Toyota Cheapest Car: டொயோட்டாவின் மலிவான காருக்கு அப்க்ரேட்..! லெவல் 2 ADAS, புது இன்ஜின் - வேற என்ன? விலை எப்படி?
Toyota Glanza Update: டொயோட்டா நிறுவனத்தின் மலிவான கார் மாடலான க்ளான்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், பல்வேறு அப்டேட்களுடன் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Toyota Glanza Update: டொயோட்டா நிறுவனத்தின் மலிவான கார் மாடலான க்ளான்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட்டில் இடம்பெற உள்ள புதிய அம்சங்கள், வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டொயோட்டாவின் மலிவான காருக்கு அப்க்ரேட்..!
டொயோட்டா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது மலிவான கார் மாடலான, க்ளான்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை வரும் அக்டோபர் அறிமுகப்படுத்த உள்ளது. இது மாருதியின் சுசூகி பலேனோவின் ரிபேட்ஜ் எடிஷனாக இருக்கும் நிலையில், அதற்கான ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் சில நாட்களுக்கு முன்பு தான் மிட்-லைஃப் அப்டேட்களை பெற்ற நிலையில், க்ளான்ஸாவும் தனக்கான அப்க்ரேட்களை பெற உள்ளது. புதிய பலேனோவை போன்றே வரவிருக்கும் க்ளான்ஸாவும் லேசான காஸ்மெடிக் அப்டேட்கள், பல புதிய அம்சங்கள், மற்றும் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றை பெறுகிறது.
டொயோட்டா க்ளான்ஸா - ஸ்டைலிங்கில் திருத்தம்
புதிய டொயோட்டா க்ளான்ஸாவானது பெரிய மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட க்ரில்லை, முழு அகலத்திற்கு ஓடக்கூடிய 3 க்ரோம் ஸ்ட்ரிப்களுடன் கொண்டிருக்கும். வழக்கமாக க்ரில்லின் மையப்பகுதியில் பொருத்தப்படும் டொயோட்டா பேட்ஜானது இந்த முறை சற்று மேலே சென்று பானெட்டில் பொருத்தப்படுகிறது. அதேநேரம் முகப்பு விளக்குகள், எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கின்றன. புதிய ஃபாக் லேம்ப் தொகுப்பானது காரின் முன்பக்கத்திற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது. பக்கவாட்டு மற்றும் பின்புறங்களிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா க்ளான்ஸா - அம்சங்கள், வசதிகள்
க்ளான்ஸாவில் இடம்பெற உள்ள மிகப்பெரிய அப்க்ரேடாக லெவல் 2 ADAS தொழில்நுட்ப அம்சம் இணைக்கப்படுவது கருதப்படுகிறது. இதில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹை பீம் அசிஸ்ட் மற்றும் பல அடங்கும். கூடுதலாக டொயோட்டா க்ளான்ஸாவில் வென்டிலேடட் முன்புற இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் இடம்பெறக்கூடும். இதுபோக ஏற்கனவே உள்ள ஹெட்-அப் டிஸ்பிளே, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்டவை அப்படியே தொடரக்கூடும்.
டொயோட்டா க்ளான்ஸா - புதிய இன்ஜின் ஆப்ஷன்
ஏற்கனவே சொன்னபடி, புதிய க்ளான்ஸாவில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினானது, ஏற்கனவே உள்ள 4 சிலிண்டர் யூனிட்டிற்கு மாற்றாக அமைய உள்ளது. இந்த இன்ஜினானது அதிகபட்சமாக 81bhp மற்றும் 112Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடுமாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷன்களுமே இதிலும் தொடர உள்ளன. மிட்-லைஃப் அப்டேட்டின் மூலம் க்ளான்ஸாவில் மைலேஜை அதிகரிக்கக் கூடிய சிஎன்ஜி ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா க்ளான்ஸா - விலை உயருமா?
தற்போது இந்தியாவில் டொயோட்டா சார்பில் கிடைக்கும் மிகவும் மலிவான மாடலாக க்ளான்ஸா விளங்குகிறது. இதன் விலை ரூ. 6.73 லட்சம் முதல் ரூ. 9.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலில் மிகக் குறைந்த விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























