நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு, புதிய நிதியாண்டை (2026-27) அதிரடியான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
விற்பனை விவரங்கள்:
2026 ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் மொத்தம் 1,13,164 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 86,559 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது 31 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய சந்தையில் மட்டும் 1,04,129 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 37 சதவீத வளர்ச்சியாகும். சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்து, 9,035 யூனிட்களாக உள்ளது.
'பிளையிங் பிளீ C6' முரட்டு வளர்ச்சி
ராயல் என்பீல்டு வரலாற்றில் 2026 ஏப்ரல் மாதம் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது. நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கான 'பிளையிங் பிளீ C6' (Flying Flea C6) சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைல் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பைக், வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நிறுவனத்தின் 'சிட்டி பிளஸ்' (City Plus) எலெக்ட்ரிக் மொபிலிட்டி தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் உள்ள முதல் ரீடைல் அவுட்லெட் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த பைக், விரைவில் நாடு முழுவதும் படிப்படியாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் டாப் 3-யில் ராயல் என்பீல்டு
பிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) நிறுவனம் வெளியிட்ட தரவரிசைப்படி, 2026-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது வலிமையான ஆட்டோமொபைல் பிராண்டாக ராயல் என்பீல்டு உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில், இளைஞர்களைக் கவரும் வகையில் ஹண்டர் 350 (Hunter 350) மாடலில் புதிய 'பேஸ் பிரீமியம்' வேரியண்ட் மற்றும் கூடுதல் வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சாகச விரும்பிகளுக்காக செப்டம்பர் மாதம் லடாக்கில் 'இமாலயன் பேஸ் கேம்ப்' நிகழ்வையும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இமாலயன் 450-ன் அசுர வளர்ச்சி
உலகளவில் தனது பிரிவில் அதிகம் விற்பனையாகும் பைக்காக இமாலயன் 450 உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இதற்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் உலகளவில் 38,000 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. "புதிய நிதியாண்டை வலுவான வளர்ச்சியுடன் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் முதல் எலெக்ட்ரிக் பைக்கான பிளையிங் பிளீ C6-க்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது." ஐஷர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பி. கோவிந்தராஜன்
இதுமட்டுமின்றி, நிறுவனத்தின் 125 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் 'ஹெரிடேஜ் கலெக்ஷன்' உடைகள் மற்றும் கிளாசிக் 500 மினியேச்சர் மாடல்களையும் ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய கிளாசிக் தோற்றத்தை மாற்றாமல், எதிர்காலத் தேவைகளுக்காக எலெக்ட்ரிக் வாகனத் துறையில் ராயல் என்பீல்டு எடுத்து வைக்கும் இந்த அடி, பைக் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI