சூரிய ஒளியில் இயங்கும் அதர்லேப் சோலார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் ரேஞ்ச், வடிவமைப்பு மற்றும் விலை விவரம் என்ன என்று விரிவாகக் காணலாம்.

Continues below advertisement

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் சார்ஜிங் பிரச்சனைகளைத் தீர்க்க பல புதிய நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த அதர்லேப் (Otherlab) என்ற ஆராய்ச்சி நிறுவனம், சார்ஜ் செய்ய நேரடியாக பிளக்-இன் செய்ய வேண்டிய அவசியமில்லாத Lightfoot என்ற புதிய சோலார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் வழக்கமான மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

தனித்துவமாக உருவாக்கம்

இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு மற்ற வழக்கமான வாகனங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகவும் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத் தோற்றம் ஒரு கிளாசிக் ஸ்கூட்டர் மற்றும் பஸ்ஸை இணைத்தது போன்ற உறுதியான பாக்ஸி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் இரண்டு பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Continues below advertisement

இந்த சோலார் பேனல்கள் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான ஸ்டோரேஜ் பெட்டியின் கதவுகளாகவும் செயல்படும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கியில் ஹெல்மெட் மற்றும் பொருட்களை எளிதாக வைக்கலாம். சிறந்த பயண அனுபவத்திற்காக 10 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 கிலோ வரை எடையை சேமிக்கலாம்.

எவ்வளவு தூரம் பயணிக்கலாம்?

இதன் இயந்திரக் கட்டமைப்பில், 1.1 kWh பேட்டரி மற்றும் 750W திறன் கொண்ட இரண்டு டி.சி. மோட்டார்கள் உள்ளன. ரேஞ்ச் விவரங்களை பொறுத்தவரை, பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை தடையின்றி பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 32 கிலோமீட்டர் ஆகும்.

சார்ஜிங் எப்படி?

ஸ்கூட்டரை ஒரு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைத்தால், சோலார் பேனல்கள் மூலமாகவே 5 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கான சார்ஜ் தானாகவே ஏறிவிடும். மேலும், மேகமூட்டமான காலநிலைக்கு வீடுகளில் உள்ள பிளக் பாயிண்ட் மூலம் வெறும் 1.5 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தையில் அதர்லேப் லைட்ஃபுட் ஸ்கூட்டரின் விலை 4,995 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.4.75 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.

தனித்துவமான வடிவமைப்பு, சோலார் சார்ஜிங் வசதி மற்றும் அதிக பூட் ஸ்பேஸ் ஆகியவற்றுடன் உருவாகியுள்ள இந்த ஸ்கூட்டர் ஆட்டோமொபைல் துறையில் புதுமையான கண்டுபிடிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI