Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Hyundai Creta: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்களின் கிங் ஆக ஆதிக்கம் செலுத்தி வரும் க்ரேட்டா மாடலுக்கு, ஜுன் மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Hyundai Creta: ஹுண்டாய் க்ரேட்டாவின் இன்ஜின் மற்றும் மின்சாரம் என இரண்டு எடிஷன்களுக்கும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹுண்டாய் க்ரேட்டாவிற்கு சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், ஹுண்டாய் க்ரேட்டா மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் உள்நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யுவி ஆகவும் திகழ்கிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்த எஸ்யுவியின் முதல் தலைமுறை உள்நாட்டில் அறிமுகமாகி, 10 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில், தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய், உள்ளூர் சந்தையில் க்ரேட்டா மாடலுக்கு ஜுன் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்க்ரேப்பேஜ் ஆஃபர்ஸ் மற்றும் அரசு ஊழியர்கள் அல்லது கார்ப்ரேட் சலுகைகள் ஆகியவை அடிப்படையிலான தள்ளுபடிகளை பயனாளர்கள் பெறலாம்.
க்ரேட்டா இன்ஜின் எடிஷனுக்கான சலுகை விவரங்கள்:
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலான க்ரேட்டா, ரூ. 1 லட்சம் வரையிலான மொத்த தள்ளுபடிகளுடன் கிடைக்கிறது. இதில் ரூ. 35,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ. 50,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்/ஸ்க்ரேப்பேஜ் பலன்கள் மற்றும் ரூ. 15,000 மதிப்பிலான அப்கிரேட் ஆஃபர் ஆகியவை அடங்கும். அரசு ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு கூடுதலாக ரூ. 3,000 கார்ப்பரேட் சலுகையும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் சலுகைகள் அடிப்படை மாடலான E ட்ரிம்மிற்குப் பொருந்தாது.
E கிரேடைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறலாம், இது SUV-யின் மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கும் வழங்கப்படும் ரூ. 35,000 ரொக்கத் தள்ளுபடியை விடக் குறைவாகும். பெட்ரோல் வேரியன்ட்களுக்கு வழங்கப்படும் ரூ. 50,000 ஸ்க்ரேப்பேஜ் சலுகையுடன் ஒப்பிடும்போது, டீசல் வேரியன்ட்களுக்கு ரூ. 5,000 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஹூண்டாய் க்ரேட்டாவின் விலை ரூ. 10.90 முதல் 19.91 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நீள்கிறது.
க்ரேட்டா மின்சார எடிஷனுக்கான சலுகை விவரங்கள்:
க்ரேட்டா மின்சார எடிஷனை பொறுத்தவரை, ஜுன் மாதத்தில் ரூ. 85,000 வரையிலான ஒட்டுமொத்தப் பலன்கள் கிடைக்கின்றன. வாங்குபவர்களுக்கு ரூ. 15,000 வரையிலான நேரடித் தள்ளுபடியும், சுமார் ரூ. 35,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் பலன்களும் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த முழு மின்சார SUV-யை வாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, ஜூன் 2026-ல் ரூ. 20,000 கார்ப்பரேட் சலுகைகளும், ரூ. 15,000 மதிப்பிலான அப்கிரேட் சலுகையும் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரேட்டா மின்சார காரின் விலை ரூ. 18.02 லட்சம் முதல் ரூ. 23.67 லட்சம் வரை நீள்கிறது. க்ரேட்டாவின் இன்ஜின் மாடல் கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், மாருதி விக்டோரிஸ், கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. அதே வேளையில் க்ரேட்டா EV மாடலானது மாருதி இ-விட்டாரா, மஹிந்திரா BE 6, டாடா கர்வ் EV, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் VF6 ஆகியவற்றிடம் இருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
ஹுண்டாயின் மற்ற கார்களுக்கான சலுகை:
க்ரேட்டா மட்டுமின்றி ஹுண்டாயின் வெர்னா மாடலுக்கு ரூ.95,000, க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ.78,000, அல்காசர் மாடலுக்கு ரூ.75,000, ஐ20 மாடலுக்கு ரூ.63,000, எக்ஸ்டர் மாடலுக்கு ரூ.43,000, ஆரா மாடலுக்கு ரூ.25,000 மற்றும் வென்யூ மாடலுக்கு ரூ.5,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளம் ஜுன் மாதத்தில் கிடைக்கின்றன. அதாவது ப்ராண்ட் சார்பில் அதிகம் விற்பனையாகும் க்ரேட்டா காருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























