Maruti Suzuki: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்.. 3 கோடி கார்களை விற்றுத் தீர்த்த மாருதி - கொட்டிக் கொடுக்கும் ஹேட்ச்பேக், செடான்
Maruti Suzuki Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மட்டும் 3 கோடி கார்களை விற்ற முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசூகி படைத்துள்ளது.

Maruti Suzuki Sale: மாருதி சுசூகி நிறுவனம் கடந்த சுமார் 6 ஆண்டுகளில் மட்டுமே, இந்தியாவில் ஒரு கோடி கார்களை விற்றுள்ளது.
மாருதி சுசூகி சாதனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது 4 தசாப்த கால பயணத்தில், மாருதி சுசூகி நிறுவனம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. உள்ளூர் சந்தையில் மட்டும் 3 கோடி கார்களை விற்பனை செய்து, வேறு எந்தவொரு உற்பத்தி நிறுவனமும் பயணிகள் வாகன பிரிவில் எட்டாத மைல்கைல்லை கடந்துள்ளது. இந்த சாதனையானது கடந்த 40 ஆண்டுகாலமாக இந்திய சந்தையில் அந்த ப்ராண்ட் செலுத்தி வரும் ஆதிக்கத்தையும், பயனர்கள் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கி 42 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 நவம்பரில் இந்த மகத்தான சாதனையை நிறுவனம் படைத்துள்ளது.
3 கோடியை கடந்த மாருதி விற்பனை:
இந்திய சந்தையில் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாருதி 800 காரை, உரிமையாளரிடம் ஒப்படைத்ததன் மூலம் மாருதி சுசூகி தனது பயணத்தை தொடங்கியது. அதனை தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது முதல் ஒரு கோடி யூனிட் விற்பனையை பூர்த்தி செய்தது. இந்த அரிய மைல்கல்லை எட்ட நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் ஆனது. இருப்பினும், இரண்டாவது கோடி வெறும் 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்டது. மேலும் ஆச்சரியத்தை அளிக்கு வகையில்,
மூன்றாவது கோடி யூனிட்கள் விற்பனை என்ற சாதனையை, 6 ஆண்டுகள் 4 மாதங்களில் மாருதி சுசூகி நிறுவனம் எட்டியுள்ளது. வேறு எந்த ஒரு நிறுவனமும் இந்த அளவிலான குறுகிய காலத்தில் ஒரு கோடி யூனிட்களை விற்பனை செய்ததில்லை. மேலும், 3 கோடி யூனிட் என்ற விற்பனையை எட்டிய ஒரே நிறுவனமும் மாருதி சுசூகி மட்டுமே ஆகும். இது அதன் வளர்ந்து வரும் பிரபலத்தை வலியுறுத்துகிறது.
மாருதியின் ஆதிக்கம் தொடர்வது எப்படி?
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பயணிகள் வாகன சந்தையாக இந்தியா உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், பல சர்வதேச நிறுவனங்களும் தங்களது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதில் ஒரு சில மட்டுமே இங்கு போட்டியை தாக்குப்பிடித்து, தங்களுக்கான இடத்தை உறுதி செய்கின்றன. பெரும்பாலானவை குறுகிய காலத்திலேயே சந்தையை விட்டே வெளியேறுகின்றன். ஆனால், மாருதி சுசூகி நிறுவனம் பல தசாப்தங்களாக, இந்திய சந்தையுடன் இணைந்து பரிணமித்து வளர்ந்துள்ளது. அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதோடு, பவர்டிரெய்ன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைச் சேர்த்து காலத்திற்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி வருகிறது.
அதிகளவில் விற்பனையான மாருதி கார் மாடல்:
மாருதி நிறுவனம் தரப்பில் இதுவரை அதிகளவில் விற்பனையான காராக ஆல்டோ மாடல் திகழ்கிறது. தரவுகளின் படி அந்த காரின் 47 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 34 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களுடன் ஹேட்ச்பேக் மாடலான வேகன் ஆர் இரண்டாவது இடத்திலும், 32 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து ஸ்விஃப்ட் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு கார்களும் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடல்களில் முதல் 5 இடங்களை தக்கவைக்கின்றன. ப்ரேஸ்ஸா மற்றும் ஃபிராங்க்ஸ் போன்ற பிற வலுவான செயல்திறன் கொண்ட கார்களும், ப்ராண்ட் சார்பில் மிகப்பெரிய அளவில் விற்பனையான மாடல்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளன.
பல வேரியண்ட்களும், பவர்ட்ரெயின்களும்..
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மாருதி சுசூகி பல எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 19 வகையான கார்களை விற்பனை செய்கிறது. இதில் சிறிய, நடுத்தர மற்றும் பிரீமியம் பிரிவுகள் என மொத்தம் 170க்கும் மேற்பட்ட ட்ரிம்கள் கிடைக்கின்றன. அதன் CNG வரம்பில் கிடைக்கும் கார்கள், விற்பனையில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன.
என்ட்ரி லெவல் வெகுஜன சந்தை பிரிவில் தனது ஆதிக்கத்திலிருந்து விலகி, மாருதி சுசூகி சமீபத்திய ஆண்டுகளில் அதன் SUV போர்ட்ஃபோலியோவை பெரிய அளவில் வலுப்படுத்தி வருகிறது. அதன்படி ப்ரேஸ்ஸா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரிஸ் ஆகியவற்றின் வருகை அதன் சந்தை பங்களிப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதன் வரிசையில் இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார கார் மாடல்களின் பயன்பாட்டை உணர்ந்து, தனது முதல் மின்சார காரானாம் e விட்டாராவை விரைவில் உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.





















