Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
Hyundai Bayon SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி ஃப்ராங்க்ஸ் மற்றும் டாடா பஞ்ச் மாடல்களுக்கு போட்டியாக, ஹுண்டயின் பேயோன் மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Hyundai Bayon SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டயின் பேயோன் மாடலானது பெட்ரோல், டர்போ மற்றும் சிஎன்ஜி பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை பெற உள்ளது.
ஹுண்டாய் பேயோன் எஸ்யுவி:
ஹுண்டாய் நிறுவனமானது அடுத்த தலைமுறை பேயோன் மாடலை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் இந்த சப் 4 மீட்டர் எஸ்யுவி ஆனது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, எஸ்யுவியில் பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளன. அதன்படி, பெட்ரோல், டர்போ பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி வசதியும் வழங்கப்படுமாம். இதன் வாயிலாக 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஹுண்டாய் எஸ்யூவி-களில் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கும் ஒரு சிலவற்றில் இதுவும் ஒன்றாக அமைகிறது.
பேயோன் எஸ்யுவி - கூடுதல் உயரம்
சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள தற்போதைய எடிஷனுடன் ஒப்பிடுகையில், புதிய பேயான் பெரிய மற்றும் உயரமான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இது நீளமான வீல்பேஸ் மற்றும் அகலமான டிராக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேபினுக்குள் அதிக இடவசதியை உருவாக்கும். இந்த எஸ்யூவி ஸ்கொயரான கூரை அமைப்பு, சற்றே பெட்டி போன்ற அளவீடுகள் மற்றும் நிமிர்ந்த தோற்றம் ஆகியவற்றுடன், ஒரு எஸ்யூவி-க்கே உரிய வடிவத்தையும் கொண்டிருக்கும். வடிவமைப்பு அம்சங்களில், முன்புறத்திலும் பின்புறத்திலும் கனெக்டட் லைட் பார்ஸ், ஃப்ளாட்டர் ரூஃப் மற்றும் மேலும் கம்பீரமான தோற்றத்திற்காக உயரும் இடுப்புப் பகுதி ஆகியவை இடம்பெறலாம். உயர் ரக மாடல்களில் டைமண்ட்-கட் அலாய் வீல்களும் வழங்கப்படலாம்.
ஸ்போர்டியர் எந்லைன் வேரியண்ட்
ஹுண்டாய் நிறுவனம் ஸ்போர்ட்டியான ஸ்டைலிங்குடன் கூடிய பேயோன் என்-லைன் மாடலை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வேரியண்ட்டில் சாடின் சில்வர் நிற முன்பக்க பம்பர், கீழ்பக்க ஏர் டேம் மற்றும் மிகவும் ஆக்ரோஷமான கிரில் ஆகியவற்றை பெறலாம். தோற்றம் தொடர்பான மற்ற அப்க்ரேட்களில் பெரிய டூயல் டோன் அலாய் வீல்கள், மேட் பிளாக் நிற கீழ் பாடி டிரிம், பளபளப்பான கருப்பு நிற டோர் ஆக்சென்ட்கள் மற்றும் கருப்பு நிற ரூஃப் ரெயில்கள் ஆகியவை அடங்கும். ஸ்டாண்டர்ட் பேயோன் மாடலைப் போலல்லாமல், என்-லைன் மாடலில் இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுண்டாய் பேயோன் - நவீன அம்சங்கள்
புதிய ஹுண்டாய் வென்யூவைப் போலவே இதன் கேபின் வடிவமைப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஓட்டுநரின் டிஸ்ப்ளேவிற்காக இரட்டை 12.3-இன்ச் ஸ்க்ரீன்கள் இடம்பெறும். கூடுதல் அம்சங்களாக, மல்டி-ஃபங்ஷனல் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவற்றுடன், பிற மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறலாம்.
ஹுண்டாய் பேயோன் - இன்ஜின் வசதிகள்:
ஸ்டாண்டர்ட் பேயோன் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கூடிய 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் மைலேஜிற்காக டூயல்-சிலிண்டர் சிஎன்ஜி வெர்ஷனும் வழங்கப்படும். டாப் வேரியண்ட்களில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இடம்பெறலாம். இது அதிக சக்தியையும் ஸ்போர்ட்டியான ஓட்டுநர் அனுபவத்தையும் வழங்கும். பெட்ரோல், டர்போ மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களின் இந்தக் கலவையானது, வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகளை கொண்ட வாகன ஓட்டிகளையும் பேயோனை நோக்கி ஈர்க்க உதவும் என கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலும் எரிபொருட்களின் விலை உயர்வால் சிஎன்ஜி வேரியண்ட்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு எப்படி? விலை என்ன?
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய சந்தையில் இந்த கார் அறிமுகமாகும்போது, சப்-4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி ஃப்ராங்க்ஸ் மற்றும் டாடா பஞ்ச் மாடல்களுடன் நேரடியாக மோத உள்ளது. ஐரோப்பா சந்தையில் 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டிருக்கிறது. ஆனால், உள்ளூர் பி-பிரிவு வரிச் சலுகைகளுக்குத் தகுதிபெறும் வகையில், இந்தியாவில் வரவிருக்கும் பேயான் கிராஸ்-ஓவர் எஸ்யுவி ஆனது 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தையே கொண்டிருக்குமாம். இதனால் 8 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான விலை வரம்புக்குள் இந்த கார் அடங்கக் கூடும். பிரதான போட்டியாளர்களான ஃப்ராங்க்ஸ் ரூ.6.85 லட்சம் தொடங்கி ரூ.11.98 லட்சம் வரையிலும், டாடா பஞ்ச் ரூ.5.65 லட்சம் தொடங்கி ரூ.10.60 லட்சம் வரையிலான விலை வரம்பிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























