அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலைக்கு மத்தியில், பொதுமக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அதோடு பல சொகுசு வாகன நிறுவனங்களும் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை இந்தியா மட்டுமின்றி  சர்வதேச அளவிலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


விற்பனையில் 305% உயர்வு:


இதுதொடர்பான அறிக்கையின்படி, 2021-ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 305% அதிகரித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் மொத்தமாக 9,95,319 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதில், 6,15,365 வாகனங்கள் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் ஆகும். மொத்தமாக பார்க்கும்போது 2021-ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 208 சதவிகிதம் உயர்ந்துள்ளது.  கொரோனாவிற்கு முன்னதாக 2019ம் ஆண்டில் வெறும் 1,63,458 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டில் இந்த விற்பனை 509 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான மொத்த இருசக்கர வாகனங்களில், மொத்த 4% மின்சார இருசக்கர வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓலா நிறுவனத்திற்கு முதலிடம்:


கடந்த ஆண்டில் மொத்தமாக 6,15,315 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், மாதத்திற்கு 51,276 வாகனங்களும், நாளொன்றிற்கு 1,685 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தான்  முதன்முறையாக 50 ஆயிரம் விற்பனையை கடந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஓலா நிறுவனம் 1,08,130 மின்சார இருசக்கர வாகனங்களை விற்று, மொத்த சந்தையில் 17.57% ஆக்கிரமித்துள்ளது. அதைதொடர்ந்து, ஒகினாவா நிறுவனமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது.


முன்னணியில் உள்ள நிறுவனங்கள்:


இந்த வரிசையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 96,906 மின்சார இருசக்கர வாகனங்களும், ஆம்பர் நிறுவனம் 79,592 மின்சார இருசக்கர வாகனங்களும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 51,192 மின்சார இருசக்கர வாகனங்களையும் விற்றுள்ளன. இதோடு,  டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 46,277 மின்சாரா இருசக்கர வாகனங்களும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 24,767 மின்சார இருசக்கர வாகனங்களையும் கடந்த ஓராண்டில் விற்றுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை, காலநிலை மாற்றம், மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு வழங்கி வரும் ஆதரவு ஆகிய காரணங்களால், எதிர்வரும் காலங்களில் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


 


 


 


Car loan Information:

Calculate Car Loan EMI