New Gen Hyundai Venue: ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை வென்யு கார் மாடலில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை வென்யு - வெளியீடு எப்போது?

ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யு கார் மாடலை, வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்திய சாலைகளில் பல சோதனைகளின்போது சிக்கிய இந்த கார் எப்போது வெளியாகும்? என்று நீடித்து வந்த கேள்விக்கு ஒரு வழியாக பதில் கிடைத்துள்ளது. இந்த புதிய தலைமுறை வென்யு மாடலானது, தீவிரமான ஸ்டைலிங் அப்டேட்கள் மற்றும் இதுவரை கண்டிராத அம்சங்களை பெறும் என கூறப்படுகிறது. 

புதிய தலைமுறை வென்யு - வடிவமைப்பு விவரங்கள்

புதிய தலைமுறை வென்யு எஸ்யுவி காரானது தனது டிசைனுக்கான தாக்கத்தை, தற்போது விற்பனையில் உள்ள க்ரேட்டா மற்றும் முதல் தலைமுறை பாலிசேட் எஸ்யுவிக்களில் இருந்து பெற்றுள்ளது. அதன்படி, க்ரேட்டாவில் இருப்பதை போன்ற முன்புற கனெக்டட் டிஆர்எல்களை கொண்ட க்வாட் எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளன. அதற்கு கீழே முதல் தலைமுறை பாலிசேடில் இருப்பதை போன்ற L  வடிவிலான எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது. முன்புறத்தில் இருந்த பாராமெட்ரிக் க்ரில் ஆனது, அதிகளவில் திறந்த நிலை கொண்ட ரெக்டேங்குலர் ஸ்லாட்டுகளால் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்போர்டியர் காருக்கான தோற்றத்தை வழங்கும் வகையிலான டச்களுடன், புதிய வடிவமைப்பை பெற்ற டைமண்ட் கட் 16 இன்ச் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. புதியதாக இந்த எஸ்யுவியில் டூயல் டோன் வண்ண விருப்பங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய தலைமுறை வென்யு - வசதிகள், அம்சங்கள்

புதிய தலைமுறை வென்யு கார் மாடலானது கேபின் மற்றும் அம்சங்களை க்ரேட்டா மற்றும் அல்கசார் கார் மாடல்களிடமிருந்து பகிர்ந்து கொள்கிறது. இருக்கைகளுக்கான அப்ஹோல்ஸ்ட்ரி தொடங்கி டேஷ்போர்ட் டிசைன் உள்ளிட்ட அனைத்துமே முன்பு இருந்ததை காட்டிலும் ப்ரீமியமாகவும், உயர் ரகமாகவும் மற்றும் மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கும். இந்த கார் பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் சீட்ஸ், முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களை பெறும் என நம்பப்படுகிறது.

புதிய தலைமுறை வென்யு - பாதுகாப்பு அம்சங்கள்

புதிய தலைமுறை வென்யு கார் மாடலானது இந்த செக்மெண்டில் முதல் முறையாக, பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தை பெறும் கார் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த காரில், ஃப்ரண்ட் பார்கிங் சென்சார்கள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் ஆகியவை இடம்பெறலாம். தற்போது விற்பனையில் உள்ள வென்யுவின் டாப் எண்ட் வேரியண்ட்களிலேயே, லெவல் 1 ADAS இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சப் 4 மீட்டர் எஸ்யுவியின் தற்போதைய எடிஷன், 6 ஏர்பேக்குகளுடன் சர்வதே பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. புதிய தலைமுறை 5 ஸ்டார்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை வென்யு - இன்ஜின் விவரங்கள்

வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டாலும், வென்யு கார் மாடலில் இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய எடிஷனில் இருந்த 1.0 லிட்டர் & 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கின்றன. 5 ஸ்பீட் மேனுவல், 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் ஆப்ஷன்களும் பழைய எடிஷனிலிருந்து அப்படியே பின் தொடரப்படுகின்றன. எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் வென்யு மாடல், 17 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை வென்யு - விலை, போட்டியாளர்கள்

தற்போதைய வென்யு எடிஷனின் விலை 7.94 லட்சத்தில் தொடங்கி 13.90 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. கூடுதல் அப்க்ரேட்களை கருத்தில் கொண்டு புதிய தலைமுறை வென்யுவின் விலை சற்றே அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 24ம் தேதி வெளியாகும். அப்படி சந்தைக்கு வரும்போது மாருதி ப்ரேஸ்ஸா, டாடா நெக்சான், கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO ஆகிய கார் மாடல்களிடமிருந்து புதிய தலைமுறை வென்யு கார் போட்டியை எதிர்கொள்ளும்.


Car loan Information:

Calculate Car Loan EMI