Car Retrofitting: பெட்ரோல், டீசல் விலைகளை தாங்க முடியாத வாகன உரிமையாளர்கள் எப்போதும் மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் CNG, LPG பக்கம் சாய்ந்தவர்கள், இப்போது அனைவரின் கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் புதிய எலெக்ட்ரிக் கார் வாங்குவது அனைவருக்கும் சாத்தியமாக இருக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் பழைய பெட்ரோல் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றிக்கொள்ளலாம். இந்த முறையே 'ரெட்ரோஃபிட்டிங்'.
ரெட்ரோஃபிட் என்றால் என்ன?
உற்பத்தி நேரத்தில் வாகனத்தில் இருந்த இன்ஜின் அல்லது எரிபொருள் அமைப்பை அகற்றி. அதன் இடத்தில் புதிய பேட்டரி மற்றும் மோட்டார் தொழில்நுட்பத்தை பொருத்துவதை ரெட்ரோஃபிட்டிங் என்று அழைக்கப்படுகிறது. முன்பு பெட்ரோல் கார்களுக்கு CNG கிட்கள் பொருத்தப்படுவதை பார்த்தோம். இப்போது அதேபோல் எலெக்ட்ரிக் கிட்களை பொருத்திக்கொள்ளும் மாற்று போக்கு நடக்கிறது.
இது யாருக்கு பயனளிக்கும்?
உங்கள் வாகனம் தினமும் குறைந்தது 50 கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓடினால் மட்டுமே ரெட்ரோஃபிட் செய்வது லாபகரமாக இருக்கும். சாதாரண காரை EV-ஆக மாற்றுவதற்கான ஆரம்ப செலவு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும். அதனால் தனிப்பட்ட கார்களை விட தினமும் ஓடும் கேப்கள், டெலிவரி வாகனங்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.
வாகனத்தை மாற்றுவதற்கு முன் இவற்றைக் கவனிக்க வேண்டும்:
* உங்கள் வாகனம் குறைந்தது ஏழு முதல் எட்டு ஆண்டுகள் பழையதாக இருந்து, நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே EV-ஆக மாற்ற வேண்டும்.
* கார் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும். மேலும் 10-15 ஆண்டுகள் சாலையில் ஓடும் திறன் உள்ளதா, இல்லையா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
* கார் ஃப்ரேம், சேசிஸ் வலுவாக உள்ளதா? இல்லையா? என்பதை வொர்க்ஷாப்பில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
* உங்கள் வாகன மாடலுக்கு ARAI (Automotive Research Association of India) அங்கீகரித்த EV கிட் பொருந்துமா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.
* எதிர்காலத்தில் உங்கள் பழைய வாகன உதிரிபாகங்கள் கிடைக்குமா, இல்லையா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
மாற்று செயல்முறை எப்படி நடக்கிறது?
* உங்கள் காரை EV-ஆக மாற்ற விரும்பினால் முதலில் RTO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். RC, லைசென்ஸ் மற்றும் பொருத்தப்படவுள்ள எலெக்ட்ரிக் கிட் விவரங்களை சமர்ப்பித்து முன்அனுமதி பெற வேண்டும்.
* அனுமதி கிடைத்த பிறகு ARAI, CIRT, ACAT அல்லது GARC போன்ற நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ ரெட்ரோஃபிட்டிங் மையங்களில் மட்டுமே கிட் பொருத்திக்கொள்ள வேண்டும். அங்கீகாரம் இல்லாத கிட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.
* கிட் பொருத்தப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனம் வாகனத்தின் செயல்திறன், பிரேக்குகள், எலெக்ட்ரானிக்ஸ் அமைப்புகளைச் சரிபார்த்து இன்வாய்ஸுடன் கூடிய ஃபிட்னஸ் சான்றிதழை வழங்கும்.
இந்த சான்றிதழுடன் வாகனத்தை மீண்டும் RTO அலுவலகத்துக்கு கொண்டு சென்று பரிசோதனையை முடிக்க வேண்டும். அப்போது, அந்த வாகனத்தின் RC-யில் எரிபொருள் வகையை EV-ஆக மாற்றி எண்டார்ஸ்மெண்ட் வழங்கப்படும். அதன் பிறகே காப்பீடும் பொருந்தும்.
டிரைவர்கள் தினமும் மணிக்கணக்கில் வாகனத்தை ஓட்டி, நூற்றுக்கணக்கான முறை கியர்களை மாற்றுகிறார்கள். வாகனத்திலிருந்து வரும் அதிர்வுகள், கியர் மாற்றங்களால் சில வகையான உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். EV-ஆக மாறினால் அதிர்வுகளும், சத்தங்களும் இருக்காது. மாசு குறைவதோடு மட்டுமல்லாமல் உடல்நலமும் நன்றாக இருக்கும். பழைய வாகனத்தை ஒதுக்கி வைக்காமல் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றிக்கொள்வது சுற்றுச்சூழலுக்கும், செலவுக்கும் இரண்டிற்கும் நன்மை தரும்.
Car loan Information:
Calculate Car Loan EMI