Hyundai Creta 2024: ஹுண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா ஃபேஸ்லிப்ட் மாடலின் தொடக்க விலை, இந்திய சந்தையில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Hyundai Creta 2024:


மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இந்திய சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும், கிரேட்டா மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை 10 லட்சத்து 99 ஆய்ரத்து 900 ரூபாயாகவும், டாப் எண்ட் வேரியண்டின் விலை 19 லட்சத்த்து 99 ஆயிரத்து 900 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அறிமுக சலுகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலையானது, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்டுள்ள இந்த மாடலானது இந்திய சந்தையில்,  கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோல்க்ஸ்வாகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் டாடா கர்வ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


பவர்டிரெயின் விவரங்கள்:


ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டில் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் (115PS மற்றும் 144Nm), 1.5 லிட்டர் Kappa Turbo GDi பெட்ரோல் (160PS மற்றும் 253Nm) மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் (116PS மற்றும் 250Nm) ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதில் 1.5-லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜின் ஆனது 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது IVT ஆட்டோமேடிக டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. 1.5-லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் இன்ஜின் ஆனது 7-ஸ்பீட் DCT ஆட்டோமேடிக் மற்றும் 1.5-லிட்டர் U2 CRDi டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


மைலேஜ் விவரம்:



  • 1.5-லிட்டர் MPi பெட்ரோல் 6-speed மேனுவல் டிரான்ஷ்மிஷன் - 17.4kmpl

  • 1.5- லிட்டர் MPi பெட்ரோல் IVT - 17.7kmpl

  • 1.5-லிட்டர் Kappa Turbo GDi பெட்ரோல் 7-speed DCT - 18.4kmpl

  • 1.5-லிட்டர் U2 CRDi டீசல் 6-speed MT - 21.8kmpl

  • 1.5-லிட்டர் U2 CRDi டீசல் 6-speed AT - 19.1kmpl


வண்ண விருப்பங்கள்:


ரூஃப் ரேக்குகளை கொண்ட இந்த கார் 4,330 மிமீ நீளம், 1,790 மிமீ அகலம் மற்றும் 1,635 மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,610மிமீ நீளம் கொண்டது.  ரோபஸ்ட் எமரால்டு பேர்ல் (புதிய மற்றும் பிரத்தியேக), ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட் மற்றும் டைட்டன் கிரே ஆகிய 6 ஒற்றை நிறங்களில் இந்த கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதோடு,  கருப்பு கூரையுடன் கூடிய அட்லஸ் ஒயிட் வடிவத்திலும் டூயல்-டோன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.


வடிவமைப்பு விவரங்கள்:


உலகளாவிய வடிவமைப்பைக் கொண்டுள்ள புதிய கிரேட்டா ஃபேஸ்லிப்ட் மாடலானது, கருப்பு நிற குரோம் பாராமெட்ரிக் ரேடியேட்டர் கிரில் மற்றும் குவாட்-பீம் எல்.ஈ.டி முகப்பு விளக்குகளுடன் புதிய முன்பக்க தோற்றத்தை பெற்றுள்ளது. சிக்னேச்சர் ஹொரைசன் LED பொசிஷனிங் விளக்குகள் மற்றும் DRLகள் உள்ளன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்புறத்தில் புதிய சிக்னேச்சர் இணைக்கப்பட்ட LED டெயில்-லேம்ப்கள், புதிய டெயில்கேட் மற்றும் ஏரோடைனமிக் ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன. பம்ப்பர் புதியதாக இருந்தாலும், வாகனம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்களையே கொண்டுள்ளது.


தொழில்நுட்ப அம்சங்கள்:


ஒருங்கிணைக்கப்பட்ட 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் மல்டி-டிஸ்ப்ளே டிஜிட்டல் க்ளஸ்டர் கொண்ட புதிய டேஷ்போர்டு கவனத்தை ஈர்க்கின்றன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் புதிய இரட்டை மண்டல தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை வழங்குகிறது. டேஷ்போர்டில் புதிய ஏர்-கான் வென்ட்களும் உள்ளன.


வாய்ஸ்- கண்ட்ரோல் பனோரமிக் சன்ரூஃப், முன் வரிசை காற்றோட்டமான இருக்கைகள், ஓட்டுநர் இருக்கையை 8-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்வது, சுற்றுப்புற விளக்குகள், சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் மற்றும் எட்டு ஸ்பீக்கர்களுடன் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. அதாவது, க்ரெட்டா 2024 ஃபேஸ்லிப்ட்டில் ஸ்மார்ட்சென்ஸ் லெவல் 2 ADAS அம்சங்கள் உள்ளன. 


பாதுகாப்பு அம்சங்கள்:


பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, கிரேட்டா ஃபேஸ்லிப்ட்டில் 36 நிலையான பாதுகாப்பு அம்சங்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில்,  6 ஏர்பேக்குகள், 
அனைத்து இருக்கைகளுக்கும் 3 புள்ளி சீட் பெல்ட்கள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள்,  வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மையுடன் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு,  ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல்,  அவசர நிறுத்த சமிக்ஞை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சுற்றுப்புறக் காட்சி மானிட்டர், டெலிமாடிக்ஸ் சுவிட்சுகளுடன் கூடிய எலக்ட்ரோ குரோமிக் கண்ணாடி, 
ஆட்டோ ஹோல்டுடன் கூடிய மின்சார பார்க்கிங் பிரேக்,  முன் பார்க்கிங் சென்சார் மற்றும் குருட்டுப் பார்வை மானிட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.


பொழுதுபோக்கு அம்சங்கள்:


ஹூண்டாயின் புளூலிங்க் இணைப்புத் தொழில்நுட்பத்துடன் , க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், டோர் லாக்/திறத்தல், வாகன நிலை தகவல் (இன்ஜின், எச்விஏசி, கதவு, எரிபொருள் நிலை போன்றவை) மற்றும் வாகன எச்சரிக்கைகள் (ஜியோ-வேலி) போன்ற 70 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. உள்ளமைக்கப்பட்ட மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி JioSaavn Pro-விற்கான ஒரு வருட இலவச சந்தையும் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI