ராயல் என்ஃபீல்ட் :
எத்தனை தலைமுறை மாறினாலும் சரி!.. பைக் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் ஒரே பைக் ராயல் என்ஃபீல்ட். குறிப்பாக இந்தியாவில் இதற்கான மவுசு அதிகம். அதற்கு ஏற்ப அந்த நிறுவனமும் புதிய மாடல் மோட்டர் பைக்குகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. உண்மையில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ராணுவ வீரர்கள் பயன்பாட்டுக்கான பைக்குகளை தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான் ராயல் என்ஃபீல்ட். அதைதொடர்ந்து, பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ள அந்நிறுவனம், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மின்சார வாகன உற்பத்தியில் ராயல் என்ஃபீல்ட்:
சந்தையில் நிலவும் போட்டியை கடந்து வெற்றி பெற வேண்டுமானால், அந்தந்த சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் தான் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்க உள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனக்கென சொந்த மின்சார வாகன பிரிவை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. அடுத்த 18 முதல் 24 மாதங்களில் மின்சார வாகன சந்தையில் களமிறங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
திட்டமிடலில் தீவிரம்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக குழு இந்தியா மற்றும் லண்டனில் செயல்பட்டு வருகிறது. இந்த குழு எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது குறித்த திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையொட்டி, ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான, உமேஷ் கிரிஷ்னப்பா தற்போது ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளார். மின்சார வாகன துறையில் ரூ.800 கோடி முதல் ரூ.1200 கோடியை முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எப்போது அறிமுகம்?
நடப்பாண்டு இறுதிக்குள் வாகனத்தை தயார்படுத்தி, அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ரூ.1,200 கோடி வரையிலான முதலீட்டின் மூலம், உற்பத்திக்கான பிரத்யேக பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் தற்போதைக்கு L என நிறுவனத்திற்குள் குறிப்பிடப்படுகிறது.
இலக்கு என்ன?
சர்வதேச வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் ஏராளமான வாகனங்களை உருவாக்க ராயல் என்ஃபீல்ட் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்தில் சந்தையில் களமிறங்குவதில் இருந்து ஆண்டுக்கு 1.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 1.8 லட்சம் வாகனங்களை உள்ளடக்கிய வியாபாரம் செய்ய ராயல் என்ஃபீல்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு புது பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 மாதங்களில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய பிளாட்பார்மிற்கான ப்ரோடோடைப் தயாராகி விடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Car loan Information:
Calculate Car Loan EMI