வாகன ஓட்டிகள் மத்தியில் ஒரு பொதுவான நம்பிக்கை நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அதாவது, அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும் என்பதுதான் அது. இந்த நம்பிக்கையின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? விரிவாகக் காணலாம்.
அறிவியல் காரணம்
பொதுவாக வெப்பநிலைக்கு ஏற்ப திரவங்கள் விரிவடையும் அல்லது சுருங்கும் என்பது அறிவியல் விதி. கோடைக் காலத்தில் அல்லது நண்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது பெட்ரோல் விரிவடையும். இதனால் பெட்ரோலின் அடர்த்தி குறைந்து, நமக்குக் கிடைக்கும் எரிபொருளின் உண்மையான அளவு குறையும் என்று நம்பப்படுகிறது.
அதேசமயம், காலையில் குளிர்ந்த வானிலை இருப்பதால் பெட்ரோல் அதிக அடர்த்தியுடன் இருக்கும், இதனால் நமக்கு முழுமையான அளவில் பெட்ரோல் கிடைக்கும், மைலேஜும் அதிகரிக்கும் என்பதே பலரின் கணிப்பு.
உண்மையான நிலவரம் என்ன
ஆட்டோமொபைல் நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் பெட்ரோல் போட்டால் லாபம் என்பது முற்றிலும் ஒரு கட்டுக்கதை. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் சேமித்து வைக்கப்படும் முறை.
அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை வெளியே வெயிலில் வைக்கப்படுவதில்லை. மாறாக, பூமிக்கு அடியில் பல அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட பெரிய சேமிப்புத் தொட்டிகளில்தான் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன.
பூமிக்கு அடியில் உள்ள வெப்பநிலை பெரும்பாலும் எப்போதும் சீராகவே இருக்கும். பகல், இரவு என நேரங்கள் மாறினாலும் அல்லது வெளியே எவ்வளவு கடுமையான வெயில் அடித்தாலும், அந்த வெப்பம் பூமிக்கு அடியில் உள்ள பெட்ரோல் தொட்டிகளைப் பெரிய அளவில் சென்றடையாது. எனவே, தொட்டியில் உள்ள பெட்ரோலின் அடர்த்தியிலும் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
பம்புகள் என்ன செய்யும்?
பெட்ரோலை வெளியே கொண்டுவரும் பம்புகள் மற்றும் குழாய்களில் ஏற்படும் மிகச் சிறிய வெப்பநிலை மாற்றம் எரிபொருளின் அளவிலோ, உங்கள் வாகனத்தின் மைலேஜிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே, காலையில் பெட்ரோல் போட்டால் அதிக மைலேஜ் கிடைக்கும் என்பதிலும், மதியம் போட்டால் நஷ்டம் என்பதிலும் உண்மையில்லை.
நாளின் எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பினாலும், உங்களுக்குக் கிடைக்கும் பெட்ரோலின் அளவு ஒன்றுதான். மைலேஜிலும் எந்த மாற்றமும் இருக்காது. மைலேலை அதிகரிக்க சரியான இன்ஜின்கள், சுத்தமான ஃபில்டர்கள், சரியான காற்றழுத்தம் கொண்ட டயர்கள், சரியான நேரத்தில் ஆயில் மாற்றுதல் மற்றும் வழக்கமான வாகனப் பராமரிப்பு ஆகியவையே காரணம்.
வண்டியை வேகமாக முடுக்குதல், அடிக்கடி கடுமையாக பிரேக் பிடித்தல், தவறான கியரில் ஓட்டுதல் மற்றும் முறையற்ற பராமரிப்பு போன்ற பழக்கங்கள் மைலேஜை பாதிக்கும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
Car loan Information:
Calculate Car Loan EMI