Tata Altroz NCAP: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், பாதுகாப்பு பரிசோதனையில் ஒட்டுமொத்தமாக 74.55 புள்ளிகளை பெற்றுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் கார் மாடல் தொடர்பான புதிய தகவல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய கார்களுக்கான பரிசோதனை முயற்சியில் வெளிப்படுத்திய அபரிவிதமான செயல்திறனே ஆச்சரியத்திற்கு காரணமாகும். அதன்படி இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கானது, பெரியவர்களுக்கான பிரிவில் 32-க்கு 29.65 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பிரிவில் 49-க்கு 44.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே டீசல் எடிஷன் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ரோஸ், மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் - பெரியர்வர்களுக்கான பரிசோதனை
பெரியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான பரிசோதனையில், முன்பக்கத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து காப்பதற்கான பிரிவில் 16-க்கு 15.55 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோன்று, வாகனத்தில் பயணிக்கும்போது பக்கவாட்டில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாப்பை அளிப்பதற்கான சோதனையில், 16-க்கு 14.11 புள்ளிகளை பெற்றுள்ளது. இது டாடாவின் வலுவான கட்டமைப்பின் மீது கவனத்தை பிரதிபலிக்கிறது.
டாடா ஆல்ட்ரோஸ் - குழந்தைகளுக்கான பரிசோதனை
குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனை முடிவுகளும் கவனத்தை ஈர்க்கின்றன. ISOFIX இருக்கை அடிப்படையிலான பரிசோதனையில் 18 மாத மற்றும் 3 வருட குழந்தைகள் மாதிரி வடிவங்களை வைத்து பரிசோதித்ததில், இந்த ஹேட்ச்பேக்கானது பாதுகாப்பிற்கான 24 புள்ளிகளில் 23.90 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தை கட்டுப்பாட்டு அமைப்பு பிரிவில் 12-க்கு 12 புள்ளிகளையும், வாகன தணிக்கையில் 13-க்கு 9 புள்ளிகளையும் பெற்றுள்ளது. முகப்பு மற்றும் பக்கவாட்டு பாதுகாப்பு அம்சங்கள் இரண்டிலும், குழந்தைகள் பிரிவில் வலுவான செயல் திறனை பெற்றுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்:
டாடா ஆல்ட்ரோஸில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரட்டை முன்புற ஏர்பேக்குகள், பயணிகள் மற்றும் ஓட்டுனர் என இருவருக்கும் பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ், லோட் லிமிட்டெர்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பாதசாரிகள் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பம், சீட்பெல்ட் ரிமைண்டர்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையாக வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்களில் 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இதுபோக, முன்புற இருக்கை பயணிகளுக்கு மேனுவலாக ஏர்பேக்குகளை டி-ஆக்டிவேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் - அம்சங்கள்
கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்டில், ப்ரீமியம் கேபின் அனுபவம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், மேம்படுத்தப்பட்ட க்ளைமேட் கண்ட்ரோல் இண்டெர்ஃபேஸ், ஹேட்ச்பேக் பிரிவிலேயே மிகவும் வசதியான இருக்கைகள், கனெக்டட் கார் டெக்னாலஜி, 345 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் - இன்ஜின் விவரங்கள்
இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் டாடா ஆல்ட்ரோஸ் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 118bhp மற்றும் 170Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது 89bhp மற்றும் 200Nm ஆற்றலை உற்பத்தி செய்து, பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 12.8 விநாடிகளில் எட்டுகிறது. இதுபோக 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின்களுக்கு 5 ஸ்பீட் மேனுவல், 5 ஸ்பீட் ஆட்டோமேடிக், 6 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்று ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் கொண்ட ஒரே டாடா கார் மாடலும் ஆல்ட்ரோஸ் மட்டுமே ஆகும்.
டாடா ஆல்ட்ரோஸ் - விலை, போட்டியாளர்கள்
டாடா ஆல்ட்ரோஸ் கார் மாடலானது 22 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அதன் ஆன் - ரோட் விலையானது, ரூ.8.30 லட்சத்தில் தொடங்கி ரூ.14.38 லட்சம் வரை நீள்கிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது மாருதி பலேனோ, ஹுண்டாய் ஐ20மற்றும் டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார் மாடல்களும் போட்டியிடுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI