மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கான மானியத்தை குறைத்ததை தொடர்ந்து, அவற்றின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்த சலுகை:
அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை மற்றும் சுற்றுச்சூழல் மாசுவை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன. இதனிடையே, மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் நொக்கில், மத்திய அரசு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
அதன்படி, FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம், மின்சார இருசக்கர வாகனங்களில், இதுவரை ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தற்போது 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுவதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதோடு, மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 40 சதவிகித மானியமும் தற்போது 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு ஜுன் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
மானியத்தை குறைக்க காரணம் என்ன?
ஃபேம் 2 திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியிருந்த ரூ. 2 ஆயிரம் கோடி கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மானியத்தை ரத்து செய்வது உற்பத்தி சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ. 1500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி ஆகஸ்ட் மாத வாக்கில் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.
விலை அதிகரிக்க வாய்ப்பு:
உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதால், நிறுவனங்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதன் விளைவாக சந்தையில் மின்சார இருசக்க வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள மின்சார வாகன சந்தை, மேலும் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
சரிவில் மின்சார வாகன விற்பனை:
அரசாங்கத்தின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ஊடுருவலை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க உதவும் என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், கடந்த மார்ச் மாதத்தில் மாதாந்திர விற்பனையில் அதிகபட்சமாக 85,793 யூனிட்கள் விற்பனையாகின. ஆனால், மே மாதத்தில் தற்போது வரை சுமார் 39 ஆயிரம் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இந்த சூழலில் மானியம் குறைந்து விலை அதிகரித்தால், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI