Citroen C3X Coupe: சிட்ரோயன் நிறுவனத்தின் C3X கூபே கார் மாடலின் விலை 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கியுள்ளது.
C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன்
அண்மையில் தான் சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய கூபே கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வித சர்ப்ரைஸாக தனது C3X ரேஞ்ச் கார் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கூடுதலாக 15 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட இதர அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட பிறகும் கூட, இதன் விலை போட்டித்தன்மை மிக்கதாக தக்கவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் C3X காரின் தொடக்க விலை 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய எடிஷன்கள் தற்போதைய மாடலின் டாப்-லெவல் வேரியண்ட்களுக்கு மாற்றாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனுடன் எண்ட்ரி லெவல் வேரியண்டாக C3 கார் மாடலையும் சிட்ரோயன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் தொடக்க விலை வெறும் ரூ.5.25 லட்சம் மட்டுமே ஆகும்.
சிட்ரோயன் C3X - வெளிப்புற அப்டேட்கள்
மேம்படுத்தப்பட்ட C3X கூபேவில் புதியதாக ப்ராக்ஸி - சென்ஸ் பேசிவ் எண்ட்ரி மற்றும் புஷ் ஸ்டார்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த செக்மெண்டில் இடம்பெற்றுள்ள காரில் ஸ்பீட் லிமிட்டருடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் கொண்ட முதல் மாடலாக உருவெடுத்துள்ளது. 7 வகையான பார்வை வசதிகளுடன் 360 டிகிரி கேமரா சிஸ்டம், ப்ரொஜெக்டட் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஃபாக் லேம்ப்ஸ் உடன் கூடிய முழுமையான எல்இடி செட்-அப் ஆகியவை புதியதாக இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளன.
சிட்ரோயன் C3X - உட்புற அம்சங்கள், அப்டேட்கள்
C3X கூபேவின் உட்புறத்தில் மெட்ரோபொலிடன் லெதரேட் வ்ராப்ட் டேஷ்போர்ட், அகலமான கேபின் ஸ்பேஸ், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கம்பேடிபிலிட்டி அம்சம் கொண்ட 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. 5 பேர் அமரும் வகையிலான இந்த காரின் சஸ்பென்ஷன் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக பிரத்யேகமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கேபினை 14 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியூட்டக்கூடிய ட்ராபிகேலைஸ்ட் ஆட்டோமேடிக் ஏசி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம், EBD உடன் கூடிய ABS, ஹில்ஹோல்ட் அசிஸ்ட், குழந்தைகளுக்கான ISOFIX மவுண்ட்ஸ் இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பெரிமெட்ரிக் அலார்ம் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் C3X கூபேவில் இணைக்கப்பட்டுள்ளன.
சிட்ரோயன் C3X - வடிவமைப்பு விவரங்கள்:
CX-மாடலை உணர்த்தும் விதமாகவே இந்த காரின் வடிவமைப்பும் அமைந்துள்ளது. அதன்படி, ஸ்ப்லிட் பகல்நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், நம்பகமான முன்புற க்ரில் வழங்கப்பட்டுள்ளன. 180 மில்லி மீட்டர் க்ரவுண்ட் கிளியரன்ஸை பெற்று, 4.98 மீட்டர் என்ற நெருக்கமான டர்னிங் ரேடியஸை பெற்றுள்ளது. 2,540 மில்லி மீட்டர் வீல்பேஸ் உடன் 315 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. இந்த காரானது போலார் வைட், ஸ்டீல் க்ரே, காஸ்மோ ப்ளூ, பெர்லா நெரா ப்ளாக் மற்றும் கார்னெட் ரெட் என ஐந்து ஒற்றை நிறங்களிலும், இரண்டு டூயல் டோன் வண்ண ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. வேரியண்ட் அடிப்படையில் 3 வகையான இண்டீரியர் ஃபினிஷிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிட்ரோயன் C3X - இன்ஜின் விவரங்கள்
C3X கூபேவில் 1.2 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் டர்போ இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் உடன் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். காரின் டர்போ வேரியண்டானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 10 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக லிட்டருக்கு 19.3 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரோயன் C3X - விலை விவரங்கள்
- C3 லைவ் - ரூ.5,25,000
- C3 ஃபீல் - ரூ.6,23,00
- C3 ஃபீல் O- ரூ.7,27,00
- C3X ஷைன் - ரூ.7,90,800
- C3X ஷைன் டூயல் டோன் - ரூ.8,05,800
- C3X ஷைன் டர்போ - ரூ.9,10,800
- C3X ஷைன் டர்போ ஆட்டோமேடிக் - ரூ.9,89,800
தொடக்க நிலை லைவ் வேரியண்ட் இப்போது முன்பை விட ரூ.98,000 மலிவு விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஃபீல் வேரியண்டின் விலை ரூ.1.29 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வ விற்பனை தளங்களிலும், சிட்ரோயனின் ஆன்லைன் தளத்திலும் தொடங்கியுள்ளது. விற்பனை நிலையங்களில் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்திலேயே இந்த கார்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும், செப்டம்பர் முதல் வாரத்தில் முன்பதிவு செய்த நபர்களுக்கான விநியோகம் தொடங்கும் என்றும் சிட்ரோயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI