Safest Cars: மாருதியின் புதிய டிசைர் கார் மாடலும் பாதுகாப்பு பரிசோதனையில் 5 நட்சத்திர குறியீடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பான கார்களின் பட்டியல்: 


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல புதிய மாடல் கார்கள் தொடர்ந்து சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் கார் வாங்கும் முன் நல்ல வசதிகளும் பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன், கார் உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. உலகம் முழுவதும் இந்த கார்கள் எவ்வளவு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகின்றன என்பதை கார்களின் பாதுகாப்பு மதிப்பீட்டை கொண்டு அறியலாம்.


குளோபல் NCAP வழங்கும் விபத்து சோதனைகளில் கார்கள் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெறுகின்றன. இது வாகனங்களின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்கிறது. அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்படுகிறது. Global NCAP இன் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட சில வெகுஜன கார்கள் இந்தியாவிலும் கிடைக்கின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


பாதுகாப்பில் அசத்தும் டாடா கார்கள்:


Global NCAP இலிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற பல டாடா மோட்டார்ஸ் கார்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில் டாடா ஹாரியர், டாடா சஃபாரி, டாடா நெக்ஸான், டாடா பஞ்ச், டாடா அல்ட்ராஸ் ஆகியவை அடங்கும். இதனிடையே Tata Tigor மற்றும் Tata Tiago ஆகியவை விபத்து சோதனைகளில் 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் கர்வ் என்ற புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கார் குளோபல் NCAP இலிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்று அசத்தியுள்ளது.


டாடாவிற்கு டஃப் கொடுக்கும் மஹிந்திரா கார்கள்:


மஹிந்திரா கார்களும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட வாகனங்களின் பட்டியலில் உள்ளன. மஹிந்திரா XUV700, XUV300 மற்றும் Scorpio N ஆகிய மூன்று வாகனங்களும் விபத்து சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் மஹிந்திராவின் மிகவும் பிரபலமான கார் மாடலான தார், Global NCAP இன் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.


களத்தில் குதித்த மாருதி சுசூகி:


இந்திய சந்தையில் உள்ள பல வாகனங்களும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இந்த  பட்டியலில் வோக்ஸ்வாகன் விர்ச்சுஸ், டைகுன் ஆகியவை அடங்கும். ஹூண்டாய் வெர்னாவும் குளோபல் NCAP இலிருந்து 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா, ஸ்கோடா குஷாக் ஆகிய இரண்டு கார்களும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.


இதனிடையே, மாருதி சுசூகியின் புதிய கார் மாடலான டிசைரும் பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திரங்களை பெற்ற, அந்த நிறுவனத்தின் முதல் கார் மாடல் இதுவாகும்.


நமது நாட்டில் பாதுகாப்பான கார்களுக்கு நல்ல தேவை உள்ளது. தற்போது நம் நாட்டில் பல கார்கள் குறைந்த விலையில் நல்ல அம்சங்களை வழங்கி வருகின்றன. இன்னும் பல கார்கள் அட்டகாசமான பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI