இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு என்பது இப்போது ஒரு புதிய அலையாக மாறியுள்ளது. பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, பலரும் தங்கள் செல்போனைப் போலவே காரையும் இரவு நேரத்தில் சார்ஜ் செய்ய விரும்புகின்றனர். பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அதிகரித்தாலும், 80 சதவீத சார்ஜிங் வீடுகளிலேயே நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புதிய EV வாங்குபவர்கள் வீட்டிலேயே சார்ஜர் அமைப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
இரண்டு வகை சார்ஜிங் ஆப்ஷன்கள்
பொதுவாக, நீங்கள் ஒரு EV வாங்கும் போது நிறுவனங்களே இரண்டு வகையான சார்ஜர்களை வழங்குகின்றன:
போர்ட்டபிள் சார்ஜர்: இதை உங்கள் வீட்டில் உள்ள சாதாரண 15A சாக்கெட்டில் நேரடியாக இணைக்கலாம். பயன்படுத்துவது எளிது, ஆனால் சார்ஜிங் வேகம் மிகவும் குறைவு. முழுமையாக சார்ஜ் ஆக 8 முதல் 15 மணிநேரம் வரை ஆகலாம்.
சுவரில் பொருத்தப்படும் AC சார்ஜர் : இது உங்கள் பார்க்கிங் பகுதியில் சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படும். இதன் மூலம் 4 முதல் 8 மணிநேரத்திற்குள் காரை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.
நிறுவுவதற்குத் தேவையானவை
வீட்டில் சார்ஜர் நிறுவும் முன் உங்கள் வீட்டின் மின் சுமைத் திறனை (Power load capacity) சரிபார்க்க வேண்டும்:
கனெக்ஷன்: 3.3kW சார்ஜர்களுக்கு சிங்கிள்-பேஸ் (Single-phase) இணைப்பு போதுமானது. 7kW போன்ற அதிவேக சார்ஜர்களுக்கு த்ரீ-பேஸ் (Three-phase) இணைப்பு சிறந்தது.
எர்த் கனெக்ஷன் : இது மிக முக்கியமானது. சரியான 'எர்த்' வசதி இல்லை என்றால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனி சர்க்யூட்: சார்ஜருக்கென தனி சர்க்யூட் மற்றும் MCB ஸ்விட்ச் அமைப்பது சிறந்தது. இது மற்ற வீட்டு உபயோகப் பொருட்களின் மின் அழுத்தத்தைப் பாதிக்காது.
செய்ய வேண்டியவை
நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டே சார்ஜரை நிறுவ வேண்டும்.
சார்ஜரை காரின் பார்க்கிங் இடத்திற்கு அருகிலேயே நிறுவுங்கள். வயர்களை நீண்ட தூரம் இழுப்பது சேதத்தை விளைவிக்கும்.
சார்ஜரை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க ஒரு நிழற்குடையின் (Shed) கீழ் வைப்பது அதன் ஆயுளை நீட்டிக்கும்.
மின் நுகர்வை கண்காணிக்க 'ஸ்மார்ட் சார்ஜிங்' செயலிகளைப் பயன்படுத்தலாம்.
செய்யக் கூடாதவை
எக்ஸ்டென்ஷன் வயர்கள்: சாதாரண எக்ஸ்டென்ஷன் வயர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இவை EV சார்ஜிங் பாரத்தைத் தாங்க முடியாமல் உருகவோ அல்லது தீப்பிடிக்கவோ வாய்ப்புள்ளது.
மின் சுமை: ஏசி (AC) அல்லது கீசர் போன்ற அதிக மின்சாரம் எடுக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சார்ஜிங் வேகம் குறையாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
சுயமாக பழுது பார்த்தல்: சார்ஜரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், நீங்களாகவே பழுது பார்க்க முயற்சிக்காதீர்கள்.
அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் கவனத்திற்கு..
அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் முதலில் தங்கள் குடியிருப்பு சங்கத்திடம் (Housing Society) அனுமதி பெற வேண்டும். தற்போது அரசு விதிகளின்படி, குடியிருப்புகளில் சார்ஜர் அமைக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் சொந்த மீட்டரிலிருந்தோ அல்லது தனி சப்-மீட்டர் மூலமாகவோ இதற்கான இணைப்பைப் பெறலாம்.செலவு எவ்வளவு ஆகும்?
பல நிறுவனங்கள் காரை வாங்கும்போதே சார்ஜரை இலவசமாக வழங்குகின்றன. இருப்பினும், உங்கள் மீட்டரில் இருந்து பார்க்கிங் பகுதி வரை வயரிங் செய்ய வேண்டிய தூரம் அதிகமாக இருந்தால் கூடுதல் செலவு ஏற்படும். இந்தியாவில் இதற்கான அடிப்படை நிறுவல் செலவு ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரை இருக்கலாம். ஒருமுறை செட்-அப் செய்துவிட்டால், பெட்ரோல் செலவோடு ஒப்பிடுகையில் EV சார்ஜிங் மிகவும் மலிவானது.
Car loan Information:
Calculate Car Loan EMI