Mahindra SUV: மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
Mahindra SUV Sale Analysis: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுன் மாதத்தில் ஆதிக்கம் செலுத்திய மற்றும் சொதப்பிய மஹிந்த்ரா எஸ்யுவிக்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Mahindra SUV Sale Analysis: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுன் மாதத்தில் மஹிந்த்ரா நிறுவனம் 60 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
மஹிந்த்ரா எஸ்யுவி விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மாதம் மஹிந்த்ரா நிறுவனம் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் விற்பனையான 41 ஆயிரத்து 108 யூனிட்களுடன் ஒப்பிட்டால், கடந்த ஜுன் மாதத்தில் 47 சதவிகிதம் விற்பனை அதிகரித்து 60 ஆயிரத்து 393 யூனிட்களின் விற்பனை பதிவாகியுள்ளன. கடந்த மே மாதத்தில் விற்பனையான 58,021 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, அதன் பாரம்பரிய மாடல்கள், காம்பாக்ட் மற்றும் மிட்சைஸ் எஸ்யுவிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்ததால் விற்பனை அளவும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மஹிந்த்ராவின் டாப் செல்லிங் எஸ்யுவி
நிறுவனம் சார்பில் அதிகம் விற்பனையாகும் மாடலாக ஸ்கார்பியோ, தார், XUV 3XO மற்றும் பொலிரோ ஆகியவை முன்னணியில் இருக்க, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட XUV 7XO மற்றும் XEV 9S போன்ற மாடல்கள் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தின. 14,097 யூனிட்கள் விற்பனையாகி, ஜுன் மாதத்தில் மஹிந்திராவின் அதிகம் விற்பனையான மாடலாக ஸ்கார்ப்பியோ லைன்-அப் தொடர்கிறது. ஜூன் 2025-ல் 12,740 யூனிட்களாக இருந்த விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிட்டால் 11 சதவிகிதம் அதிகரித்தாலும், மே மாதத்தில் விற்பனையான 15,774 யூனிட்களுடன் ஒப்பிட்டால் விற்பனை 11 சதவிகிதம் சரிந்துள்ளது.
மஹிந்த்ராவின் முன்னணி எஸ்யுவிக்கள்:
தார், 10,669 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது 12 சதவிகித வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்ததோடு, மாதாந்திர அடிப்படையில் ஏறக்குறைய மாற்றமின்றியும் இருந்தது. மஹிந்திராவின் மாதாந்திர முன்னேற்றத்திற்கு XUV 3XO மாடலே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது. இந்த காம்பாக்ட் எஸ்யூவி, 42 சதவிகித வருடாந்திர வளர்ச்சியுடன் 10,000 யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லைக் கடந்தது. இதன் எலெக்ட்ரிக் மாடலின் வருகை முக்கிய பங்காற்றியுள்ளது. பொலிரோ தனது சீரான செயல்பாட்டைத் தொடர்ந்து 9,115 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது – இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 22 சதவிகிதமும், 2026 மே மாதத்தை விட 2 சதவிகிதமும் அதிகமாகும்.
மஹிந்திராவின் மின்சார எஸ்யுவிக்கள் எப்படி?
மஹிந்திராவின் சமீபத்திய எலெக்ட்ரிக் எஸ்யுவியான XEV 9S-ம், விற்பனைக்கு வந்த தொடக்க மாதங்களிலேயே ஊக்கமளிக்கும் வகையிலான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன் விநியோகம், மே மாதத்தில் 3,502 யூனிட்டுகளிலிருந்து ஜூன் மாதத்தில் 4,018 யூனிட்டுகளாக அதிகரித்து, மாதந்தோறும் 15 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் உடன்பிறப்பான XEV 9e, 2,006 யூனிட்டுகளைப் பதிவுசெய்தது – இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் சரிவைக் காட்டினாலும், மே மாதத்துடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. BE 6, 1,150 யூனிட்டுகளைப் பதிவுசெய்து ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் 4 சதவிகித சரிவையும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 27 சதவிகித வளர்ச்சியையும் காட்டியுள்ளது. மறுபுறம், XUV400 அதன் சரிவுப் போக்கைத் தொடர்கிறது. வெறும் 31 யூனிட்டுகளை மட்டுமே விற்பனை செய்து, ஜூன் 2025 உடன் ஒப்பிடும்போது 87 சதவிகித சரிவையும், மே மாதத்துடன் ஒப்பிடும்போது 76 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.
மஹிந்த்ரா எஸ்யுவி விற்பனை விவரம் - ஜுன் 2026
| கார் மாடல் | ஜுன் 2026 விற்பனை | ஜுன் 2025 விற்பனை |
| ஸ்கார்ப்பியோ | 14,097 | 12,740 |
| தார் | 10,669 | 9,542 |
| XUV 3XO | 10,063 | 7,089 |
| XUV 7XO | 9,244 | - |
| பொலேரோ | 9,115 | 7,478 |
| XEV 9S | 4,018 | - |
| XEV 9e | 2,006 | 2,808 |
| BE 6 | 1,150 | 1,203 |
| XUV 400 | 31 | 231 |
| மாரஸ்ஸோ | - | 17 |
| மொத்தம் | 60,393 | 41,108 |
ட்ரெண்டிங் செய்திகள்























