ஹுண்டாயின் புதிய வெர்னா கார் முன்பதிவிலேயே புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்படி, 10 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


ஹூண்டா வெர்னா கார்:


தென்கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய், கடந்த வாரம் இந்திய சந்தையில் தனது புதிய ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான முன்பதிவு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதியே தொடங்கியது. ஆரம்பம் முதலே இந்த கார் மாடலை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஒரு மாதம் வரையில் எட்டாயிரம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், அந்த கார் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் தற்போது 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஷோருமிற்கு நேரடியாக சென்றோ அல்லது ஹுண்டாய் இணையதளம் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் முன்பதிவை மேற்கொள்ளலாம்.


இன்ஜின் விவரம்:


இந்த மாடல் காரில் இரண்டு பெட்ரோல் இன்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் இன்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் இடம்பெற்றுள்ளது.


சிறப்பம்சங்கள்:


இந்த காரில் 20.32 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 26.03 செமீ எச்டி ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம், போஸ் பிரீமியம் சவுண்ட் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை, ஆப்பிள் கார்பிளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, பிளாக் குரோம் பாராமெட்ரிக் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 


பாதுகாப்பு அம்சங்கள்:


ஆறு ஏர்பேக்குகள், 17 நிலை 2 - ADAS அம்சங்கள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் 65 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கார் அம்சங்கள் உட்பட 30 நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வெர்னா விற்பனைக்கு வருகிறது..


விலை விவரங்கள்:


2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில்,  ஒன்பது வண்ண விருப்பங்களில் இந்த கார் கிடைக்கிறது. அதன்படி, டைட்டன் கிரே, டெல்லூரியன் பிரவுன், டைபூன் சில்வர், உமிழும் சிவப்பு, அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட் வித் பிளாக் ரூஃப் மற்றும் ஃபீரி ரெட் வித் பிளாக் ரூஃப் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் தொடக்க விலை 10 லட்சத்து 90 ஆயிரம் என கூறப்படும் நிலையில், அதன் டாப் எண்ட் மாடல் விலை 17 லட்சத்து 38 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI