Hyundai Developing Innova Rival: ஜப்பான் ப்ராண்டின் இன்னோவாவிற்கு போட்டியாக தென்கொரியாவின் ஹுண்டாய் எப்படிப்பட்ட காரை உருவாக்கி வருகிறது என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹுண்டாயின் இன்னோவா போட்டியாளர்..
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்பிவி பிரிவிலும் களமிறங்க உள்ளதாக, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹுண்டாய் நிறுவனம் அறிவித்தது. அதுமுதலே, இந்த பிரிவில் கோலோச்சி வரும் டொயோட்டா இன்னோவாவிற்கு போட்டியாக என்ன மாதிரியான வாகனத்தை, தென்கொரிய நிறுவனம் களமிறக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் தான் உள்நாட்டு சந்தைக்கான அந்த ப்ராண்டின் எம்பிவி தொடர்பான ஆரம்பகட்ட தகவல்கள் தற்போது வெளியாக தொடங்கியுள்ளன.
ஹுண்டாய் எம்பிவி - வடிவமைப்பு விவரங்கள்
இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்டு வரும் வாகனம் "Ki1i" என்ற கோட்நேமில் அழைக்கப்படுகிறதாம். மேலும், ஐந்தாம் தலைமுறை சாண்டா ஃபே-யின் N3 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை சொரெண்டோவிற்காக இந்த ப்ளாட்ஃபார்மை ஏற்கனவே உள்நாட்டில் தயாரித்துள்ளது. இது பல பாகங்களை எளிதாகப் பெற ஹுண்டாய்க்கு வழிவகுக்கிறது. மேலும் எம்பிவி-யை விரைவாக உருவாக்கவும், மேம்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், போட்டித்தன்மை வாய்ந்த விலையில் அறிமுகப்படுத்தவும் உதவுகிறது.
ஹுண்டாய் எம்பிவி - பவர்ட்ரெயின் விவரங்கள்
கியா நிறுவனம், சொரெண்டோவை 2.2-லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின் மற்றும் 1.6-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஹைப்ரிட் சிஸ்டம் என இரண்டு ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது. ஹுண்டாய் நிறுவனம், டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸிற்குப் போட்டியாக தனது எம்பிவியை நிலைநிறுத்த விரும்பினால், அதன் விலையை குறைந்தபட்சம் சுமார் ரூ. 8 லட்சம் குறைத்து, ஏறத்தாழ ரூ. 20 லட்சமாக நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்த இன்ஜின் ஆப்ஷன்கள் ஹுண்டாயின் புதிய எம்பிவியில் இடம்பெற வாய்ப்பில்லை.
மாறாக வென்யு, க்ரேட்டா மற்றும் அல்கசார் கார்களில் உள்ள 1.5-லிட்டர் U2 CRDi டர்போசார்ஜ்ட் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை, Ki1i காரில் ஹுண்டாய் வழங்கக்கூடும். இருப்பினும், இந்த இன்ஜின், குறைந்தபட்சம் அதன் தற்போதைய ட்யூனிங் நிலையில்—85 kW (114 hp) மற்றும் 250 Nm—ஒரு முறையான மூன்று-வரிசை இருக்கை மாடலுக்குப் போதுமானதாக இருக்காது. மேலும், வென்யு, க்ரேட்டா மற்றும் அல்கசார் கார்களில் உள்ள 117.5 kW (158 hp) மற்றும் 253 Nm டார்க்கை உருவாக்கும் 1.5-லிட்டர் டர்போசார்ஜ்ட் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும், ஹைப்ரிட் எடிஷனுடன் சேர்த்து அந்த நிறுவனம் வழங்கக்கூடும்.
ஹுண்டாய் எம்பிவி - அம்சங்கள், வசதிகள்
இந்தியாவை நேரடி இலக்காக கொண்ட ஹுண்டாய் எம்பிவி, 2+3+2 என ஏழு இருக்கைகள் கொண்ட வேரியன்ட் மற்றும் 2+2+2 என ஆறு இருக்கைகளை கொண்ட வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம். இந்த மாடலை 19-இன்ச் அலாய் வீல்கள், ஸ்மார்ட் பவர் டெயில்கேட், முதல் மற்றும் இரண்டாம் வரிசை காற்றோட்ட இருக்கைகள், இரட்டை வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 9.9-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 14.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, டூயல்-பேனல் பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா சிஸ்டம் மற்றும் லெவல் 2+ ADAS போன்ற அம்சங்களுடன் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீடு எப்போது?
ஹுண்டாய் Ki1i, 2029-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். அதற்கு முன்னதாக, தென் கொரியாவில் உருவாக்கப்பட்டு வரும் ஒரு புதிய ஆஃப்-ரோட் வகை எஸ்யுவி, 2028-ஆம் ஆண்டில் அல்கசாரின் வாரிசாக இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI