GST Cut OnCars: மத்திய அரசு குறிப்பிட்ட வரம்புக்குள் இந்திய சந்தையில் ஹைப்ரிட் கார்களே இல்லை என துறைசார் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

”ஹைப்ரிட் கார்களுக்கு 18% மட்டுமே வரி”

பொதுமக்கள் அணுகக் கூடிய விலையில் பொருட்களின் விலையை குறைத்து, அவர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி வரி திருத்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இதுநாள் வரை இருந்த 4 அடுக்குகள் தற்போது 5 மற்றும் 18சதவிகிதம் என்ற இரண்டு அடுக்குகளாக மாற்ரப்பட்டுள்ளன. புதிய வரி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பில், சில குறிப்பிட்ட ஹைப்ரிட் கார்களுக்கும் 18 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது கார் பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார்களை இனி குறைந்த விலையில் சொந்தமாக்கலாம் என கருதினர். ஆனால், அதற்காக அரசு நிர்ணயித்த வரம்புகளை ஆராய்ந்தால், எந்தவொரு ஹைப்ரிட் காரும் அந்த வரி விகிதத்தில் கிடைக்கவே கிடைக்காது என்பதே உண்மையாக உள்ளது.

ஹைப்ரிட் கார்களுக்கான வரம்புகள்

1200சிசி செயல்திறன் மற்றும் 4000 மிமீ நீளத்தை மிகாத பெட்ரோல் ஹைப்ரிட் கார்களுக்கும், 1500சிசி செயல்திறன் மற்றும் 4000 மிமீ நீளத்தை மிகாத டீசல் ஹைப்ரிட் கார்களுக்கும் இனி 18 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. மேற்குறிப்பிடப்பட்ட வரம்புகளை கடந்த அனைத்து ஹைப்ரிட் கார்களுக்கும் 40 சதவிகிதம் வரி விதிக்கபப்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வரம்புகள் அடிப்படையில் தான், கார் பிரியர்களை மத்திய அரசு ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

4 மீட்டரில் ஹைப்ரிட் கார்களே இல்லை

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போதுள்ள கார் மாடல்களை ஆராய்ந்து பார்த்தால், 4000 மில்லி மீட்டர் நீளத்திற்குள் எந்தவொரு ஹைப்ரிட் கார் மாடலுமே இல்லை என தரவுகள் காட்டுகின்றன. அந்த அம்சத்தை பெற்றுள்ள அனைத்து எஸ்யுவி, எம்பிவி மற்றும் செடான்களுமே, 4000 மில்லி மிட்டருக்கும் அதிகமான நீளத்தை பெற்றுள்ளன. அப்படியே வெகுசில சொற்ப எண்ணிக்கையிலான கார்கள், 4000 மில்லி மீட்டர் நீளத்திற்குள் அடங்கி மைல்ட் ஹைப்ரிட் அம்சத்தை பெற்று இருந்தாலும், இன்ஜின் செயல்திறன் அடிப்படையில் மத்திய அரசு மற்றொரு ஆப்பை சொருகியுள்ளது.

இன்ஜின் செயல்திறனில் ஆப்பு

மாருதி சுசூகியின் ப்ரேஸ்ஸா கார் மாடல் வெறும் 3995 மில்லி மீட்டர் நீளத்துடன்,  மைல்ட் ஹைப்ரிட் அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், 18 சதவிகித வரியுடன் காரை சொந்தமாக்க முடியும் என நம்பினால் அதற்கும் வாய்ப்பில்லை. காரணம், பெட்ரோல் ஹப்ரிட் இன்ஜினுக்கு நிர்ணயிக்கப்பட்ட 1200சிசி என்ற வரம்பை தாண்டி, ப்ரேஸ்ஸா கார் மாடல் 1462சிசி செயல்திறன் கொண்ட இன்ஜினை பெற்றுள்ளது. அதாவது 4000 மில்லி மீட்டர் நீளம் மற்றும் 1200சிசி & 1500சிசி என்ற செயல்திறன், என்ற இரண்டு வரம்பிற்குள்ளும் ஒருசேர அடங்கும் ஹைப்ரிட் கார்களே இந்திய சந்தையில் இல்லை என்பதே உண்மை. ஆனால், அதனை வரம்பாக நிர்ணயித்து, 18 சதவிகித வரி சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஹைப்ரிட் கார் என்றால் என்ன?

ஹைப்ரிட் கார் என்பது இரண்டு வெவ்வேறு ஆற்றல்களை பயன்படுத்தும் வாகனம் ஆகும். ஒன்று வழக்கமான கம்பஸ்டன் இன்ஜின் (பெட்ரோல்/டீசல்), மற்றொன்று பேட்டரியால் இயக்கப்படும் மின்சார மோட்டார் மூலம் கிடைக்கும் ஆற்றல். இரண்டு அமைப்புகளும் வாகனத்திற்கு சக்தி அளிக்க இணைந்து செயல்படுகின்றன, இதன் விளைவாக வழக்கமான கார்களுடன் ஒப்பிடும்போது சிறந்த எரிபொருள் திறன், குறைந்த உமிழ்வு மற்றும் மேம்பட்ட செயல்திறன் கிடைக்கும். ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங் மற்றும் வாகனத்தின் இன்ஜின் மூலம் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI