ஓலா நிறுவனம்:


இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து தற்போது, இந்திய சந்தையில் அந்த நிறுவனம் S1, S1 Pro மற்றும் S1 Air என மூன்று விதமான ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. அதேநேரம், ஓலா வாகனங்களை சார்ஜ் செய்யும் போதும், வண்டியில் பயணம் செய்யும் போதும் திடீரென பேட்டரி வெடித்து விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனாலும், பொதுமக்களிடையே ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. 


புதிய ஸ்கூட்டர் வேரியண்ட்:


அதன் விளைவாக தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட S1 ஏர் மாடலுக்கான, புதிய வேரியண்ட்களை ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2.5 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் நீக்கப்பட்டு, 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் கூடுதல் விலையின்றி பொருத்தப்பட்டுள்ளது. இதோடு சற்றே குறைந்த விலையில் 2 கிலோவாட்  மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதோடு,  இந்த மாடல்களின் எடை 99 கிலோ, 103 கிலோ மற்றும் 107 கிலோ என வேறுபடுகிறது. இவை ஒலா S1 ப்ரோ மாடலை விட 25 கிலோ வரை குறைந்த எடை கொண்டிருக்கின்றன.


சிறப்பம்சங்கள்


புதிய வேரியண்ட்களில் 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டர் சீட் ஸ்டோரேஜ், 7.0 இன்ச் டிஎப்டி தொடுதிரை டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத் சப்போர்ட், மூவ் ஒஎஸ் 3 மூலம் ஏராளமான அம்சங்கள் உள்ளன. முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டுவின் சஸ்பென்ஷன் இடம்பெற்று உள்ளது. எனினும், இவற்றில் டிஸ்க் பிரேக்கிற்கு மாற்றாக டிரம் பிரேக்குகளே வழங்கப்பட்டுள்ளன.


ரேன்ஜ் விவரம்:


புதிய வேரியண்டில் எண்ட்ரி லெவல் மாடல் 85 கி.மீ. ரேன்ஜையும், புதிய 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் 125 கிமீ ரேன்ஜையும் மற்றும் டாப் எண்ட் மாடல் 165 கிமீ ரேன்ஜையும் வழங்கும் திறன் கொண்டுள்ளன. இவை அனைத்திலும் 4.5 கிவோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இந்த வேரியண்ட்கள் நியோ மிண்ட், ஜெட் பிளாக், கோலர் கிலாம், போர்சிலெயின் வைட் மற்றும் லிக்விட் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 


விலை விவரம்:


புதிய ஒலா S1 ஏர் 2 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் 3 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் 4 கிலோவாட் ஹவர் மாடல் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  அவற்றின் வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தொடங்கும் என கூறப்படுகிறது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI