டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 19 அன்று சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் பல்வேறு கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. எந்த மாடல்கள் இந்தப் பட்டியலில் இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத நிலையில், டாடா டியாகோ மாடலின் சி.என்.ஜி எரிபொருள் மாடல் இதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டாடா டியாகோவின் சி.என்.ஜி மாடலுக்கான முன்பதிவுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த முன்பதிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. 


சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் முதல் மாடலாக டாடா டியாகோ சி.என்.ஜி மாடல் இந்த ஆண்டு டாடா நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த மாடலோடு கூடுதலாக டாடா நிறுவனம் sedan வகை மாடலான டிகோர், ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை பாடலான அல்ட்ரோஸ், SUV மாடலான நெக்ஸான் ஆகியவையும் சி.என்.ஜி எரிபொருளின் கீழ் இயங்கும் மாடல்களாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சி.என்.ஜி தொழில்நுட்பத்தைத் தவிர, டாடா மோட்டார்ஸ் வெளியிடும் டியாகோ சி.என்.ஜி மாடலில் வேறு எதுவும் பெரிய மாற்றங்கள் இருக்காது எனக் கூறப்படுகிறது. வழக்கமான ICE மாடலில் இருந்து இந்த மாடலை வேறுபடுத்த இந்த மாடலில் தனியாக iCNG என்ற பேட்ஜ் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாடல் குறித்த வேறு எந்தத் தொழில்நுட்ப ரீதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த மாடலில் ஒரு கிலோ சி.என்.ஜி எரிபொருளுக்குச் சுமார் 30 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


டாடா டியாகோ சி.என்.ஜி மாடலிலும் இதன் வழக்கமான மாடலைப் போலவே 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக 85 BHP, 113 Nm உச்சபட்ச டார்க் ஆற்றலைக் கொண்ட 5 ஸ்பீட் மேனுவல் எஞ்சினாகவும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. 


டாடா டியாகோ சி.என்.ஜி மாடலைப் பொருத்த வரையில், இது மாருதி வேகன் ஆர் சி.என்.ஜி, ஹுண்டாய் சேண்ட்ரோ சி.என்.ஜி முதலான மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 



கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் தேவை அதிகளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கணக்கின் படி, அதற்கு முந்தைய 8 மாதங்களில் நாடு முழுவதும் சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் சுமார் 1.36 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 


டாடா மோட்டார்ஸ் வெளியிடும் சி.என்.ஜி மாடல்கள் தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் எஞ்சின் மாடல்களை விட சுமார் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI