Maruti Car Price Hike: மாருதி சுசூகி நிறுவனம் பலேனோ மற்றும் எர்டிகா கார் மாடல்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி சுசூகி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெகுஜன மக்களுக்கான கார் உற்பத்தியில் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து தொடர்ந்து தன்னை மேம்படுத்தி வருவதே, நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் தான், மாருதி சுசூகி நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்களின் பாதுகாப்பு தரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி பலேனோ மற்றும் எர்டிகா ஆகிய இரண்டு கார் மாடல்களின் அனைத்து வேரியண்ட்களிலும், உயிர் பாதுகாப்பிற்கான 6 ஏர் பேக்குகள் நிலையான அம்சமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சமானது, பலேனோவின் டாப் எண்ட் வேரியண்ட்களான ஜீட்டா மற்றும் ஆல்பா ட்ரிம்களில் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கார் பாதுகாப்பிற்கான கடுமையான விதிமுறைகள் மற்றும் பயனர்களிடையே உயர்ந்து வரும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலையை உயர்த்திய மாருதி:
பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு நிகராக விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த நடவடிக்கையால் எர்டிகாவின் விலை 1.4 சதவிகிதமும், பலேனோவின் விலை 0.5 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாம். அதாவது பலேனோவிற்கு குறைந்தது 3 ஆயிரம் ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 4 ஆயிரத்து 960 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேநேரம், எர்டிகாவிற்கு குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 19 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. புதிய விலைப்பட்டியலின்படி, பலேனோ கார் மாடலின் எக்ஸ் - ஷோரூம் விலையானது, ரூ.6.7 லட்சத்தில் தொடங்கி ரூ.9.92 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், மிகவும் பிரபலமான மல்டி பர்பஸ் வாகனமான எர்டிகாவின் விலை ரூ.8.97 லட்சத்தில் தொடங்கி ரூ.13.25 லட்சம் வரை நீள்கிறது.
பலேனோ விலை உயர்வு விவரங்கள்:
| பலேனோ வேரியண்ட்கள் | பழைய விலை | புதிய விலை |
| சிக்மா | ரூ. 6,70,000 | ரூ.6,73,350 |
| டெல்டா | ரூ.7,54,000 | ரூ.7,57,770 |
| டெல்டா ஆட்டோமேடிக் | ரூ.8,04,000 | ரூ.8,08,020 |
| டெல்டா சிஎன்ஜி | ரூ.8,44,000 | ரூ.8,48,220 |
| ஜீட்டா | ரூ.8,47,000 | ரூ.8,51,235 |
| ஜீட்டா ஆட்டோமேடிக் | ரூ.8,97,000 | ரூ.9,01,485 |
| ஜீட்டா சிஎன்ஜி | ரூ.9,37,000 | ரூ.9,41,685 |
| ஆல்பா | ரூ.9,42,000 | ரூ.9,46,710 |
| ஆல்பா ஆட்டோமேடிக் | ரூ.9,92,000 | ரூ.9,96,960 |
பலேனோ பாதுகாப்பு அம்சங்கள்:
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பலேனோவில், 360 டிகிரி கேமரா (ஆல்பா ட்ரிம்மில் மட்டும்), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், எல்லா பயணிகளுக்குமான ரிமைண்டர்களுடன் கூடிய 3 பாயிண்ட் சீட் பெல்ட், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உடன் கூடிய ஆண்டி லாக் பிரேகிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் ஆன்கரேஜஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. அண்மையில் நடந்த பாதுகாப்பு பரிசோதைனையில் வலுவான புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்களுக்கான பிரிவில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பிரிவில் 3 ஸ்டார்களையும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
பலேனோ ஹைப்ரிட் அப்கிரேட்:
ஹேட்ச்பேக் மாடலான பலேனோவில், 90bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதனுடன் 5 ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த ஹேட்ச்பேக்கின் டெல்டா மற்றும் ஜீட்டா ட்ரிம்மில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றன. இதனிடையே, பலேனோ கார் மாடல் அடுத்த ஆண்டு தலைமுறைக்கான அப்கிரேடை பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வலுவான ஹைப்ரிட் அம்சத்தை பலேனோ பெறக்கூடும். அதுவும் டொயோட்டாவின் அட்கின்சன் ஹைப்ரிட் அம்சத்தை காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அம்சத்தை எதிர்காலத்தில் பெற உள்ள ஃபராங்க்ஸ், பலேனோ, ஸ்விஃப்ட் மற்றும் பிரேஸ்ஸா ஆகிய கார் மாடல்கள் லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எர்டிகா விலை உயர்வு விவரங்கள்:
| எர்டிகா வேரியண்ட்கள் | பழைய விலை | புதிய விலை |
| LXi (O) | ரூ.8,96,500 | ரூ.9,09,051 |
| VXi (O) | ரூ.10,05,500 | ரூ.10,19,577 |
| VXi (O) CNG | ரூ.11,00,499 | ரூ.11,15,906 |
| ZXi (O) | ரூ.11,15,500 | ரூ.11,31,117 |
| VXi AT | ரூ.11,45,500 | ரூ.11,61,537 |
| ZXi + | ரூ.11,85,500 | ரூ.12,02,097 |
| ZXi (O) CNG | ரூ.12,10,501 | ரூ.12,27,448 |
| ZXi AT | ரூ.12,55,500 | ரூ.12,73,077 |
| ZXi Plus AT | ரூ.13,25,500 | ரூ.13,44,057 |
Car loan Information:
Calculate Car Loan EMI