Tata Harrier EV Features: ஹாரியரில் உள்ள சில அம்சங்களானது டாடா கார்களுக்கே புதியது மற்றும் சில இந்த செக்மெண்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
டாடா ஹாரியர் EV:
டாடா நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த சில மாதங்களாக சற்றே சரிவை சந்தித்து வந்தாலும், நம்பகத்தன்மை மிக்க நிறுவனம் எனும் பிராண்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனை மேம்படுத்தும் விதமாக தான், அண்மையில் ஹாரியர் மின்சார எடிஷனை அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்யுவியின் மொத்த வேரியண்ட்களுக்குமான விலை அறிவிக்கப்படாவிட்டாலும், அதில் இடம்பெற்றுள்ள மொத்த அம்சங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. ட்ரான்ஸ்பரண்ட் மோடுடன் கூடிய 360 டிகிரி கேமரா
ஹாரியர் மின்சார எடிஷனில் புதியதாக 540 டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காரில் உள்ள 360 டிகிரி சரவுண்ட் வியூ மானிட்டரில், வாகனத்திற்கு கீழே என்ன உள்ளது என்பதை கூட தெளிவாக காண முடியும். இந்த புதிய அம்சமானது ட்ரான்ஸ்பரன் மோடில் பயனளிக்கிறது. அதன்படி, ஆஃப்-ரோட் பயணத்தை மேற்கொள்ளும்போதும், பெரிய மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை கடக்கும்போது ஓட்டுனருக்கு இந்த அம்சம் பலனளிக்கிறது.
2. இரட்டை மோட்டார் ஆல்-வீல் ட்ரைவ்:
மாஸ் மார்கெட் செக்மெண்டில் இரட்டை மோட்டார் ஆல்-வீல் ட்ரைவ் அமைப்பை கொண்ட, முதல் மின்சார கார் என்ற பெருமை ஹாரியர் EV-யையே சேரும். ஒவ்வொரு ஆக்சிலிலும் ஒவ்வொரு மோட்டார் இடம்பெற்றுள்ளது. முன்புற மோட்டர் 158PS மற்றும் பின்புற மோட்டார் 238PS ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இரண்டு மோட்டார்களின் இழுவை திறன் என்பது கூட்டாக 504Nm-ஐ அடைகிறது. இதன் காரணமாக, ஹாரியரானது பூஸ்ட் மோடை பயன்படுத்தி பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 6.3 விநாடிகளில் எட்டும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. 6 மல்டி டெரைன் மோட்ஸ்
இன்ஜின் அடிப்படையிலான ஹாரியரானது நார்மல், ரஃப் மற்றும் வெட் என 3 ட்ரைவிங் மோட்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் மின்சார எடிஷனில் நார்மல், மட் ரட்ஸ், ராக் கிராவ்ல், சேண்ட், ஸ்னோ/கிராஸ் மற்றும் கஸ்டம் என மொத்தம் 6 மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மோசமான மேற்பரப்புகளில் எளிதாக பயணிக்க உதவும் வகையில் இந்த மோட்களானது பவர் டெலிவெரி, இழுவை திறன் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஆகியவற்றில் மாற்றம் செய்ய உதவுகின்றன.
4. பெரிய 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
ஹாரியர் மின்சார எடிஷன் மூலம் புதிய 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த டாடா காரில் இருப்பதை காட்டிலும் மிகப்பெரியதாகும். அதில் உள்ள சாம்சங்கின் நியோ QLED டிஸ்பிளேவானது பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இன்ஜின் அடிப்படையிலான ஹாரியரானது 12.3 இன்ச் டிஸ்பிளே மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5. டிஜிட்டல் IRVM
ஹாரியர் EV காரில் ஷார்க் ஃபின் ஆண்டெனாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கூடுதல் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த கேமராவிலிருந்து வரும் தகவல்கள் டிஜிட்டல் IRVM-ல் காட்டப்படும், இது காரின் பின்னால் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காண உதவுகிறது. இது ஒரு ரெக்கார்டிங் செயல்பாட்டையும் பெறுகிறது மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக டேஷ்கேமாக செயல்படுகிறது.
6. ஆட்டோ பார்க் அசிஸ்ட்
ஹாரியர் மின்சார எடிஷனானது பிரபலமான ஆட்டோ பார்க் அசிஸ்ட் அம்சத்தை கொண்டுள்ளது. இதன் மூலம், த்ராட்டில் மற்றும் ஸ்டியரிங் வீலிற்கு எந்தவித இன்புட்களையும் கொடுக்காமலேயே, எஸ்யுவியை எளிதாக பார்க் செய்ய முடியும். இந்த அம்சமானது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திராவின் BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டு மின்சார கார்களிலும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
7. சம்மன் மோட்
வெளியே நின்றபடியே, சாவியை கொண்டு காரை முன்புறமாகவும், பின்புறமாகவும் காரை நகர்த்திக் கொள்ள சம்மன் மோட் உதவுகிறது. இந்த வசதி எந்தவொரு டாடா காரிலும் முன்பு இருந்ததில்லை. பார்க்கிங் இடங்களில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI