Hyundai Tucson Discontinued: ஹுண்டாய் நிறுவனம் தனது முதன்மையான காரான டக்சன் மாடலின் உற்பத்தியை நிறுத்துவதற்கான காரணம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

டக்சன் கார் மாடலை நிறுத்திய ஹுண்டாய்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தனது முதன்மையான 5 சீட்டர் கார் மாடலான டக்சனின் விவரங்கள், ஹுண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், அந்த கார் மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நம்பப்பட்ட தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, ப்ராண்டின் ஃப்ளாக்‌ஷிப் எஸ்யுவி ஆனது அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு நிகரான நேரடி மாற்று கார் மாடல் ஏதும் தற்போதைக்கு பரிசீலனையில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

டக்சன் இந்தியாவில் அறிமுகமானது எப்போது?

தற்போதைய நான்காவது தலைமுறை டக்சன் கார் மாடலானது, 2022ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், எதிர்பார்த்தபடி ப்ரீமியம் எஸ்யுவி சந்தையில் டக்சனால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆரம்பகால சலுகை, புதிய காரின் மீதான வழக்கமான ஈர்ப்பால் முதலில் நல்ல விற்பனை பதிவானது. ஆனால், அதைதொடர்ந்து டக்சனின் விற்பனை படிப்படியாக சரிந்தது. இதனால், இந்திய சந்தையில் அந்த காரின் பயணம் மிகக்குறுகிய இடைவெளியிலேயே முடிவுக்கு வந்துள்ளது.

டக்சனை கண்டுகொள்ளாத இந்தியர்கள்

ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, டக்சனின் விலை ரூ.27.7 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான எஸ்யுவி பிரிவில் தடம் பதிக்க ஹுண்டாய் முன்னெடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். அதற்காக அட்டகாசமான அம்சங்கள், உயர் பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் தொழில்நுட்பம் என அனைத்தையும் கொண்டு ப்ரீமியம் காராக டக்சன் நிலைநிறுத்தப்பட்டது. ஏற்கனவே அந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் மாடல்களுக்கு சவால் அளிக்க தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும், இந்திய வாடிக்கையாளர்களால் இந்த கார் பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை.

சரிந்த டக்சன் காரின் விற்பனை:

2023ம் ஆண்டில் அதிகபட்சமாக டக்சனின் 3 ஆயிரத்து 692 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டிலேயே 58 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, வெறும் ஆயிரத்து 543 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின. 2025ம் ஆண்டில் அது மேலும் சரிந்து, தற்போது வரையில் வெறும் 650 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதனால் டக்சனின் விற்பனை கொரோனாவிற்கு முந்தைய சூழலுக்கு தள்ளப்பட்டது. 2016ம் ஆண்டு தொடங்கி 2024 வரையிலான 9 ஆண்டுகளில் ஒருமுறை கூட, டக்சனின் ஆண்டு விற்பனை 4 ஆயிரம் யூனிட்களை கடந்ததில்லை.

ஹுண்டாயின் டக்சன் தோற்றது எங்கே?

டக்சனின் வீழ்ச்சிக்கு தயாரிப்பு வலிமை இல்லாதது காரணம் அல்ல. சந்தையில் அது எங்கு அமர்ந்திருந்தது என்பதே காரணமாகும். BMW X1 மற்றும் Audi Q3 போன்ற சொகுசு SUV களுக்கு நெருக்கமான விலையை கொண்டிருந்தாலும்,  அந்த ப்ராண்ட்களுக்கு நெருக்கமான ஈர்ப்பை பெற்றிருக்கவில்லை. அதேநேரம், ஹூண்டாய் கார் பிரியர்களுக்கும் கூடுதல் விலையால் எட்டாக்கனியாக மாறியது. குறிப்பாக டக்சனின் 60 சதவிகித விலையிலேயே அது கொண்டிருக்கும் 90 சதவிகித அம்சங்களை தன்னகத்தே பெற்று க்ரேட்டா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் கூடுதல் பணத்தை டக்சன் மீது செலவழிக்க பொதுமக்கள் விரும்பவில்லை.

உண்மையில், இந்திய SUV சந்தை ஒரு தெளிவான பயணத்தை கொண்டுள்ளது. க்ரேட்டாவின் விலைப்பட்டியலுக்கு மேலே நிலவும் பிரிவில்,  தேவையானது குறைவாகவே உள்ளது. ஜீப் மெரிடியன் , ஃபோக்ஸ்வாகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் போன்ற மாடல்கள் அனைத்தும் குறுகிய, குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே விற்பனையாகின்றன.  முற்றிலும் நாக்ட் டவுன் (CKD) செய்யப்பட்ட பாகங்களாக கொண்டுவரப்பட்டு, அசெம்பிளி செய்யப்படுவதால் விலை அதிகமாக இருந்ததும் டக்சனின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. 

டக்சனின் வேரியண்ட்கள்:

டக்சன் கார் மாடலை ப்ளாட்டினம் மற்றும் சிக்னேட்சர் என இரண்டு வேரியண்ட்களில் ஹுண்டாய் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேடிக், 2.0 லிட்டர் டீசல் ஆட்டோமேடிக் மற்றும் 2.0 லிட்டர் டீசல் 4 வீல் ட்ரைவ் ஆட்டோமேடிக் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 


Car loan Information:

Calculate Car Loan EMI