Hyundai Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹுண்டாயின் புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான புதிய ப்ராடக்ட் திட்டங்களை ஹுண்டாய் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, வரும் 2030ம் ஆண்டின் முடிவிற்குள் 26 புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் 20 வாகனங்கள் இன்ஜின் அடிப்படையிலான மாடல்களாகவும், மற்ற 6 வாகனங்கள் முற்றிலும் மின்சார கார்களாகவும் இடம்பெற உள்ளன. வழக்கமான கார் பிரியர்கள் இடையே மட்டுமின்றி வளர்ந்து வரும் மின்சார சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் ஹுண்டய் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஹுண்டாயின் மின்சார கார்கள்:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய பேட்டரி அடிப்படையிலான கார்கள் மூலம், தனது மின்சார கார்களுக்கான போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான ரோட்-மேப் ஆனது எஸ்யுவி-களுடன் கூடிய உள்நாட்டு அதேநேரம் சர்வதேச சந்தைகளுக்கான மாடல்களை உள்ளடக்கியதாகும். இந்த நடவடிக்கை புதிய திட்டத்தின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. கூடுதலாக, எதிர்வாரும் மின்சார வாகனங்களை பெரும்பாலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் இந்த கொரிய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய், தனது மின்சார கார் சந்தையை விரிவுபடுத்துவதற்கான களப்பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.இதற்காக பிரதான சந்தைகளில் தனது சார்ஜிங் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. எதிர்பார்க்கப்படும் புதிய மின்சார கார்களில், சர்வதேச சந்தைகளை போன்றே உள்நாட்டிலும் ஐயோனிக் 9 கார் மாடல் முதன்மையான காராக நிலைநிறுத்தப்படலாம்.
வென்யு மின்சார எடிஷன்:
வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும்பட்சத்தில் அடுத்த வரும் ஆண்டுகளில் வென்யு மற்றும் i10 கார்களின் மின்சார எடிஷன்களை ஹுண்டாய் நிறுவனம் சந்தைப்படுத்தலாம். இதனிடையே, புத்துயிர் பெற்ற உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்கள், புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெற்ற, அடுத்த தலைமுறை வென்யு கார் கார் மாடலானது விழாக்காலத்தின்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதேகாலகட்டத்தில், பேயோன் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யுவியிலும் ஹுண்டாய் நிறுவனம் பணியாற்றி வருகிறது.
இன்ஸ்டர் மின்சார கார் அடிப்படையில் இந்திய சந்தைக்கு புதிய காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்தவும் ஹுண்டாய் பரிசீலித்து வருகிறதாம். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்து சந்தைப்படுத்தப்படலாம். அதன் தொடர்ச்சியாக 2027ம் ஆண்டின் நடுவில் க்ரேட்டா எலெக்ட்ரிக் எடிஷனிற்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கப்படலாம்.
ஹைப்ரிட், இன்ஜின் கார்கள்:
மின்சார போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் காலகட்டத்திலேயே, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட க்ராண்ட் i10, Nios, i20 ஆகிய பிரபலமான கார்கள் மூலம், ஹுண்டாயின் இன்ஜின் லைன் - அப்களும் மேம்படுத்தப்பட உள்ளன. வெகுஜன சந்தை வாகனங்களுக்கான ஹைப்ரிட் தொழில்நுட்பத்திலும் ஹுண்டாய் நிறுவனம் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை க்ரேட்டா மற்றும் அல்கசார் மற்ரும் டக்சனுக்கு நடுவே அமையவுள்ள முற்றிலும் புதிய மூன்று வரிசை இருக்கை கொண்ட எஸ்யுவிக்கள் ஆனது, 2027ம் ஆண்டில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வரவுள்ளதாம். இரண்டு கார்களுமே தற்போது பயன்பாட்டில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை, தங்களது ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக பயன்படுத்த உள்ளனவாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI