எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் தனது டெஸ்லா மாடல் 'Y' காரை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் இந்த காருக்கான புக்கிங் அதிக அளவில் இருக்கும் என எலான் மஸ்க் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பை பொய்யாக்கி, குறைந்த அளவிலான கார்களே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு காரணம் என்ன.? அலசுவோம்.
சுமார் 600 கார்கள் மட்டுமே முன்பதிவு
இந்தியாவில் தனது டெஸ்லா மின்சார காருக்கு அதிக அளவில் ஆதரவு கிடைக்கும் என நம்பிய எலான் மஸ்க், வருடத்திற்கு 2,500 கார்களை இறக்குமதி செய்ய முடிவு செய்திருந்தார். ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து, இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு, மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் வெறும் 600 மாடல் 'Y' கார்களே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மந்தமான முன்பதிவிற்கு காரணம் என்ன.?
இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள மாடல் Y காரின் தொடக்க விலை, 59 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உங்களுக்கான காரை நீங்கள் கஸ்டமைஸ் செய்யும்போது, கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக பிரத்யேக வண்ணம் மற்றும் செல்ஃப் ட்ரைவிங் ஆப்ஷன்களை பெற, ஒரு பைக்கின் விலைக்கு நிகரான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது இந்திய பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெஸ்லா கார் மாடலின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம், அதன் செல்ஃப் ட்ரைவிங்(தானியங்கி) அம்சத்தால் உருவானதுதான். ஆனால், அந்த அம்சத்தை முழுமையாக தங்களது டெஸ்லா காரில் பெற, பயனர்கள் கூடுதலாக 6 லட்சம் ரூபாயை செலவிட வேண்டும். அதாவது, இந்த அம்சத்திற்கான கூடுதல் கட்டணமானது, ஒரு புதிய சிறிய காரின் விலையை கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் சுமார் 25 லம்சம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், டெஸ்லா காரின் விலையோ அதைவிட கிட்டத்தட்ட 3 மடங்க வந்துவிடுகிறது. இதனால், அதிக விலை மற்றும் சமீபத்திய வரி விதிப்பு ஆகியவற்றால், டெஸ்லா மாடல் 'Y‘ காரின் முன்பதிவு மந்தமடைந்ததாக கூறப்படுகிறது.
டெஸ்லா காரின் விலை என்ன.?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டெஸ்லாவின் மாடல் Y காரானது, ரியர் வீல் ட்ரைவ் மற்றும் ரியர் வீல் ட்ரைவ் லாங்க் ரேஞ்ச் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதில் முதல் வேரியண்டின் விலை ரூ.59.89 லட்சம் மற்றும் 2-வது வேரியண்டின் விலை ரூ.67.89 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள 60KWh மற்றும் 75KWh பேட்டரி பேக்குகளை முழுமையாக சார்ஜ் செய்தால், அவை முறையே 500 மற்றும் 622 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுத்த மக்கள் நிறைந்த இந்திய சந்தையில் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு காரை வாங்குபவர்களே அதிகம். அப்படி இருக்கையில், காரின் விலையே அதிகமாக இருக்கும்போது, அது இல்லாமல் ஒவ்வொரு அம்சத்திற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், டெஸ்லா மாடல் Y மின்சார கார் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
விலை குறித்து மஸ்க் மீண்டும் யோசித்தால் மட்டுமே, இந்திய சந்தையில் தனது காரை விற்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
Car loan Information:
Calculate Car Loan EMI