Ford Motors AI Tech: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப, எதிர்பார்த்த அளவிலான வெற்றியை வழங்கவில்லை என ஃபோர்ட் மோட்டார்ஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் மனிதவளத்தை நாடிய ஃபோர்ட் மோட்டார்ஸ்
சர்வதேச அளவில் பல்வேறு பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தான் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம் தங்களது வேலைகளை எளிதில், குறைந்த செலவில் செய்து முடிக்கலாம் என நம்பி, வேலையில் இருந்து நீக்கிய பல முன்னாள் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஃபோர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மீண்டும் பணியமர்த்தியுள்ளதாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேடட் குவாலிட்டி சிஸ்டம் ஆகியவை எதிர்பார்த்த பலனை வழங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். மீண்டும் மனிதர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்கான பலனை ஏற்கெனவே சந்தித்து வருவதாகவும், முன்னணி பிராண்டுகளிடையேயான சமீபத்திய ஜேடி பவர் இனிஷியல் குவாலிட்டி ஆய்வில் ஃபோர்ட் முதலிடத்தைப் பிடிக்க உதவியதோடு, செலவுகளையும் குறைக்க உதவுவதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
புறக்கணிக்க நினைத்து அடி வாங்கிய ஃபோர்ட்
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் தனது செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேடட் குவாலிட்டி சிஸ்டம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், கடந்த மூன்று ஆண்டுகளில் முன்னாள் ஊழியர்கள் மற்றும் விநியோக நிறுவனங்களின் நிபுணர்கள் உட்பட சுமார் 350 மூத்த பொறியாளர்களை மீண்டும் பணியமர்த்தியுள்ளது. ஃபோர்ட் நிறுவனத்தின் நிர்வாகிகளின் கருத்தின்படி, அந்நிறுவனம் ஆட்டோமேடட் முறையை அளவுக்கு அதிகமாக நம்பியிருந்ததோடு, பல்வேறு வாகன உற்பத்தியில் பணியாற்றிய ஊழியர்களால் கட்டமைக்கப்பட்ட பல ஆண்டு கால பொறியியல் நிபுணத்துவத்தையும் புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஃபோர்ட் நிறுவனத்தின் வாகன ஹார்ட்வேர் பொறியியல் துணைத் தலைவர் சார்லஸ் பூன், செயற்கை நுண்ணறிவு தனியாக என்ன சாதிக்க முடியும் என்பதைத் தங்கள் நிறுவனம் மிகையாக மதிப்பிட்டுவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஃபோர்டின் பிரச்னையும்.. தீர்வும்..
மேம்பாட்டு செயல்முறையின் (Development Process) ஆரம்பத்திலேயே ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கண்டறியத் தேவையான நிஜ உலக அனுபவம் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் இல்லாமல் இருப்பதே முக்கியமான பிரச்னை என ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த இடைவெளியைச் சரிசெய்யவே மூத்த பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளதாம். இந்த அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் தற்போது இளம் ஊழியர்களுக்கு வழிகாட்டுவது, செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு மறுபயிற்சி அளிக்க உதவுவது, மற்றும் தரப் பிரச்சனைகள் தொழிற்சாலை தளத்தை அடைவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
AI-ஐ கைவிடுகிறதா ஃபோர்ட்?
பிரச்னைகள் அடையாளம் காணப்பட்டு இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கைவிடவில்லை என ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக அனுபவம் வாய்ந்த பொறியாளர்களிடமிருந்து சிறந்த தரவுகளை உள்ளீடு செய்வதன் மூலம் அந்தத் தொழில்நுட்பத்தை மேலும் புத்திசாலித்தனமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனராம். சிக்கலான நிலைகளைக் கண்டறியவும், பலதரபட்ட சூழ்நிலைகளின் கீழ் வாகன மென்பொருளை சோதிக்கவும் வடிவமைக்கப்பட்ட, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சரிபார்ப்பு சோதனைகளைச் சேர்த்துள்ளதாக ஃபோர்ட் தெரிவித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI