சீனாவின் முன்னணி சொகுசு கார் பிராண்டான டென்சா (Denza), தனது அதிவேக எலெக்ட்ரிக் காரான Z9 GT மாடலை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் D9 எலெக்ட்ரிக் MPV காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை என்ன?
Z9 GT காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.57 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ரூ.10 லட்சம் முன்பணத்துடன் தற்போது தொடங்கியுள்ளது. BYD நிறுவனத்தின் தற்போதைய டீலர்ஷிப்களில் இருந்து தனித்து, டென்சா கார்களுக்கென பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய நகரங்களில் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.
வெளிப்புற வடிவமைப்பு
'ஷூட்டிங் பிரேக்' (Shooting Brake) வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்தக் கார், 5,180 மி.மீ நீளமும், 1,990 மி.மீ அகலமும், 1,490 மி.மீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 3,125 மி.மீ ஆகும். முன்பகுதியில் LED Headlamps மற்றும் மேலே பொருத்தப்பட்ட LiDAR சென்சார் உள்ளது. கதவுகளோடு ஒட்டிய கைப்பிடிகள் (Flush-fitting door handles), பைரெல்லி (Pirelli) டயர்களுடன் கூடிய 20-இன்ச் அலாய் வீல்கள், பின்பகுதியில் மெல்லிய எல்.இ.டி டெயில்-லேம்ப்கள் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவை இதற்கு பிரீமியம் தோற்றத்தைத் தருகின்றன.
சிறப்பம்சம் என்ன?
இதில் உள்ள 'ரியர்-வீல் ஸ்டீயரிங்' (Rear-wheel steering) தொழில்நுட்பம் மூலம் பின்பக்க சக்கரங்களை 15 டிகிரி வரை திருப்ப முடியும். இதனால் குறுகிய இடங்களில் கூட இந்தக் கார் நண்டு போலப் பக்கவாட்டில் நகரவும் 360 டிகிரி கோணத்தில் சுழலவும் முடியும்.
உட்புற வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்
5 பேர் பயணிக்கக்கூடிய இந்த சொகுசு காரின் உட்புறம் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.டேஷ்போர்டில் 17.3-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன், முன் இருக்கை பயணிக்கு 13.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஓட்டுநருக்கு 13.2-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என மூன்று ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
20 ஸ்பீக்கர்கள் கொண்ட Devialet ஆடியோ சிஸ்டம் மற்றும் லெதர் சீட்கள் உள்ளன. முன் இருக்கைகள் மற்றும் பின்பக்க ஓர இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட், ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிகாக மூடிக்கொள்ளும் 'சாஃப்ட்-க்ளோஸ்' கதவுகள் மற்றும் பவர்டு டெயில்கேட் வசதியும் இதில் உண்டு.
பேட்டரி, செயல்திறன் மற்றும் வேகம்
இந்தக் காரில் முன்பக்கம் ஒன்றும், பின்பக்கம் இரண்டுமாக மொத்தம் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒன்றிணைந்து 1,156 bhp பவரையும், 1,210 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன. 4 சக்கரங்களுக்கும் (AWD) பவர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார், பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிப் பிடிக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ ஆகும்.
ரேஞ்ச்
இதில் உள்ள 122.5 kWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 670 கி.மீ வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிளக்-இன் ஹைப்ரிட் மாடலும் இருந்தாலும், இந்தியாவில் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
9 நிமிடத்தில் ஃபிளாஷ் சார்ஜிங்
இந்தக் காரின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் சார்ஜிங் வேகம். டென்சாவின் 1,500 kW ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம், தகுந்த சார்ஜிங் சூழலில் பேட்டரியை 10% முதல் 97% வரை வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். இது தவிர 11 kW ஏசி சார்ஜிங் வசதியும் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாரண்டி
முன்பக்க மற்றும் பின்பக்க ரேடார் சென்சார்களுடன் கூடிய ADAS தொழில்நுட்பம், 9 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் (ABS), 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி ஆகியவை உள்ளன. இந்தக் காருக்கு 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர் வாரண்டியை டென்சா நிறுவனம் வழங்குகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI