Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
ஹோண்டா நிறுவனத்தின் Honda Livo பைக்கில் சென்னையில் இருந்து விருதுநகர் வரையிலான 484 கிலோமீட்டர் பயணத்தின் ஓர் விரிவான அனுபவத்தை கீழே காணலாம்.

பொதுவாக, நெடுந்தூர பயணங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் என்பது ஏற்புடையதாக இருக்காது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத சூழல் அல்லது தனிப்பட்ட விருப்பங்களுக்காக நெடுந்தூர பயணங்களுக்கு இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது.
மைலேஜ் பைக்கில் நெடுந்தூர பயணம்:
நெடுந்தூர பயணங்களுக்காக நெடுஞ்சாலையில் செல்வதற்காக இந்தியாவில் பல்வேறு இரு சக்கர வாகனங்கள் அதிக சிசி திறனுடன் உள்ளது. ஆனால், நல்ல மைலேஜ் தரும் பட்ஜெட் விலையில் உள்ள இரு சக்கர வாகனத்தில் நெடுந்தூர பயணம் எப்படி இருக்கும் என்பதை கீழே விரிவாக காணலாம்.
Honda Livo:
இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. இவர்களின் பல்வேறு பைக்குகளுக்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவர்களின் சிறந்த மைலேஜ் தரும் பைக்கில் ஒன்று Honda Livo. இந்த பைக்கில் சென்னை முதல் விருதுநகர் மாவட்டம் வரையிலான ஒரு நெடுந்தூர பயண அனுபவமே இந்த கட்டுரை.
110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட, 70 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்ட ஒரு குடும்ப பயன்பாட்டிற்கான இரு சக்கர வாகனம் இது. இந்த Honda Livo பைக்கில் காலை 6.30 மணிக்கு சென்னையின் ஆலந்தூரில் இருந்து தொடங்கிய பயணம் காலை நேரத்தில் பெரியளவு போக்குவரத்து நெருக்கடி இல்லாத சென்னை சாலையை கடப்பது எளிதாகவே இருந்தது.
சிரமம் இல்லாமல் தொடங்கிய பயணம்:
எந்த சிரமும் இல்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் கடந்த வெளியூர் செல்லும் பேருந்துகள், கார்களுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணம் தொடர்ந்தது. 70 கிலோமீட்டர் வேகத்திலே தொடர்ந்த இந்த பயணத்தில் உணவு இடைவேளைக்காக காலை 8.30 மணிக்கு ஒரு சிறிய இடைவேளை.
நல்ல மைலேஜ் தரும் பைக்குகளான பஜாஜ் ப்ளாட்டினா, ஸ்ப்ளண்டர் போன்ற வாகனங்களுக்கு சவால் தரும் இந்த Honda Livo-வில் நெடுந்தூரம் செல்லும்போது அதன் எஞ்ஜினில் இருந்து வெப்பம் வெளியேறுவது வழக்கம். அதே வெப்பம் இந்த பயணத்திலும் உணரப்பட்டது. ஆனாலும், அது பயணத்திற்கு எந்த சிரமத்தையும் உருவாக்கவில்லை.
எஞ்ஜின் வெப்பம்:
இந்த Honda Livo பைக்கின் இருக்கையும், இதன் முன்பக்கம் இருந்த டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் இருந்த ஹைட்ராலிக் சஸ்பென்சன் இந்த நெடுந்தூர பயணத்தில் முதுகுவலி, களைப்பு தெரியாமல் இருப்பதற்கு மிகவும் பலமாக இருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு எஞ்ஜின் வெப்பத்தை கருதி ஒரு 80 கிலோ மீட்டர் அல்லது 100 கிலோமீட்டர் இடைவேளைக்கு ஒரு சிறிய இடைவெளி எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனாலும், காலை 6.30 மணிக்கு சென்னையில் புறப்பட்டு காலை 11 மணிக்கு உளுந்தூர்பேட்டையை அடைந்தாகிவிட்டது.
பெட்ரோல் எவ்வளவு ஆச்சு?
இதில் பல இடங்களிலும் 60 கிலோமீட்டர் வரையிலான வேகம் ஹோண்டா லிவோவின் டிஜிட்டல் டிஸ்ப்ளே-வில் எகானமி வேகத்திலே செல்வதை காட்டியது. கடும் வெயில், சிற்றுண்டி காரணமாக ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் 12 மணிக்கு மீண்டும் தொடங்கி பெரம்பலூரை 1 மணிக்கு இந்த பயணம் எட்டியது.
108 ரூபாய் லிட்டருக்கு பெட்ரோல் விற்கும் சூழலில், சென்னை ஆலந்தூரில் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் இரண்டு கோடுகள் இருக்கும்போது பெரம்பலூரின் வேப்பூரில் மீண்டும் 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடப்பட்டது. பெரம்பலூரில் இருந்து மீண்டும் 3 மணிக்கு தொடங்கிய பயணம் மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கியது.
அதிகபட்ச வேகம்:
மதிய நேர வெயில் மட்டுமே இந்த தருணத்தில் சவாலாக இருந்தது. சென்னை - திருச்சி சாலையில் காணப்பட்ட அளவிற்கு வாகனங்கள் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் காணப்படவில்லை. இதனால், இந்த நெடுஞ்சாலையில் 86 கிலோமீட்டர் வேகம் வரை Honda Livo பைக்கில் எளிதாக செல்ல முடிந்தது.
குறிப்பாக, கொட்டாம்பட்டி அருகே உள்ள நெடுஞ்சாலையில் இயற்கையின் அழகாய் திகழும் அந்த மலைகளை ரசிப்பதற்காகவே அந்த நெடுஞ்சாலையில் மெதுவாகவே செல்லலாம் என்று தோன்றும். சிறிய இடைவேளை, எஞ்ஜின் வெப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து மதுரையை 6.30 மணிக்கு அடைந்தாகிவிட்டது. பின்னர், அங்கிருந்து விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு அருகே உள்ள அண்ணா நகருக்கு மதுரையின் புறவழிச்சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலில் சிக்கி அடுத்த 1 மணி நேரத்தில் வந்தாகிவிட்டது.
நல்ல தரமான சாலையும் இந்த பயணம் எளிதாக அமைந்ததற்கு காரணம் ஆகும். இந்த Honda Livo பைக்கில் 85 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்வது உகந்ததும் அல்ல. அவ்வாறு செல்லும்போது வாகனம் இலகுவாக செல்லவில்லை என்ற வித்தியாசத்தை உணர முடிகிறது.
களைப்பாக இருந்ததா?
யுபிஎஸ் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் கனெக்ஷன் வசதி, ஜிபிஎஸ் வசதி இல்லாவிட்டாலும் ஒரு சிறந்த நேர்த்தியான அனுபவத்தை இந்த Honda Livo அளித்தது. இதில் ஆச்சரியமான விஷயமாக அமைந்தது இந்த 484 கிலோமீட்டர் பயணத்தில் பயணத்தை முடித்துவிட முடியுமா? என்ற களைப்பும், தயக்கமும், உடல் அசதியும் ஏற்படாததே ஆகும். அந்த அளவிற்கு இந்த Honda Livo பைக் இந்த பயணத்திற்கு ஒத்துழைத்தது.
எஞ்ஜின் வெப்பத்தை தணிப்பதற்காக ஆங்காங்கே சில இடங்களில் நிறுத்திச் செல்ல வேண்டியது இந்த Honda Livo பைக்கில் அவசியமானதாகவும் உள்ளது. பெரம்பலூரில் சில காரணங்களுக்காக எடுத்துக்கொண்ட 2 மணி நேர இடைவேளையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பயணம் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளே நிறைவடைந்திருக்கும்
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்





















