Mahindra XEV 7e Thar XUV700: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனம் தனது XEV 7e, Thar மற்றும் XUV700 ஆகிய கார் மாடல்களை அடுத்தடுத்து சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
புதிய கார்களில் மஹிந்திரா தீவிரம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தும், மஹிந்திரா நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவை விரிவாக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் 7 இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவிக்கள் மற்றும் 5 மின்சார வாகனங்களை சந்தைப்படுத்த உள்ளது. இதில் பெரும்பாலானவை டாப் எண்ட் வாகனங்களாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. புதிய பிரீமீயம் கார்களின் பட்டியலில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள மஹிந்திராவின் தார், XUV 700 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் XEV 7e ஆகிய கார் மாடல்களும் அடங்கும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார்களின் வெளியீட்டு தேதி மற்றும் விலை தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மஹிந்திராவின் புதிய தார்:
கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது தலைமுறை தார் கார் மாடலானது அபரிவிதமான வெற்றியை பெற்றது. ஆனால், அதற்கு ஃபேஸ்லிஃப்ட் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லேடர் ஃப்ரேம் எஸ்யுவிகளின் ப்ராடக்ட் லைஃப்சைக்கிள் மிக நீளமானது என்பதால், தற்போதைய மாடல் சந்தையில் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. எனவே, அதனை ஃபேஸ்லிப்ட் எடிஷனால் மாற்ற இன்னும் சில காலம் எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.
W515 என்ற கோட்நேமை கொண்ட புதிய தாரானது பெரியா தார் ராக்ஸை அடிப்படையாக கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரே மாதிரியான டபுள் வெர்டிகல் ஸ்லாட்களுடன் கூடிய ரேடியேட்டர் க்ரில், C வடிவிலான டிஆர்எல்கள் கொண்ட எல்இடி முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட பம்பர், புதிய அலாய் வீல்கள் உள்ளிட்டவை புதிய தாரின் வெளிப்புறத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் ஆகும். உட்புறத்திலும் ராக்ஸில் இருப்பதை போன்ற சில அம்சங்கள் அப்படியே புதிய தாரில் தொடரலாம். அதாவது புதிய ஸ்டியரிங் வீல், பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சன்ரூஃப் ஆகியவை இடம்பெறலாம். இன்ஜின் அடிப்படையில் இதில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ள, புதிய தாரின் விலை தற்போதைய மாடலை காட்டிலும் சற்றே உயர்ந்து ரூ.11.50 லட்சம் முதல் ரூ.17.62 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மஹிந்திரா XUV 700
கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட XUV 700 கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனும் தயாராகி வருகிறது. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இதில் இரட்டை U ஷேப் கிளஸ்டர்களுடன் கூடிய ட்வீக்ட் முகப்பு விளக்குகள் இருக்கும் என்பதை உணர்த்துகின்றன. மேலும், 6 ஸ்லாட் ரேடியேட்டர் கிரில், திருத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் முன்புறத்தில் புதிய ரிஃப்ளெக்டர்ஸ் ஆகியவற்றுடன் 18 இன்ச் அலாய் வீல்களும் வெளிப்புற மாற்றங்களாக இடம்பெறலாம்.
உட்புறத்தை பொறுத்தமட்டில் XUV 700 டேஷ்பேர்டில் சில பெரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். இதில் XEV 9e கார் மாடலில் இருப்பதை போன்ற 3 ஸ்க்ரீன் செட்டப் இடம்பெறலாம். இன்ஜின் அடிப்படையில் மாற்றம் இல்லாவிட்டாலும், புதிய வண்ண விருப்பங்கள் வழங்கப்படலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும்போது, இதன் பெயர் மஹிந்திராவின் புதிய நடைமுறைப்படி XUV 7X0 என்ற பெயர் இந்த காருக்கு சூட்டப்படலாம். இதன் விலை சுமார் 15 லட்சத்தில் தொடங்கி ரூ.26 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம்.
3. மஹிந்திரா XEV 7e
மேற்குறிப்பிடப்பட்ட இன்ஜின் அடிப்படையிலான கார்கள் மட்டுமின்றி, முற்றிலும் புதிய மின்சார வாகனமான XEV 7e கார் மாடலையும் விரைந்து அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. முன்னதாக XEV 9e கார் மாடலனது XUV 700 கார் மாடலின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. ஆனால், அந்த கூபே கார் மாடலை போன்று இல்லாமல் புதிய XEV 7e காரானது 3 வரிசை இருக்கைகளுடன் 7 பேர் அமரும் வகையிலான இடவசதியை கொண்டிருக்க உள்ளது.
அதேநேரம், XEV 9e கார் மாடலில் உள்ள அதே 228hp/ 380Nm மற்றும் 282hp/ 380Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 170 KW மற்றும் 210KW ரியர் மோட்டார்கள் புதிய XEV 7e காரில் இடம்பெற உள்ளது. 59KWh மற்றும் 79KWh பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெற உள்ளது. மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 7 விநாடிகளில் எட்டும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரானது, முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த காரில் கெஸ்டர் கண்ட்ரோல் பவர் டெயில்கேட், அடாப்டிவ் சஸ்பென்ஷன், 12.3 இன்ச் பேச்சஞ்சர் டச்ஸ்க்ரீன், ஆட்டோ பார்க் என XEV 9e கார் மாடலில் உள்ளதை போன்ற பல பிரீமியம் அம்சங்களும் இடம்பெற உள்ளன. இதுவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்தைப்படுத்தப்படும்போது, ரூ.21 முதல் ரூ.30 லட்சம் வரை விலையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட மூன்று பிரீமியம் ஹையர் எண்ட் கார்களுமே, அடுத்த ஓராண்டிற்கு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன. இதன் மூலம் மஹிந்திராவின் போர்ட்ஃபோலியோ விரிவடைந்து, வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI