24 கோடி
























