Hybrid Midsize SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேட் பெற உள்ள, நான்கு மிட்சைஸ் எஸ்யுவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அப்கிரேட் பெறும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எந்த காரை வாங்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்வதில், விலை முக்கிய பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் உள்நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக உள்ளன. இந்த பிரிவில் மாருதி சுசூகி, ஹுண்டாய், கியா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களது பெயரில் கிராண்ட் விட்டாரா, க்ரேட்டா, செல்டோஸ் மற்றும் எலிவேட் ஆகிய கார் மாடல்களை கொண்டுள்ளன. மிகவும் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவிக்களானது பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிலிருந்து மேலும் ஒருபடி முன்னேறி செல்லும் விதமாக தங்களது கார் மாடல்களில், வலுவான ஹைப்ரிட் அம்சத்தை அடுத்த 9 முதல் 12 மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், ஹைப்ரிட் இன்ஜின் அம்சத்தை பெற உள்ள கார் மாடல்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. புதிய தலைமுறை கியா செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷன்
தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா, 2026ம் ஆண்டின் முதல் பாதியில் தனது அடுத்த தலைமுறை செல்டோஸ் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் சார்பில் உள்நாட்டு சந்தையில் ஹைப்ரிட் இன்ஜின் அம்சம் கொண்ட முதல் கார் மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மாற்றத்தை காண்பதோடு, வலுவான ஹைப்ரிட் பவர்ட்ரெயினாக நேட்சுரலி ஆஸ்பிரேடட் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும் பெற உள்ளது. இந்த புதிய வேரியண்டானது அதன் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையிலான எடிஷனை காட்டிலும் கூடுதல் மைலேஜ் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், புதிய தலைமுறை கியா செல்டோஸின் டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டுமே ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது ஆகும். இந்த கார் மாடலின் விலை 12 லட்சத்திலிருந்து 21 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட் எடிஷன்
ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் கார் மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எலிவேட் கார் மாடலின் ஹைப்ரிட் எடிஷன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, சிட்டி ஹைப்ரிட் கார் மாடலில் உள்ள, அட்கின்சன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. புதிய தலைமுறை ஹுண்டாய் க்ரேட்டா ஹைப்ரிட் எடிஷன்
உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை க்ரேட்டா கார் மாடலானது 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. அப்போது, உள்நாட்டு சந்தையில் வலுவான ஹைப்ரிட் அம்சத்தை பெறும் ஹுண்டாயின் முதல் கார் என்ற பெருமையையும் க்ரேட்டா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரியுடன் இணைந்து ஹைப்ரிட் அம்சத்திற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஹைப்ரிட் வெர்ஷனின் விலை 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இதனிடையே, கடுமையான பிஎஸ் 7 தரநிலைகளின்படி, புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்ய தற்போதுள்ள பவர்டிரெய்னை மேம்படுத்த பெரும் செலவாகும் என்பதால், க்ரேட்டா எஸ்யூவியின் டீசல் இன்ஜின் நிறுத்தப்படலாம் என்று துறைசார் தெரிவிக்கின்றன.
4. மஹிந்திரா XEV 9e ஹைப்ரிட் எடிஷன்
மஹிந்திரா நிறுவனம் தனது முற்றிலும் மின்சார வாகனமான XEV 9e கார் மாடலை , ஹைப்ரிட் வெர்ஷனில் களமிறக்க தயாராகி வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய எஸ்யுவி ஆனது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆனது மின்சார மோட்டருடன் இணைக்கப்பட உள்ளது. இந்த வலுவான ஹைப்ரிட் அம்சமானது எஸ்யுவியின் மைலேஜை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. மஹிந்திராவின் XEV 9e கார் மாடலானது INGLO தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த பிளாட்ஃபார்மானது 1.2L ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ஹைப்ரிட் அமைப்பை ஏற்கும் வகையில், கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி ஏதும் இல்லாவிட்டாலும், 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய சந்தையில் XEV 9e ஹைப்ரிட் எடிஷன் அறிமுகப்படுத்தப்படலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI