Cheapest Electric Cars: 421KM ரேஞ்ச், 6 ஏர் பேக்குகள், சன்ரூஃப்..! 5 மலிவான மின்சார கார்கள் - ரூ.4.69 லட்சத்துகே ஸ்டார்ட்
Cheapest Electric Cars: இந்தியாவில் வாடகை பேட்டரி (BaaS) அடிப்படையில் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 மின்சார கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Cheapest Electric Cars: இந்தியாவில் 420KM ரேஞ்ச், 6 ஏர் பேக்குகள் மற்றும் சன்ரூஃப் வசதியுடன் மலிவு விலையில் கிடைக்கும் 5 மின்சார கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
BaaS திட்டத்தில் மலிவு விலை மின்சார கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் விற்பனை என்பது தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது. ஆனால், ஆரம்ப முதலீட்டு விலை அதிகமாக இருப்பதால், பயனர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றனர். அந்த பிரச்னைக்கு தீர்வாக பல உற்பத்தி நிறுவனங்களும் BaaS எனப்படும் வாடகை முறையில் பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளன. இதன் மூலம் காரை மட்டும் முழு தொகையை செலுத்தி சொந்தமாக்கிக் கொண்டு, பேட்டரியை தேவை அடிப்படையில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் காரை சொந்தமாக்கும் செலவு என்பது பெருமளவில் குறைகிறது. இந்நிலையில் உள்ளூரி சந்தையில் BaaS திட்டத்தில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாப் 5 மலிவு விலை மின்சார கார்கள்:
1. டாடா டியாகோ EV
டாடா டியாகோவின் மின்சார எடிஷனானது இந்தியாவில் மிகவும் பிரபலமான தொடக்க நிலை ஹேட்ச்பேக் மாடலில் ஒன்றாகும். ப்ராண்டின் வாடகை பேட்டரி ஆப்ஷன் திட்டத்தின் மூலம் இந்த காரானது ரூ.4.69 லட்சம் என்ற தொடக்க விலையிலேயே (எக்ஸ் - ஷோரூம்) கிடைக்கிறது. பேட்டரியானது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.69 என்ற கட்டணத்தில் கிடைக்கிறது. டியாகோவின் வெளிப்புறமானது தனித்துவமான மின்சார க்ரில், ஏரோட்ரைவ் அலாய் வீல்கள் மற்றும் ஸ்லீக் முகப்பு விளக்குகளை கொண்டுள்ளன. இவை காருக்கு மாடர்ன் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கிறது. உட்புறத்தில் கேபினானது டூயல் டோன் தீம், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ப்ரீமியம் ஃபினிஷிங்கை கொண்டு ஒட்டுமொத்த மதிப்பை உயர்த்துகிறது. 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக டூயல் ஏர்பேக்குகள் மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உள்ளது. 19.2KWh மற்றும் 24KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, வேரியண்ட் அடிப்படையில் 250 தொடங்கி 315 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. எம்ஜி கோமெட் EV
பரபரப்பான நகர போக்குவரத்து மற்றும் பார்கிங் பிரச்னகளை எளிதாக கையாளவதற்கு ஏதுவாக, அல்ட்ரா காம்பேக்ட் மின்சார காராக எம்ஜி கோமெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடகை பேட்டரி ஆப்ஷன் அடிப்படையில் ரூ.4.99 லட்சம் என்ற விலையில் இந்த கார் கிடைக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.2 என்ற கட்டணத்தில் இதன் பேட்டரியை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை அம்சங்கள், பாக்ஸி தோற்றம், முழு அகலத்திற்கும் முன் மற்றும் பின்புறங்களில் LED லைட் பார்கள், தனித்துவமான 2 கதவுகள் இதற்கு வித்தியாசமான லுக்கை வழங்குகிறது. உட்புறத்தில் குறைவான அம்சங்கள் இருந்தாலும் ப்ரீமியம் உணர்வை வழங்குகிறது. அதன்படி 10.25 இன்ச் டூயல் இண்டக்ரேடட் டிஸ்பிளே செட்-அப்பானது இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரை கலவையாக கொண்டுள்ளது. இதுபோக வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் கேலெஸ் என்ட்ரி வசதிகளும் உள்ளன. பாதுகாப்பிற்காக முன்புறத்தில் இரண்டு ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS, டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆகியவை உள்ளன. 17.3KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டாடா பஞ்ச் EV
டாடா பஞ்ச் EV என்பது இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான மைக்ரோ எஸ்யுவிக்களில் ஒன்றின் முழு மின்சார எடிஷனாகும். ப்ராண்டின் பிரத்யேக acti.ev ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட எஸ்யுவி, BaaS திட்டத்தின் கீழ் ரூ.6.49 லட்சம் என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. கம்பீரமான முன்பக்க பம்பர், கனெக்டட் LED பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்போர்ட்டியான க்ளாடிங் ஆகியவை இதற்கு ஒரு கரடுமுரடான தோற்றத்தை அளிக்கின்றன. உட்புறத்தில், மென்மையான தொடு உணர்வு கொண்ட பொருட்கள் மற்றும் டூயல்-டோன் லேஅவுட்டைக் கொண்டு ப்ரீமியம் உணர்வை தருகிறது.
10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, காற்றோட்ட இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. ஸ்டேண்டர்டாக ஆறு ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதில் கிடைக்கும் 25kWh மற்றும் 35kWh பேட்டரி பேக்குகளை, முழுமையாக சார்ஜ் செய்தால் வேரியண்ட்டைப் பொறுத்து 315 முதல் 421 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது.

4. சிட்ரோயன் eC3 (eC3X) EV
சிட்ரோயன் eC3 (eC3X) என்பது நடைமுறைக்கு உகந்த, குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் ஆகும். இது அதன் பிரிவில் முதன்மையான பயண வசதி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புக்காக அறியப்படுகிறது. BaaS திட்டத்தின் கீழ், இது ரூ.6.89 லட்சம் என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது, பேட்டரிக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.26 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ், ரூஃப் ரெயில்கள் மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. உட்புறத்தில் 10.25 இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டல் ட்ரைவர் கிளஸ்டர், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் EBD உடன் கூடிய ABS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் 29.2kWh ஏர்-கூல்ட் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 320-325 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கியா சைரோஸ் EV
கியா சைரோஸ் EV என்பது ப்ரீமியம் சப்-காம்பாக்ட் எலெக்ட்ரிக் SUV பிரிவில் ஒரு நவீன மாடலாகும். வாடகை பேட்டரி ஆப்ஷனில் ரூ.7.99 லட்சம் என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. பேட்டரிக்கு ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.3.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் உள்ள ஸ்டார் மேப் LED விளக்குகள், கதவுகளுடன் சமமாகப் பொருந்தும் கைப்பிடிகள் மற்றும் நேர்த்தியான ஏரோடைனமிக் வெட்டுகள் ஆகியவை தனித்துவமான சாலைத் தோற்றத்தை அளிக்கின்றன. உட்புறத்தில், உயர் தொழில்நுட்பம் கொண்ட பிரீமியம் கேபினை வழங்குகிறது.

அதன்படி, பனோரமிக் டூயல் ஸ்க்ரீன் சிஸ்டம், லெவல் 2 ADAS, காற்றோட்ட இருக்கைகள், போஸ் ஆடியோ சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் வெஹைக்கிள்-டு-லோட் (V2L) தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 42kWh மற்றும் 51.4kWh பேட்டரி பேக்குகளை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 450 கிலோ மீட்டருக்கும் அதிகமான பயண வரம்பை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























