மஹிந்திரா நிறுவனத்தின் 5 கதவுகளுடன் கூடிய புதிய தார் மாடல் காரில், அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திராவின் தார் மாடல் கார்:
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் தார் மாடல் காரை கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன் கம்பீரமான வடிவமைப்பு, ஆஃப் ரோடிலும் அநாயசமாக செல்லும் திறன் ஆகியவற்றால், பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல் இரண்டாவது தலைமுறை தார் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் Thar 2WD மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலேயே விரைவில் 5 கதவுகளுடன் கூடிய தார் மாடல் கார் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு இந்த புதிய கார் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய அம்சங்கள்:
புதிய தார் மாடல் காரானது முந்தைய கார் மாடலை விட பிரீமியம் வகையில் உருவாக்கப்படுகிறது. கூடுதல் கதவுகள் என்பது மட்டுமின்றி பல்வேறு புதுப்புது அம்சங்களும் இதில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், கூடுதலான இட வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புற கேமரா, சன் ரூஃப் மற்றும் மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இடம்பெறக்கூடும். காரின் வெளிப்புற வடிவமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய இருக்கைகளுடன் லக்கேஜ் இடமும் மேம்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சக்தி வாய்ந்த இன்ஜின்:
கூடுதல் அம்சங்களால் இந்த காரின் எடை முந்தைய மாடலை விட அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு, 3 கதவுகள் கொண்ட தார் மாடலில் இருப்பதை விட சக்தி வாய்ந்த இன்ஜின் புதிய காரில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கார்ப்பியோ N-ல் இருப்பதை போன்று சக்தி வாய்ந்த இன்ஜினோடு, டிரைவ் மோட்களும் இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த கூடுதல் ஆற்றலானது பழைய காரிலிருந்து மாறுபட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரமடையும் வேலை:
ஸ்கார்பியோ N, தார் 3-டோர் மற்றும் XUV700 போன்ற பல கார்களுக்கான ஆர்டர்களை பூர்த்தி செய்வதில் உள்ள பற்றாக்குறையை மஹிந்திரா நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. இதன் காரணமாக புதிய தார் மாடல் காரின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் விரைவுபடுத்தியுள்ளது. இதையடுத்து சந்தைக்கு வரும் போது மஹிந்திரா நிறுவனத்தின் பிரீமியம் காராக 5 கதவுகள் கொண்ட கார் சிறந்து விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கூடுதல் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் போன்ற காரணங்களால் இதன் விலை அதிக்கப்படியானதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அதன்படி, இந்திய சந்தையில் இந்த காரின் விலை 15 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI